நடப்பு 2018-19-ஆம் நிதி ஆண்டில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 5 சதவீதம் வரை குறையும் இக்ரா நிறுவனம் மதிப்பீடு

நடப்பு நிதி ஆண்டிலும் (2018-19) ஆடை ஏற்றுமதி நிலவரம் திருப்திகரமாக இருக்காது என இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஆடை தயாரிப்பாளர்கள் சங்கம், இந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி 10 சதவீதம் குறையும் என முன்னறிவிப்பு செய்து இருந்தது...
நடப்பு 2018-19-ஆம் நிதி ஆண்டில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 5 சதவீதம் வரை குறையும் இக்ரா நிறுவனம் மதிப்பீடு
Published on

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

நடப்பு 2018-19-ஆம் நிதி ஆண்டில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 5 சதவீதம் வரை குறையும் என இக்ரா நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.

இநதியா 2-வது இடம்

உலக அளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் பருத்தியை மூலப்பொருளாகக் கொண்டு பல்வேறு தயாரிப்புகளை அளிப்பதில் நம் நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நாட்டின் மொத்த ஆடைகள் ஏற்றுமதியில் பருத்தி ஆடைகளின் பங்கு ஏறக்குறைய 70 சதவீதமாக இருக்கிறது.

இந்திய உற்பத்தி துறையில் ஜவுளித்துறையின் பங்கு 10 சதவீதமாக உள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 5 சதவீதமாகவும், ஏற்றுமதியில் 13 சதவீதமாகவும் இத்துறையின் பங்களிப்பு இருக்கிறது. சர்வதேச ஆடைகள் ஏற்றுமதியில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.

கடந்த நிதி ஆண்டுகளில்...

சென்ற நிதி ஆண்டில் (2017-18) ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 4 சதவீதம் குறைந்து 1,672 கோடி டாலராக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் அது 1,738 கோடி டாலராக இருந்தது. கடந்த நிதி ஆண்டில், ரூபாய் மதிப்பில் ஆடை ஏற்றுமதி 7.6 சதவீதம் சரிந்து இருந்தது. அதே ஆண்டில், ஆடை இறக்குமதி 17 சதவீதம் அதிகரித்து 700 கோடி டாலராக உயர்ந்தது. 2016-17-ஆம் ஆண்டில் இறக்குமதி 600 கோடி டாலராக இருந்தது. 2015-16-ஆம் ஆண்டில் 1 சதவீதமும், 2016-17-ல் 3 சதவீதமும் ஆடை ஏற்றுமதி வளர்ச்சி கண்டிருந்தது.

பல நாடுகளில் ஆயத்த ஆடைகளுக்கான தேவைப்பாடு குறைந்தது மற்றும் உள்நாட்டில் ஜி.எஸ்.டி. வரியில் ஏற்றுமதிக்கான ஊக்குவிப்பு சலுகைள் குறைப்பு போன்றவற்றால் இத்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நடப்பு நிதி ஆண்டிலும் (2018-19) ஆடை ஏற்றுமதி நிலவரம் திருப்திகரமாக இருக்காது என இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஆடை தயாரிப்பாளர்கள் சங்கம், இந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி 10 சதவீதம் குறையும் என முன்னறிவிப்பு செய்து இருந்தது.

4-5 சதவீதம் குறையும்

இந்நிலையில், கடன் தகுதி தர நிறுவனமான இக்ரா இந்த நிதி ஆண்டில் ஆடை ஏற்றுமதி 4-5 சதவீதம் குறையும் என தெரிவித்து இருக்கிறது. ஆடை தயாரிப்பாளர்கள் சங்கம், இந்த ஆண்டில் ஏற்றுமதி 10 சதவீதம் குறையும் என முன்னறிவிப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஆடைகள் ஏற்றுமதி குறையும் நிலை உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக நாட்டின் மொத்த ஆடைகள் ஏற்றுமதியில் ஐக்கிய அரபு குடியரசு நாடுகளின் பங்கு சுமார் 23 சதவீதமாக இருந்து வந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் அந்த நாடுகளுக்கான ஏற்றுமதி சரிந்துள்ளதாக தெரிகிறது. நிதி ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அந்த நாடுகளுக்கான ஏற்றுமதி 60 சதவீதம் சரிவடைந்தது.

ஜனவரி மாதத்தில்...

நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில், டாலர் மதிப்பில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 9 சதவீதம் அதிகரித்து 153 கோடி டாலராக உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 140 கோடி டாலராக இருந்தது. இதே காலத்தில், ரூபாய் மதிப்பில் ஆடைகள் ஏற்றுமதி 22 சதவீதம் உயர்ந்து ரூ.10,801 கோடியாக இருக்கிறது.

உள்நாட்டில் இப்போது ஆயத்த ஆடைகள் துறையினர் ஈட்டும் வருவாய் ஆண்டுக்கு 5,600 கோடி டாலராக உள்ளது. இத்துறையின் சராசரி ஆண்டு வருவாய் வளர்ச்சி விகிதம் தற்போது 10-11 சதவீதமாக உள்ளது. இனி 11-12 சதவீத சராசரி வளர்ச்சி இருக்கும் என்றும், 2025-க்குள் இத்துறையின் வருவாய் 16,000 கோடி டாலராக அதிகரிக்கும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com