

உயிருடைய பூச்சிகளைத் தொகுத்து வைக்கும் அருங்காட்சியகமாக இன்செக்டாரியம் இருக்கிறது. இந்தியாவின் முதல் பூச்சியியல் அருங்காட்சியகம் இது. கோவை வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
கொசுத் தேனீ, நெல் அந்துப்பூச்சி, வெட்டுக்கிளி, சிலந்திகள், லேடிபேர்ட் வண்டு, தட்டான்கள் என ஏகப்பட்ட பூச்சிகள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தின் இன்னொரு புதுமை என்னவென்றால், நீர் பூச்சிகளும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதுதான்.
இந்தியாவில் உள்ள ஒன்றரை லட்சம் பூச்சி இனங்களில் வெறுமனே 80 ஆயிரம் பூச்சி வகைகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. வேளாண்மை ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பூச்சிகளுக்கான தேசியக் கழகத்தின் அருங்காட்சியகத்தில் 30 ஆயிரம் பூச்சி மாதிரிகள் மற்றும் 108 உயிருள்ள செல் சேகரிப்புத் தொகுப்புகள் உள்ளன. பல்லுயிர் சூழலையும், சுற்றுச்சூழலையும் பராமரிப்பதில் பூச்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. வண்ணத்துப் பூச்சிகளும், தேனீக்களும் மட்டுமே முக்கியமான பூச்சிகள் என்று மாணவர்கள் கருதுகின்றனர். ஆனால், அது சரியல்ல. இயற்கையில் வாழும் 98 சதவீதப் பூச்சிகள் பயனுள்ளவை.
பூச்சிகளைக் கவனிப்பதன் மூலம் பல்லுயிர் சூழலின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வது அவசியம். பூச்சிகள் தொடர்பான அறிவை ஊட்டச் சுவரொட்டிகள், ஸ்லைடு கண்காட்சிகளுக்கும் இன்செக்டாரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இவை உதவிகரமாக இருக்கும்.
வேளாண்மையைப் பாதிக்கும் பூச்சிகளை அழிப்பதற்கு இயற்கையில் வாழும் மற்ற பூச்சிகளையே பயன்படுத்த முடியும். பூச்சிகளைப் பயன்படுத்தித் தேவையற்ற பூச்சிகளைக் கொல்வதில்தான் எதிர்காலம் அடங்கியுள்ளது. பயிர்களைப் பாதிக்கும் ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்த விவசாயத்துக்கு உதவும் பூச்சிகளைப் பயன்படுத்தும் முறை விரைவில் வரும் என பூச்சியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.