

இதுவரை 30-க்கும் குறைவான ஆப்பிரிக்கர்களே நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள். அதிலும் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்களே அதிகம். மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்), நெல்சன் மண்டேலா, டெஸ்மாண்ட் டூடு, வங்காரி மாத்தாய் ஆகியோர் இடம்பெற்ற அந்த பெருமைமிகு பட்டியலில் அபியும் இணைந்தார்.
மேற்கு எத்தியோப்பியாவின் பெஷாஷா நகரில் 1976-ல் பிறந்தவர் அபி அகமது அலி. அன்றைய எத்தியோப்பிய அதிபர் மெங்கிஸ்டு ஹெய்ல் மரியத்தின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் இளம்பருவத்திலேயே பங்கேற்றார். அமைதி, பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார்.
ஒரோமோ ஜனநாயக கட்சியில் இணைந்ததன் மூலம் அரசியலில் பிரவேசித்து, 2010-ல் நாடாளுமன்ற உறுப்பினரானார். அவரது கட்சி ஆளும் கூட்டணியில் இருந்துவருகிறது. இவருக்கு முன்பு பிரதமராக இருந்த ஹைல்மரியம் டெசலங், இனக்கலவரத்தாலும் அதன் தொடர்ச்சியாக நடந்த மக்கள் போராட்டங்களாலும் பதவி விலகினார். இதனால் 2018-ம் ஆண்டு ஏப்ரலில் அபி அகமது அலி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் துணிச்சலான சீர்திருத்த நடவடிக்கைகள் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. முந்தைய ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை விடுவித்தார். நாடு கடத்தப்பட்டிருந்தவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்பும் சூழலை ஏற்படுத்தினார். எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிரான இணையதளங்கள், தொலைக்காட்சி அலைவரிசைகள் மீதான தடைகளை விலக்கினார். அமைச்சரவையில் சரி பாதி இடங்களை பெண்களுக்கு ஒதுக்கினார்.
எத்தியோப்பியாவிலிருந்து பிரிந்து சென்ற நாடான எரித்ரியாவுடனான எல்லைத்தகராறை, அந்நாட்டு அதிபருடன் மேற்கொண்ட ஓர் அமைதி ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு கொண்டு வந்தார். இதுவே அபிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருப்பதற்கு முக்கியக் காரணம்.