

குழந்தை பருவத்தில் இருந்து பதின்பருவ காலத்திற்கு அடியெடுத்து வைக்கும்போது உடல் ரீதியாகவும், ஹார்மோன்களின் செயல்பாடுகள் ரீதியாகவும் மாற்றங்கள் நிகழும். உடல் மாற்றத்தை தூண்டும் தொடர்ச்சியான ஹார்மோன்களின் தாக்கம் ஆண், பெண் குழந்தைகளிடத்தில் மாறுபடும்.
உயரம், எடை, தசை அடர்த்தி, எலும்பு வலிமை, பாலியல் முதிர்ச்சி, அறிவாற்றல் வளர்ச்சி ஆகியவற்றிலும் அதன் தாக்கம் வெளிப்படும். உடல், உணர்ச்சி ரீதியாக ஏற்படும் இத்தகைய மாற்றங்கள் பருவமடைதலுக்கு வித்திடும். பெண் குழந்தைகளை பொறுத்தவரை 10 முதல் 14 வயது வரையிலும், ஆண் குழந்தைகளை பொறுத்தவரை 12 முதல் 16 வயது வரையிலும் இந்த செயல்முறை நடைபெறும்.
பெண் குழந்தைகள் பருவமடையும் விஷயத்தில் சில கட்டுக்கதைகளும் உலாவுகின்றன. அவற்றின் உண்மை தன்மை பற்றிய ஒரு அலசல்...
என் மகள் முன்கூட்டியே பருவமடைந்துவிட்டாள். அவளுக்கு மாதவிடாய் ஆரம்பமாகிவிட்டாலும் அவளின் வளர்ச்சி தடைபடாது. அவள் 18 வயது வரை உயரமாக வளர்வாள்.
ஒரு பெண் முன்கூட்டியே, பருவமடைந்தாலும் சில மாதங்களில் மாதவிடாய் சுழற்சி சீராக நடைபெற தொடங்கிவிடும். மேலும் அவளின் வளர்ச்சி 12-13 வயதில் நின்றுவிடும். ஒரு ஆண் குழந்தையை பொறுத்தவரை 13-14 வயதுக்குள் வளர்ந்து விடுகிறான்.
எனது மகள் 6 வயதில் உயரமாக இருக்கிறாள். இன்னும் அதிக உயரம் வளர்வாள்.
இதில் உண்மை இல்லை. அவள் 10-11 வயதிற்குள் இறுதி உயரத்தை அடைந்துவிடுவாள். அதற்கு பிறகு உயரம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு குறைவு. சொல்லப்போனால் குட்டையாக இருப்பதற்கான வாய்ப்பும் அதிகம். அந்த வயதுக்குள் பருவம் அடைந்துவிட்டால் எலும்புகள் ஒன்றிணைந்துவிடும். அதனால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் குறைவு. 8-9 வயதில் அவளுக்கு மாதவிடாய் சுழற்சியில் சிக்கல் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
எங்கள் குழந்தை பருவமடைவதிலோ, வளர்ச்சி அடைவதிலோ தாமதம் நேர்ந்தால் அது எங்கள் தவறு அல்ல. நாங்கள் மருத்துவர்களும் அல்ல.
தவறு. உங்கள் பிள்ளைக்கு 5 வயது கடந்த பிறகு வருடத்திற்கு இரு முறை மருத்துவரை அணுக வேண்டும். அவளின் உயரம், எடை, ரத்த அழுத்தம், பருவமடைதல் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும். பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தீர்வு காண வேண்டும்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் என் குழந்தை 10 கிலோ எடை அதிகரித்துவிட்டாள். ஆனால் அது வளர்ச்சியை பாதிக்காது. இன்னும் வளர்வாள்.
பருமனாக இருக்கும் குழந்தைகள் முன்கூட்டியே பருவமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். பருவமடையும் செயல்முறை முன்கூட்டியே தொடங்கி குறுகிய காலத்திலேயே முடிவடைந்துவிடும். பருமனான குழந்தைகள் முன்கூட்டியே பருவமடைவது மட்டுமல்லாமல், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கல்லீரல் நோய், தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.
எனது மகளுக்கு 8 வயதில் மாதவிடாய் வரத்தொடங்கியபோது,என் மாமியார் ‘இது இயற்கையான நிகழ்வு. அதில் தலையிடக்கூடாது. ஹார்மோன் சிகிச்சை மேற்கொள்வது தவறானது’ என்கிறார்.
முன்கூட்டிய பருவமடைவது மன ரீதியிலும், உடல் ரீதியிலும் கடும் தாக்கங்களை ஏற்படுத்தும். அரிதான சந்தர்ப்பங்களில், மூளையில் கட்டி ஏற்பட்டிருப்பதன் காரணமாக நிகழலாம். பொதுவாகவே முன் கூட்டியே பருவமடைவது, சிறுவர்-சிறுமியர்களுக்கு அசவுகரியங்களை ஏற்படுத்தும். ஹார்மோன் நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.