ஆயிரம் பேர் சுற்றியிருந்தும் அன்புக்கு பஞ்சம் - தனிமை!

குழந்தைகள் மனதில் பலவித குழப்பங்களையும், விபரீத எண்ணங்களையும் தோற்றுவிக்கக்கூடியது. எதிர்காலத்தில் அந்த எண்ணங்கள் அவர்களிடத்தில் பலவிதங்களில் எதிர்விளைவுகளை உருவாக்கும். அது அவர்களுடைய குணாதிசயங்களிலும் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தும்.
ஆயிரம் பேர் சுற்றியிருந்தும் அன்புக்கு பஞ்சம் - தனிமை!
Published on

பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றுவிடும்போது அவர்கள் யாரோ ஒருவரிடம் தங்கள் குழந்தைகளை விட்டுச்செல்வதும், தனிமைப்படுத்தப்படுவதும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. குழந்தைகள் இந்த உலகை விரும்பியபடி எல்லாம் ரசித்துப்பார்க்க ஆசைப்படும்போது அவர்களை தனிமைச்சிறையில் அடைத்து, நாள் முழுவதும் யாருக்காகவோ, எதற்காகவோ காத்திருக்கவைப்பது அவர்களுக்கு பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தும். யூனிசெப் நிறுவனம் உலக குழந்தைகள் நல அமைப்புகளுடன் இணைந்து நடத்திய ஆராய்ச்சி யில், உலக அளவில் ஏராளமான குழந்தைகள் தனிமையில் ஏங்குவது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. நல்ல உணவு, நல்ல உடை, தேவை யான வசதிகளை மட்டும் செய்துகொடுத்துவிட்டால் போதும், குழந்தைகள் வளர்ந்துவிடுவார்கள் என்று பெரும்பாலான பெற்றோர்கள் நினைத்துக்கொண்டிருப்பதையும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. பெற்றோர் அப்படி நினைப்பது தவறானது.

குழந்தைகளின் வளர்ச்சி என்பது மனம் சம்பந்தப்பட்டது. ஆரோக்கியமான மனதை அடிப்படையாகக் கொண்டுதான் குழந்தைகள் வளர்கின்றன. குழந்தைகளின் மனம் தெளிவாக இருந்தால்தான் நல்ல சிந்தனைகள் அவைகளிடம் உருவாகும். நல்ல சிந்தனை இருந்தால்தான் நல்ல செயல் இருக்கும். குழந்தைகள் தனிமையில் விடப்படுவதற்கு முதல்காரணம், பெற்றோர் இருவருமே வேலைக்கு செல்வதுதான். குடும்பத்தின் தேவைக்கு சம்பாதிப்பது அவசியம்தான். ஆனால் அதைவிட அவசியம், குழந்தைகள் தனிமையில் ஏங்காமல் பார்த்துக்கொள்வது. பொறுப்பானவர்களிடம் குழந்தைகளை விட்டுச்செல்லவேண்டும். பொறுப்பற்றவர்களிடம் விட்டுச் செல்வது பாலியல் வன்முறை உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும். குழந்தைகளின் தனிமைக்கு பெற்றோரின் விவாகரத்தும் ஒரு காரணம். விவாகரத்துக்கு தயாராகும் பெற்றோர், தங்கள் பிரிவு குழந்தைக்கு தனிமையை உருவாக்கும் என்பதை உணரவேண்டும். குழந்தைகளின் தனிமை எவ்வளவு கொடுமையானது என்பதை குழந்தைகளின் நிலையில் இருந்து சிந்தித்து பார்க்கவேண்டும்.

விவாகரத்து என்றால் என்னவென்று குழந்தைகளுக்கு புரிவதில்லை. விவாகரத்து செய்துகொள்பவர்கள் ஏதோ ஒரு வேகத்தில் தங்கள் இணையுடனான உறவை தூக்கி எறிந்து விடுகிறார்கள். குழந்தைகளால் அப்படி தங்கள் உறவுகளை தூக்கி எறிய முடியாது. அதனால் அவசர கோலத்தில் விவாகரத்து முடிவினை எடுப்பவர்கள், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி சிந்தித்தே ஆகவேண்டும். ஆரோக்கியமான உறவுச் சூழல் கொண்ட பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள்தான் ஆரோக்கியமான மனநிலை கொண்டவைகளாக வளரும். இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. தனிமை உணர்வு என்பது தனிமையால் மட்டும் ஏற்படுவதில்லை. ஆயிரம் பேருக்கு மத்தியில் நின்றுகொண்டிருந்தாலும் சில குழந்தைகள் தனிமை உணர்வுக்கு ஆட்பட்டுவிடுவார்கள். தன்னோடு பழகும் அன்பான உறவுகள் இருந்தால் மட்டுமே அந்த குழந்தைகள் பாதுகாப்பை உணரும். மற்றபடி தன்னைச் சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் தனிமையைத் தான் உணர்வார்கள்.

தனிமையுணர்வில் பாதிக்கப்படும் குழந்தைகள் கல்வியறிவிலும் பின்தங்கியே இருப்பார்கள். அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை உருவாகி, அவர்களை ஓரமாக ஒதுங்கி நிற்க வைத்துவிடும். திறமைகள் அவர்களுக்குள்ளாகவே முடங்கி விடும். அத்தகைய தாழ்வு மனப்பான்மை கொண்ட குழந்தைகளை கண்டுபிடிப்பது கடினம். கண்டுபிடிக்க முடியாததால் அந்த குழந் தைகள் தாழ்வுமனப்பான்மையுடனே வளர்ந்துவிடுவார்கள். ஒரு குழந்தை மட்டும் இருக்கும் வீட்டில் இன்னொரு குழந்தை வரும்போது, முதல் குழந்தை பெரும்பாலும் தனிமையை உணர்கிறது. தன்னிடம் அன்பாக இருந்தவர்கள் புதிதாக வந்திருக்கும் குழந்தையிடம் அன்பு காட்டிவிட்டு தன்னை புறக்கணித்துவிடுவார்களோ என்ற பயம்தான் அந்த தனிமை உணர்வுக்கு காரணம். சில பெண்களுக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்காது. அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும்போது, கர்ப்பமாகி இன்னொரு குழந்தையை பெற்றெடுத்துவிடுவார்கள். அதுபோன்ற தருணங்களில் முதல் குழந்தையை இத்தகைய தனிமை நெருக்கடி பாதிக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com