உடலுக்கும், மனதிற்கும்... இசையின் அதிர்வில் ‘நலம்’ தேடலாம்

மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு போன்றவற்றைக் குறைக்கவும், வலி மற்றும் அன்றாட மன உளைச்சலைச் சமாளிக்கவும் இசை துணையாக இருக்கும் என்கிறார் ஆர்கிடெக்ட் என்ஜினீயரான நடராஜா ஐயப்பன்.
இசை ஆய்வு.
Published on: 

இசை எப்படி மனதைச் செம்மைப்படுத்துகிறது? உடலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது? ஒவ்வொரு இசைக்கருவியும் உருவாக்கும் அதிர்வு உடலுக்குள் எவ்வாறு எதிரொலிக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறேன் என்று நடராஜா ஐயப்பன் கூறினார்.

நடராஜா ஐயப்பன்

இசைக் கருவிகளின் அதிர்வுகள் குறித்த ஆய்வு

இசையை ரசிப்பது ஒருபக்கம்... அதன் அதிர்வுகளை ஆராய்வது இன்னொரு பக்கம்! ஆர்கிடெக்ட் என்ஜினீயரான நடராஜா ஐயப்பன், இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் அதைக் கற்றுக்கொண்டதுடன், ஒவ்வொரு இசைக்கருவியும் உருவாக்கும் அதிர்வு மனித உடலிலும் மனதிலும் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் ஆராய்ந்து வருகிறார்.

இசைக்கருவிகளை இசைத்துப் பார்த்து, அவற்றின் அதிர்வை மனித உடலின் அதிர்வுடன் இணைத்துப் புரிந்துகொள்ளும் இவரது முயற்சி, இசையை ரசிப்பதைத் தாண்டிய ஒரு புதுமையான தேடலாக இருக்கிறது. இதற்காக பிரத்யேக இசை ஆய்வகத்தையும் அமைத்துள்ளார். தனது இசை ஆர்வம், ஆய்வுகள் மற்றும் அனுபவங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொள்கிறார்.

ஆர்கிடெக்சர் படித்த நீங்கள் இசையின் பக்கம் வந்தது எப்படி?

நான் ஆர்கிடெக்சர் படித்தவன். ஆனால், இசையின் மீது சிறு வயது முதலே மிகுந்த ஈடுபாடு இருந்தது. இசையை வெறுமனே ரசிப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், அதன் பின்னால் இருக்கும் தன்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அந்தத் தேடல் என்னை இசையை முறையாகக் கற்றுக்கொள்ளத் தூண்டியது. தொடர்ந்து கற்று, அதில் நிபுணத்துவமும் பெற்றேன்.

இசையை உடல்-மன நலத்துடன் இணைத்து ஆராயத் தொடங்கியது எப்படி?

இசை நமது மனநிலையை மாற்றுகிறது என்பதை அனைவருமே ஏதோ ஒரு வகையில் உணர்ந்திருப்போம். ஆனால், அது எப்படி மனதைச் செம்மைப்படுத்துகிறது? உடலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது? ஒவ்வொரு இசைக்கருவியும் உருவாக்கும் அதிர்வு உடலுக்குள் எவ்வாறு எதிரொலிக்கிறது? போன்ற கேள்விகள் எனக்குள் எழுந்தன. அதற்கான பதிலைத் தேடும் முயற்சியாகவே எனது ஆய்வு தொடங்கியது. இதற்காக சவுண்ட் தெரபியும் கற்றுக்கொண்டேன். வெவ்வேறு இசைக்கருவிகளை இசைத்துப் பார்த்து, அவை உருவாக்கும் அதிர்வையும், அந்த அதிர்வு மனித உடலில் ஏற்படுத்தும் உணர்வு மற்றும் மாற்றங்களையும் கவனித்து வருகிறேன்.

ஒவ்வொரு இசைக்கருவியின் அதிர்வும் மாறுபடுமா?

ஆம். ஒவ்வொரு கருவியும் வெவ்வேறு வகையான அதிர்வை உருவாக்குகிறது. அந்த அதிர்வும் உடலின் அதிர்வும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்றன, அது உடலிலும் மனதிலும் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதைத் தனித்தனியாக ஆராய்கிறேன்.

உடல், மனநிலைக்கு ஏற்ற அதிர்வு எது?

ஒருவரின் உடல் மற்றும் மனநிலைக்கு ஏற்ற அதிர்வு எது என்பதைப் புரிந்துகொண்டு, அந்த இசைக்கருவியைப் பயன்படுத்துவதற்கான வழிகளையும் தேடுகிறேன். இந்த ஆய்வுக்காக எனது பூர்வீகமான நெல்லையில் பிரத்யேக இசை ஆய்வகமும் அமைத்துள்ளேன். இருப்பினும் என்னுடைய இசைத் தேடல் பெருநகரங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இசை எதற்கெல்லாம் துணையாக இருக்க முடியும்?

மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு போன்றவற்றைக் குறைக்கவும், வலி மற்றும் அன்றாட மன உளைச்சலைச் சமாளிக்கவும் இசை துணையாக இருக்கும். நல்ல தூக்கத்தைப் பெறவும், மனதை அமைதிப்படுத்தவும் இசையின் அதிர்வுகள் உதவக்கூடும்.

நரம்பியல் பிரச்சினைகள், நினைவாற்றல்

பார்கின்சன் நோய், பக்கவாதம், ஞாபக மறதி போன்ற நரம்பியல் பிரச்சினைகள் உள்ளவர்களின் நினைவாற்றல் மற்றும் உடல் இயக்கத்திலும் இசை மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ரத்த அழுத்தம் உள்பட உடல் சார்ந்த அம்சங்களிலும் இசையின் தாக்கம் குறித்து ஆய்வுகள் உள்ளன.

என்னைப் பொறுத்தவரை, இசைக்கருவியின் அதிர்வை மனித உடலின் இயல்பான அதிர்வுடன் இணைத்துப் பார்த்து, எந்த அதிர்வு எந்த வகையான அனுபவத்தை உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதுதான் முக்கியம். இதன் மூலம் உடல்-மன நலனுக்கு இசையை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டறிய முடியும்.

தற்போது பாதங்களையும் ஆய்வுப் பொருளாக எடுத்திருக்கிறீர்களே?

ஆம். இசையுடன் இணைத்து தற்போது பாதங்களையும் ஆய்வு செய்து வருகிறேன். பாதங்களில் உள்ள முக்கியப் புள்ளிகள், அவற்றுக்கும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் உள்ள தொடர்பு, குறிப்பிட்ட புள்ளிகளில் ஏற்படுத்தப்படும் தூண்டுதலால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை ஆராய்ந்து வருகிறேன். இசைக்கருவிகளின் அதிர்வும், மனித உடலின் இயல்பான அதிர்வும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்றன என்பதை ஆராய்வது போலவே, பாதங்களில் உள்ள முக்கியப் புள்ளிகளின் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன்.

X

Daily Thanthi
www.dailythanthi.com