'சிக்ஸ் பேக்' கனவை நனவாக்கும் உணவு பழக்கங்கள்..!

சிக்ஸ் பேக் ஆசையில், தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது. பிரத்யேக உணவு பழக்கமும் அவசியம்.
'சிக்ஸ் பேக்' கனவை நனவாக்கும் உணவு பழக்கங்கள்..!
Published on

டீன் ஏஜ் வயதினர் அனைவருக்குமே, ஒரு ஆசை, ஒரு கனவு, ஒரு லட்சியம் இருக்கிறது. அது என்ன தெரியுமா..? சிக்ஸ் பேக் வைப்பது. இது சிலருக்கு, எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல், இயற்கையாகவே அமைந்துவிடும். ஆனால் பலருக்கு, அது வெறும் கனவாகவே இருக்கும். சிக்ஸ் பேக் ஆசையில், தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது. பிரத்யேக உணவு பழக்கமும் அவசியம். அந்த உணவு பழக்கத்தை தெரிந்து கொள்வோமா..?

* கார்போஹைட்ரேட் அளவு

பொதுவாக கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது, அதற்காக கார்போஹைட்ரேட்டை முற்றிலுமாக தவிர்க்கவும் கூடாது. ஏனெனில், உங்களின் தசைகள் தொடர்ந்து சீராக இயங்க அவற்றிற்கு தொடர்ச்சியான ஆற்றல் தேவை, அவை கார்போஹைட்ரேட்டிலிருந்து கிடைக்கிறது.

* அதிக புரோட்டின்

உங்கள் தசைகளை வலிமையாக்குவதில் மற்ற ஊட்டச்சத்துக்களை விட புரோட்டின்கள்தான் அதிக பலனளிக்க கூடியவை. உடலில் இருக்கும் கலோரிகளை எரிப்பதில் புரோட்டினின் பங்கு மிகவும் முக்கியமானது.

* ஆரோக்கியமான கொழுப்புகள்

உங்கள் உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். உடலுக்கு வலுசேர்க்கும் நிறைவுறா கொழுப்புகள் அவகேடா, ஆலிவ் எண்ணெய், மீன் போன்ற பொருட்களில் உள்ளது. இந்த பொருட்களில் இருந்து கிடைக்கும் கொழுப்புகள் உங்கள் உடலில் இன்சுலின் அளவை சீராக வைத்திருக்கும். வயிறை தட்டை யாக வைத்திருக்கவும், சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால் நிச்சயம் இந்த கொழுப்புகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* அடிக்கடி சாப்பிட வேண்டும்

பெரும்பாலும் அனைவரும் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த உணவு முறையை பின்பற்றுவது எடை குறைப்பிற்கும், சிக்ஸ் பேக் வைக்கவும் எந்த வகையிலும் உதவாது. கெட்ட கொழுப்புகள் மற்றும் இனிப்பு வகைகளை தவிர்த்து ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்களின் ஈரல் மற்றும் தசைகளை வலிமையாக்க உதவும்.

* உடலுக்கான எரிபொருள்

உடற்பயிற்சிக்கு முன்பும், பின்பும் நீர்சத்துக்களை உடலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய தொடங்குவதற்கு முன்பு பெர்ரி, தயிர் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். இது உங்களுக்கு அதிக உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றலை வழங்கும். அதேபோல உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு சிக்கன், காய்கறிகள், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றை சாப்பிடுங்கள்.

* சாப்பிடும் பழக்கம்

உங்கள் நாளை எப்பொழுதும் அதிகமான உணவு வகைகளுடன் தொடங்குங்கள். நார்ச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். இது தேவையில்லாமல் பசி ஏற்படுவதை தடுக்கும். நாளின் கடைசி உணவானது (இரவு உணவு) நிச்சயமாக கார்போஹைட்ரேட் இல்லாமல் புரோட்டின் அதிகம் உள்ள உணவாக இருக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com