

அடுத்த 25 நாட்களில் நாடு முழுவதும் 52 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ளன. இதன்மூலம் ரூ.7.5 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணத்துக்கு போனோமா, மணமக்களை பார்த்து பரிசு கொடுத்தோமா, பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டோமா, தாம்பூல கவர வாங்கிட்டு வந்தோமான்னு உறவுகளெல்லாம் பிசியாகக்கூடிய நேரம் இது. கல்யாணத்துல கலந்துக்கிறவங்களவிட அதை நடத்துறவங்களுக்கு சொல்லவே வேண்டாம். ஆயிரம் டென்சன் இருக்கும். அதனால்தான் அந்தக்காலத்திலேயே வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்னு சொல்லி இருக்காங்க.
வரன் பார்ப்பது முதல் பந்திவரை ஒவ்வொரு கல்யாணத்துக்குப் பின்னால் ஆகும் செலவு ஒருபுறம் இருந்தாலும் அதன்மூலம் ஆகும் வர்த்தகம் மூலம் நாட்டில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் புரளுகிறது.
தங்க நகைகள் வாங்குவது முதல் திருமண ஆடைகள், உணவு, மண்டபம், அலங்காரம், போக்குவரத்து எனப் பல்வேறு துறைகளில் திருமணங்களால் வர்த்தகம் நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.
இதை அகில இந்திய வணிகர் கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் கணக்கிட்டு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நவம்பர் 21-ந் தேதி (நேற்று) முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை 25 நாட்களில் நாடு முழுவதும் சுமார் 52 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ளதாக அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.7.5 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்றும் கணித்துள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு 2 லட் சத்துக்கும் அதிகமான திருமணங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 14-ந் தேதி வரை நடைபெற்ற திருமண காலத்தில் 46 லட்சம் திருமணங்கள் நடந்துள்ளது. இதன் மூலம் ரூ.6.5 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக இந்திய வணிகர் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
இந்த ஆண்டு 6 லட்சம் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. இது சுமார் 13 சதவீதம் அதிகமாகும். அதேபோல், திருமணங்கள் மூலம் நடைபெற உள்ள வர்த்தகம் ரூ.6.5 லட்சம் கோடியில் இருந்து ரூ.7.5 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதாவது சுமார் ரூ.1 லட்சம் கோடி கூடுதல் வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 15.4 சதவீதம் அதிகரிப்பாகும்.
இந்த ஆண்டு நடைபெற உள்ள திருமணங்கள் மூலம் அதிக வர்த்தகம் நடைபெற உள்ள துறைகள் குறித்தும் கூட்டமைப்பு கணிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் ரூ.7.5 லட்சம் கோடி வர்த்தகத்தில் பொருட்கள் விற்பனை மூலம் ரூ.4.05 லட்சம் கோடியும், சேவைகள் மூலம் ரூ.3.45 லட்சம் கோடியும் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
திருமண நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பல்வேறு தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். சமையல் கலைஞர்கள், அலங்காரப் பணியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசைக் கலைஞர்கள், வாகன டிரைவர்கள், அழகுக் கலை நிபுணர்கள் எனப் பல ருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
இந்த ஆண்டு திருமண காலங்களில் நாடு முழுவதும் சுமார் 1 கோடியே 25 லட்சம் பேருக்கு தற்காலிக மற்றும் பருவகால வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மட்டும் சுமார் 5 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ளன. இதன் மூலம் ரூ.2.5 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியின் சாந்தினி சவுக், சதர் பஜார், கரோல் பாக் உள்ளிட்ட முக்கிய வணிகப் பகுதிகளில் விற்பனை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
திருமணங்கள் அதிகரிப்பது தங்கம், ஜவுளி, உணவு, சுற்றுலா, போக்குவரத்து உள்ளிட்ட பல் வேறு தொழில்களுக்கு ஊக்கமளிப்பதுடன், சிறு வணிகர்கள் மற்றும் உள்ளூர் தொழில்முனைவோரின் வருமானத்தையும் அதிகரிக்கிறது. இந்தியர்களின் பாரம்பரியத் திருமணக் கொண்டாட்டங்கள் தற்போது நாட்டின் மிகப்பெரிய நுகர்வுச் சந்தைகளில் ஒன்றாக உருவெடுத்து வருவதையே இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.