

வங்கி கணக்கின் கேஒய்சி (வாடிக்கையாளரின் அடையாளம் அறிதல்) விவரங்களை உடனடியாகப் புதுப்பிக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் எனக் கூறி வரும் குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ் அப் தகவல்களை நம்ப வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய தகவல்கள் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்களை அச்சமடையச் செய்து, அவசரமாக நடவடிக்கை எடுக்க வைப்பதன் மூலம் அவர்களின் பணத்தை திருடுவது இணையவழி மோசடியாளர்களின் புதிய உத்தியாக உள்ளது.
கேஒய்சி புதுப்பிக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும், வங்கி சேவை நிறுத்தப்படும் உள்ளிட்ட தகவல்களை அனுப்பி வாடிக்கையாளர்களை நம்ப வைக்க முயற்சி செய்கின்றனர். பின்னர், அந்தச் செய்தியில் இடம்பெறும் இணைய இணைப்பை கிளிக் செய்ய வைத்து தனிப்பட்ட மற்றும் வங்கி சார்ந்த தகவல்களை திருடும் முயற்சிகள் நடைபெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மோசடி முயற்சிகளில் சிக்காமல் இருக்க ‘நில், யோசி, செயல்படு’ என்ற 3 முக்கிய விதிகளைப் பின்பற்றுமாறு RBI அறிவுறுத்தியுள்ளது.
முதலில், சந்தேகத்துக்குரிய குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப் தகவல் வந்தவுடன் பதற்றமடையக் கூடாது. உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அந்தத் தகவலின் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டும்.
அடுத்து, வங்கிகள் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்கள் கேஒய்சி புதுப்பிப்புக்காக குறுஞ்செய்தி வாயிலாக சந்தேகத்துக்குரிய இணைய இணைப்புகளை அனுப்புவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது சந்தேகத்துக்குரிய எண்களில் இருந்து வரும் இணைய இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்யக்கூடாது. அவ்வாறு கிளிக் செய்வதன் மூலம் போலி இணையதளங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கேஒய்சி புதுப்பிப்பு தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால், குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணை அணுகுவதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ வழிகளில் தகவலை சரிபார்க்க வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP), வங்கி பரிவர்த்தனை ரகசிய குறியீடு (PIN), Password உள்ளிட்ட முக்கியமான தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது என RBI அறிவுறுத்தியுள்ளது.
வங்கி அதிகாரிகள் என்ற பெயரில் யாராவது தொலைபேசியில் தொடர்பு கொண்டு இத்தகைய ரகசிய தகவல்களைக் கேட்டாலும் வழங்கக்கூடாது. மேலும், தனிப்பட்ட ஆவணங்கள் மற்றும் இணைய வங்கி உள்நுழைவு விவரங்களை அடையாளம் தெரியாத செயலிகள் அல்லது இணையதளங்களில் பதிவேற்றம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
இணையவழி மோசடியில் பணத்தை இழந்துவிட்டால், தாமதிக்காமல் உடனடியாக 1930 என்ற தேசிய இணையவழி குற்றத்தடுப்பு உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். மேலும், இணையவழியாகவும் புகார் அளிக்க முடியும்.
மோசடி சம்பவத்தில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது என்பதால், பணம் பறிபோனது தெரியவந்தவுடன் விரைந்து புகார் அளிப்பதன் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
கேஒய்சி புதுப்பிப்பு என்ற பெயரில் வரும் அவசர எச்சரிக்கைகள், சந்தேகத்துக்குரிய லிங்குகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களைக் கோரும் அழைப்புகள் குறித்து வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பதற்றமடையாமல் தகவலை சரிபார்த்து, அதிகாரப்பூர்வ வங்கி வழிகளை மட்டுமே பயன்படுத்துவது இணையவழி மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.