வீட்டை அழகாக்கும் மாடி படிகள்

வீட்டின் அழகை கூட்டுவதில் மாடிப்படிகள் பெரும் பங்காற்றுகின்றன. மாடிப்படிகள் ஒன்று வீட்டின் வெளிப்புறம் அமைக்கப்படும் அல்லது வீட்டின் உள்புறம் அமைக்கப்படும். வெளிப்புற படிக்கட்டுகள் பெரும்பாலும் கான்கிரீட்டினால் அமைக்கப்படுகின்றன.
வீட்டை அழகாக்கும் மாடி படிகள்
Published on

உட்புறத்தில் அமைக்கப்படும் படிக்கட்டுகளில் கான்கிரீட், மரம், கண்ணாடி, கிரானைட் என்று பலவிதமாக நமது ரசனைக்கு ஏற்றவாறு அமைக்கப்படுகின்றன.இன்டீரியருக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டாலும், வீட்டில் உள்ளோரின் உடல்நிலை, பழக்கவழக்கம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

வயது முதிர்ந்தோர், குழந்தைகள் வாழும் வீடு எனில் அவர்களது பாதுகாப்பு மற்றும் சவுகரியத்தை கணக்கில் கொண்டு மாடிப்படிகள் அமைக்க வேண்டும். பொதுவாக படிக்கட்டுகளின் சாய்வு தளம் 25 டிகிரி முதல் 40 டிகிரி வரையும், படிக்கட்டுகளின் அகலம் குறைந்தபட்சம் 3 அடிகளாவது அமைவது நலம் என்று பொறியாளர்கள் கூறுகிறார்கள். படிக்கட்டுகள் வடிவமைப்பில் வளைவுப்படிக்கட்டுகள், நேரான படிக்கட்டுகள், மிதக்கும் படிக்கட்டுகள், சுழல் படிக்கட்டுகள் என பல வகை உண்டு. திருப்பங்கள் இல்லாமல் ஒரே வீச்சாகப் படிக்கட்டுகள் இருந்தால் ஏறுவது சிரமம் தரும். அரைவட்ட திருப்பம், கால் திருப்பம், திறந்தவெளி திருப்பம் என்று உண்டு.

இதில் நம் வீட்டுக்கு எது பொருத்தமானதோ அதை கட்டிட வல்லுனரின் ஆலோசனையின்படி அமைக்கலாம். சுழல் படிக்கட்டுகள் மற்றும் வளைவுப் படிக்கட்டுகளை வரவேற்பறையில் பிரதானமாக அமைத்தால் வரவேற்பறையின் அழகு கூடும். மிதக்கும் படிக்கட்டுகள் என்பது அந்தரத்தில் மிதப்பவை அல்ல. ஒரு பக்கம் சுவரில் இணைக்கப்பட்டிருக்கும். படிகள் ஒன்றோடொன்று இணைக்கப்படாமல் தனித்தனியே நிற்கும்.

படிக்கட்டுகளை கிரானைட் எனும் பளிங்குக்கற்களால் அமைக்கலாம். மரத்தால் அமைக்கலாம். மரத்தால் அமைக்கும்போது தேர்வுசெய்யும் பலகையின் உறுதித்தன்மையை கவனத்தில் கொள்ள வேண்டும். பளிங்கு கற்களால் அமைக்கும் படிக்கட்டுகள் ஒரு எடுப்பான தோற்றத்தை தரும். கண்ணாடிப் படிக்கட்டுகளை வீடுகளில் அமைப்பதில்லை. பெரும்பாலும் மிகப்பெரிய ஷோரூம்களிலும், மால் என்னும் பல்பொருள் அங்காடிகளிலும் இம்மாதிரி படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. உலோக படிக்கட்டுகள் உறுதியுடன் திகழும். என்றாலும் துருப்பிடிக்கும் வாய்ப்பு உள்ளதால் இவற்றிற்கு அடிக்கடி வண்ணம் பூசி புதுப்பிக்க வேண்டும்.

பெரும்பாலும் படிக்கட்டுகளின் ஒரு பக்கம் சுவரும் மற்றொரு பக்கம் கைப்பிடியுடன் கூடிய தடுப்புகள் இருக்கும். சமயங்களில் இரு பக்கமும் தடுப்புகளை அமைப்பதும் உண்டு. வளைவான மாடிப்படிகளின் அழகு வேறு எதிலும் இல்லை. அதன் பக்கவாட்டில் ஆர்ச் போன்ற பெரிய ஜன்னல்களை அமைத்தால் மிக எடுப்பான தோற்றம் தரும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com