ரத்தக்குழாய் அடைப்பை தடுக்கும் உணவுகள்

ரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படுவதை தடுக்க ஒருசில உணவு பழக்கங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
ரத்தக்குழாய் அடைப்பை தடுக்கும் உணவுகள்
Published on

ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக கார்டியோவாஸ்குலர் எனும் இதய நோய் உண்டாகிறது. உடலில் கொழுப்பு அதிகமாக சேர்வதுதான் ரத்த குழாய்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது. அதனால் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மூலம் இதயத்திற்கு எடுத்து செல்லப்படும் செயல் முறைக்கு இடையூறு ஏற்படுகிறது. ரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படுவதை தடுக்க ஒருசில உணவு பழக்கங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

பூண்டு: ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக் கூடிய கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றும் தன்மை பூண்டுக்கு உண்டு. அதற்கேற்ப இதில் ஆன்டி ஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளன. தினசரி உணவில் பூண்டுவை சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள எல்.டி.எல் கொழுப்பு குறையும். ரத்த ஓட்டமும் அதிகரிக்க தொடங்கும். தினமும் இரண்டு பூண்டு பற்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். சூப், சாலட்டாகவும் தயாரித்து உட்கொள்ளலாம்.

மாதுளை: இதிலும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் அதிகம் இருப்பதால் ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்க உதவும். தினமும் ஒரு மாதுளை பழம் சாப்பிட்டு வரலாம். மாதுளை ஜூஸும் பருகலாம். மேலும் இதில் நைட்ரிக் ஆக்ஸைடு அதிக அளவில் இருக்கிறது. இது ரத்தக்குழாய்கள் சுருங்கி விரிந்து சீராக செயல்படுவதற்கு உதவி செய்யும். இதனால் ரத்த அழுத்தமும் சீராக இருக்கும். இதயத்தின் நலனை பேணுவதில் மாதுளைக்கு முக்கிய பங்களிப்பு உண்டு.

பாதாம்: இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவி புரியும். ரத்த குழாய்களில் கொழுப்புகள் படியாமல் பாதுகாக்கும். அதன் மூலம் இதயம் சார்ந்த பிரச்சினைகளை தவிர்க்க உதவும்.

கிரீன் டீ: இதிலும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடெண்டுகள் உள்ளது. இவை ரத்த குழாய்களை சுத்தம் செய்ய உதவும். அத்துடன் இதயத்தை சுற்றிலும் கொழுப்பு படிவதை தடுத்து இதய ஆரோக் கியத்தை பாதுகாக்கும். தினமும் இரண்டு கப் கிரீன் டீ பருகுவது ஆரோக்கியமாக இருக்க உதவும்.

ஆளி விதை: இதிலும் ஒமேகா-3 எனப்படும் நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. மேலும் எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பை கரைத்து எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் தன்மை கொண்டது. ரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிவதை தடுப்பதோடு சீரற்ற இதயத்துடிப்பு போன்ற இதயம் சார்ந்த பிரச்சினைகள் வராமல் தடுக்க உதவும்.

வெங்காயம்: இதில் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பிளாவனாய்டு ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. 4.3 கிராம் வெங்காய சாற்றை தொடர்ந்து 30 நாட்கள் உட்கொண்ட ஆண்களுக்கு ரத்த ஓட்டம் மேம்பட்டிருப்பதும், தமனி விரி வடைந்திருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெங்காயம் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இது நரம்புகள் மற்றும் தமனிகளில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதன் மூலம் ரத்த ஓட்டத்தையும், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.

மஞ்சள்-லவங்கப்பட்டை: மஞ்சள் இதயத் தசைகளை பாதுகாக்கும் தன்மை கொண்டது. ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமலும் தடுக்கக்கூடியது. லவங்கப் பட்டை ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பையும் குறைக்க துணைபுரியும்.

சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்கள் ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிரம்ப பெற்றவை. அவற்றுள் பெக்டின் எனப்படும் கரையும் நார்ச்சத்தும் அதிக அளவில் உள்ளடங்கி இருக்கும். இது கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி கொலஸ்ட்ரால் அளவை சீராக பராமரிக்கவும் உதவும். மேலும் சிட்ரஸ் பழங்களில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com