

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடிக்க முயலும்போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று விளக்குகிறார், எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல், உடல் உறுப்பு ஒன்று நீக்கப்பட்ட பெண்ணான அருணிமா சின்கா...
இந்த ஆண்டு, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில், வழக்கத்துக்கு மாறாக அதிகமான பேர் உயிரிழந்திருக்கிறார்களே?
எவரெஸ்டில் ஏறுவது ஒரு தொழில் அல்ல. அதை முதலில் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். எவரெஸ்ட் சிகரம் நோக்கி ஏறுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். தற்போது அங்கு மலையேறும் பலரும், மலையேற்ற வீரர், வீராங்கனைகள் அல்ல. அவர்கள் முறையான பயிற்சி பெற்றிருப்பதில்லை, அவர்களிடம் சரியான உபகரணங்களும் கிடையாது. எப்படியாவது எவரெஸ்ட் உச்சியை எட்டிவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது. பெயருக்கும் புகழுக்காகவும்தான் பலரும் எவரெஸ்ட் முயற்சி மேற்கொள்கிறார்கள். மாறாக இப்பெரும் சாதனைக்கு, ஒரு தீவிரம், அர்ப்பணிப்பு, எவரெஸ்ட் மீதான மரியாதை எல்லாம் வேண்டும். முக்கியமான விஷயம், இயற்கைக்கு மேலாக நம்மை நாம் கருதக்கூடாது. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த, முறையாகப் பயிற்சி பெறாத ஓர் இளைஞன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்றபோது நான் தடுத்தேன். அதையும் மீறி கடந்த 2017-ம் ஆண்டு மலையேறிய அவன், உயிரைப் பறிகொடுத்துவிட்டான்.
மலையேற்ற வீரர், வீராங்கனைகள் அலட்சியத்தால் உயிர் அபாயத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்களா?
முற்பகல் 11 மணி வரைதான், எவரெஸ்ட் மலையேற்றத்துக்கான நேரம். அதற்குப் பிறகு காலநிலை மேலும் மேலும் மோசமாகிக்கொண்டே செல்லும் என்பதால், அதன் பிறகான மலையேற்றம், தற்கொலை முயற்சிதான் என்பேன். ஆனால் இந்த ஆண்டு, நண்பகல் 1.30 மணிக்கெல்லாம் எவரெஸ்டில் ஏறச் சிலர் முயன்றதாகக் கேள்விப்பட்டேன். அங்கு மலையேறுவதற்கு வழிகாட்டும் வெளிநாட்டு வழிகாட்டிகள் இந்த விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு மலையேறுவதற்கு அனுமதிக்கவே மாட்டார்கள். ஆனால் நேபாளிய ஷெர்பா வழிகாட்டிகள் கொஞ்சம் நீக்குப்போக்காக இருப்பார்கள். மலையேறுவோருடன் அவர்கள் கூடவே இருப்பார்கள். ஆனால் யாராலும் எவரையும் இழுத்துச் சென்று எவரெஸ்ட் உச்சியில் சேர்க்கவோ, அங்கிருந்து இழுத்து வரவோ முடியாது. மலையேறும் பலர், அறிவுரைகளை காது கொடுத்துக் கேட்பதில்லை. நாங்கள் இதற்காக நிறைய செலவு செய்துவிட்டோம், எவரெஸ்ட் உச்சியை அடைந்தே தீரவேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பார்கள். சிலர் மடத்தனமாக சொல்வதைக் கேட்டாலே எரிச்சல் வரும். உதாரணத்துக்கு, நாங்கள் வெறுங்காலில் எட்டு மணி நேரத்தில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டப் போகிறோம் என்பார்கள் சிலர். அவர்கள், எவரெஸ்ட் பற்றியே ஏதும் அறியாமல் இருக்கிறார்கள் என்பதைத்தான் அது காட்டும். மலையைப் பற்றி அறியாமலே, எப்படி அதில் ஏற முடியும்?
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது எளிதாகிவிட்டதா? அதனால்தான் தற்போது அங்கு இவ்வளவு கூட்டமா?
முதன்முதலில் எவரெஸ்ட் எட்டப்பட்ட 1953-ம் ஆண்டைப் போலவேதான் இன்றும் இமயமலை அதே அளவு பெரிதாகவும், மலையேற்றம் கடினமாகவும் இருக்கிறது. ஆனால் தற்போது நல்ல மலையேற்ற உபகரணங்கள் கிடைக்கின்றன. ஆனால் கயிறு போன்ற ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். ஓர் ஒற்றைக் காலுறை கூட முக்கியமானதுதான். மலையேற்றத்தின் அடிப்படை விஷயங்களும் மாறுவதில்லை. முறையான பயிற்சியின்றி மலையில் முன்னேறவே முடியாது. மலை ஏறுவோர், உடல்ரீதியாக மட்டுமின்றி, மனரீதியாகவும் வலுவாக இருக்க வேண்டும். நிச்சயமாக மக்கள் நினைப்பது போல் எவரெஸ்டில் ஏறுவது எளிது கிடையாது.
எவரெஸ்ட் மலையேற்றத்துக்குத் தயாராவதில் முக்கியமான விஷயம் என்ன?
மலையேற்றத்தின்போது எது நேர்ந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு நம் மனதை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குண்டூசியின் மதிப்பையும் உணர வேண்டும். நெருக்கடியைக் கையாளுவதற்கு தயாராக இருக்க வேண்டும். எவரெஸ்டில் ஏறுவதற்கு முன், 8 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள மூன்று, நான்கு சிகரங்களில் ஏறிப் பழக வேண்டும். எவரெஸ்டில் ஏறுவது எந்த அளவு உடல்ரீதியாக கடினமானதோ அதே அளவு மனரீதியாகவும் கஷ்டமானது.
எவரெஸ்டில் ஏறுவதற்கு நீங்கள் எப்படி பயிற்சி பெற்றீர்கள்?
நான் 2012-ம் ஆண்டு தொடங்கி இரண்டாண்டு காலம், நேரு மலையேற்றப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றேன். அந்தக் காலத்தில் நான் தீபாவளி, ஹோலி பண்டிகைகளை கொண்டாடவில்லை, வீட்டுக்கு போன் பேசவில்லை. தினமும் 30 முதல் 35 கிலோ எடையை முதுகில் சுமந்தபடி, 10 கி.மீ. தூரம் மலையேறி இறங்குவேன். பயிற்சியின்போது எனக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு நானே பொறுப்பு என்றும் எழுதிக்கொடுத்துவிட்டேன்.
எவரெஸ்ட் உங்களுக்குக் கற்பித்த பாடம் என்ன?
எந்தக் கல்வி நிலையமும் கற்பிக்காத நிர்வாகத்திறன், தலைமைத் திறனை எவரெஸ்ட் எனக்குக் கற்பித்தது. நாம் கவனத்தைச் செலுத்தினால், ஒவ்வொரு நொடியும் இயற்கை நமக்குப் போதிக்கும். இயற்கை பற்றி அறிவதற்கு முன், நாம் அதனிடம் சரணடைய வேண்டும். அதை வெல்ல முயலும் முன் அதை அறிய வேண்டும். நாம் எப்போதுமே இயற்கையைத் தாண்டிச் செல்ல முடியாது. எவரெஸ்டே அனுமதித்தால்தான் நாம் அதில் ஏற முடியும்!