வீதிகளில் அரங்கேறும் இதிகாசங்கள்... தமிழர்களின் தொன்மையான தெருக்கூத்துக் கலை!

இக்கலையில், மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களும் புராணக் கதைகளும் வண்ணமயமான நாடகங்களாக அரங்கேற்றப்படுகின்றன.
தெருக்கூத்து
Published on: 

நாடக அரங்கம் இல்லை; திரைச்சீலையும் இல்லை. வானத்தையே கூரையாகவும், தெருவையே மேடையாகவும் மாற்றி, ஆடல், பாடல், கதை சொல்வது என மக்களை மகிழ்விக்கும் அற்புதக் கலைதான் தெருக்கூத்து.

தெருக்கூத்து

சினிமா, தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்பே, நம் தமிழ் கிராமங்களில் இரவுப் பொழுதுகளை மகிழ்ச்சியால் நிரப்பி, மக்களின் மனங்களைக் கவர்ந்த பழமையான பாரம்பரியக் கலையாக இது திகழ்கிறது.

தமிழர்களின் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளில் தனித்துவமான இடத்தைப் பெற்றது தெருக்கூத்து. அந்த காலத்தில் விடிய விடிய நடத்தப்படும் கூத்துக் கலையில் ஈடுபடுபவர்களை கூத்தர், பாணர், பொருநர், விறலியர் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கிராமத் திருவிழாக்களிலும் கோவில் விழாக்களிலும் மக்களை ஒன்றுகூட்டி மகிழ்விக்கும் இக்கலையில், மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களும் புராணக் கதைகளும் வண்ணமயமான நாடகங்களாக அரங்கேற்றப்படுகின்றன.

வேத்தியல் கூத்து, பொதுவியல் கூத்து, சங்க கால வசைக் கூத்து, சமய வசைக் கூத்து, சமூக வசைக் கூத்து என பல வகைகளும் இதில் காணப்படுகின்றன. திறந்தவெளியில் மக்கள் சுற்றி அமர்ந்து பார்க்கும் வகையில் தெருக்கூத்து நடத்தப்படுகிறது.

இசைக்கருவிகள்

கலைஞர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப வண்ணமயமான ஆடைகள் அணிந்து, பெரிய கிரீடங்கள் சூடி, முக ஒப்பனையுடன் நாடகங்களை மேற்கொள்வர். பாடல்கள், உரையாடல்கள், நடன அசைவுகள் ஆகியவற்றின் மூலம் கதையை உயிரோட்டமாகச் சொல்லுகின்றனர். இசைக்கருவிகளும் நிகழ்ச்சிக்குச் சிறப்பூட்டுகின்றன.

தெருக்கூத்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதுடன், வீரம், ஒற்றுமை, நீதி, நேர்மை போன்ற நல்ல கருத்துகளையும் எளிமையான கிராமியப் பாடல்கள் மூலம் எடுத்துரைக் கிறது. நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது.

நவீன பொழுதுபோக்குகள் பெருகிவரும் இக்காலத்திலும் தெருக்கூத்து போன்ற பாரம்பரியக் கலைகளைப் போற்றி பாதுகாப்பது அவசியம். இக்கலையை அடுத்த தலைமுறையினருக்கும் அறிமுகப்படுத்தி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையைத் தொடர்ந்து வளர்ப்போம்.

X