

ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் ஒரு கபே நடத்திவருகிறார் நிஷா பகத். கொரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த அந்தப் பெண், தன் தொழிலை ஒரு சேவையாக மாற்றிவிட்டார்.
காலை சிற்றுண்டி, மதியச் சாப்பாடு, இரவு உணவு என மூன்று வேளைகளுக்கு இலவச உணவை வழங்கிவருகிறார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த எண்ணம் அவருக்குத் தோன்றியது.
ஒரு பெண் இரவில் போன் செய்து கிச்சடி ஹோம் டெலிவரி செய்யமுடியுமா என்று நிஷாவிடம் கேட்டார். எவ்வளவு வேண்டுமானாலும் பணம் கொடுக்க அவர் தயாராக இருந்தார். இதுபோன்ற சாதாரண உணவை யாரும் போனில் ஆர்டர் செய்யமாட்டார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது'' என்று சொல்கிறார் நிஷா. பிறகுதான் போனில் பேசியவர் கவலை தரும் செய்தியைச் சொல்லியுள்ளார். குடும்பத்தினர் அனைவருமே கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், யாராலும் சமைக்கமுடியவில்லை. அதனால் ஆர்டர் செய்தோம் என்றார். எனக்கு வருத்தமாக இருந்தது. இதுபோன்ற சாமானிய மக்களுக்கு ஏன் இலவசமாக உணவை வழங்கக் கூடாது என்று அப்போது நினைத்தேன்'' என்கிறார் நிஷா பகத்.
உடனே சமூகவலைத்தளத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இலவச உணவு வழங்கப்படும் என்ற செய்தியைப் பகிர்ந்தார். அதைத் தொடர்ந்து உணவு கேட்டுப் பல அழைப்புகள் வரத் தொடங்கின.
தனக்குத் துணையாக நண்பர்கள் சந்திரசேகர் மற்றும் வினிதா சாகு ஆகிய இருவரையும் சேர்த்துக்கொண்டார். தினமும் அவர்கள் காலையில் 5 மணிக்கு எழுந்து சமையல் வேலைகளைத் தொடங்குகிறார்கள்.
என்றைக்கு நோயாளிகளுக்கு உணவு வழங்கத் தொடங்கினோமோ, அன்று முதல் உணவின் சத்து மற்றும் சுகாதாரத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்கிறேன். காலையில் இட்லி, உப்புமாவுடன் அவித்த முட்டையும், மதியம் சாதம், ரொட்டி, காய்கறிகள் மற்றும் சாலட் வழங்குகிறோம். இரவில் காய்கறியுடன் சப்பாத்தி'' என்று விவரிக்கும் நிஷா, உணவை சம்பந்தப்பட்டவரின் வீட்டிற்கே சென்று வழங்குகிறார்.