

பெட்ரோலும் டீசலும் கச்சா எண்ணெயில் இருந்து எடுக்கப்படுகின்றன. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளம் அல்ல. இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெட்ரோலும் டீசலும் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. அதனால், காலாகாலத்துக்கும் பெட்ரோல், டீசலை சார்ந்து நாம் இயங்க முடியாது. பெட்ரோல், டீசலைச் சேமிப்பதன் மூலம் எரிபொருள் செலவு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றை குறைத்து பணத்தை சேமிக்க முடியும். வாகனத்தைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் பழுதுநீக்கிப் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் 20 சதவீத மைலேஜ் குறையும்.
வாகன டயர்களில் பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தத்தை பராமரிக்க வேண்டும். வேகத்துக்கு ஏற்ப வாகனத்தின் கியரை தொடர்ந்து மாற்றி இயக்க வேண்டும். வேகம்-கியர் இடையிலான சமநிலை இல்லை என்றால் எரிபொருள் செலவு கூடும். போக்குவரத்து நெரிசல், சாலையின் தன்மையைப் பொறுத்து எப்போதும் குறிப்பிட்ட ஒரு வேகத்தில் மட்டும் வாகனத்தை ஓட்ட முயற்சியுங்கள். இந்தியச் சாலைகளில் 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டுவதன் மூலம் 40 சதவீதம் எரிபொருள் சேமிக்கப்படும் என ஆய்வுகள் தரிவிக்கின்றன.
புறநகர் பகுதிகள், நெடுஞ்சாலைகள் போன்ற வாகன நடமாட்டம் அதிகமில்லாத பகுதிகளில் அதிகபட்ச கியரில் ஓட்டலாம். மேடும் பள்ளமுமான சாலைகளுக்குப் பதிலாகச் சமமான சாலையிலேயே ஓட்ட முயற்சிக்கவும். போக்குவரத்து சிக்னலில் வாகனத்தை அணைத்துவிட்டு, நமக்குச் சிக்னல் கிடைப்பதற்கு 3 விநாடிகள் முன்னதாக வாகனத்தை ஸ்டார்ட் செய்தால்போதும். குறைந்தபட்சமாக 14 விநாடிகள் வாகனம் அணைக்கப்பட்டிருந்தால்கூட எரிபொருள் சேமிக்கப்படும். அணைத்துவைப்பதன் மூலம் சராசரியாக 20 சதவீத எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கலாம்.
வாகனத்தில் பரிந்துரைக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகமான ஆட்களை ஏற்றக்கூடாது. மீறி அதிக எடையை வாகனம் சுமந்து சென்றால், எரிபொருள் செலவு கூடும். வாகனத்தை ஸ்டார்ட் செய்வதற்கு முன்னதாக, எங்கே போகிறோம், அந்த இடத்தை எப்படி எளிதாகச் சென்றடையலாம் என்பதைத் திட்டமிடவும். எல்லா வெளி வேலைகளையும் திட்டமிட்டு அதற்கேற்ப பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம்.
ஸ்பீடாமீட்டரில் சிவப்புக்கு முன்னதாகக் குறிக்கப்பட்டுள்ள மிதமான வேகத்தில் செல்வதே நல்லது. அதிக வேகத்தில் செல்வது எரிபொருள் செலவை அதிகரிப்பதுடன், வாகனத்தின் பாகங்களை விரைவில் பழுதாக்கிவிடும். பெட்ரோல்-டீசல் நிரப்பப்பட்ட பிறகு, அதன் மூடி சரியாக மூடி இருக்கிறதா என்று பாருங்கள். சரியாக மூடவில்லை என்றால், எரிபொருள் ஆவியாக நேரிடும். கார்களில் குளிரூட்டும் எந்திரத்தைப் பயன்படுத்துவது எரிபொருள் செலவைப் பெருமளவு அதிகரிக்கும். எப்போதும் வாகனத்தை நிழல் பகுதியில் நிறுத்துங்கள். வெயில் நேரடியாகப்படும் இடத்தில் நிறுத்தும் போது, எரிபொருள் வீணாகவும் வாய்ப்புள்ளது.