நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் கடன் பத்திரங்கள் ஒதுக்கீடு மூலம் திரட்டப்பட்ட நிதி ரூ.4.57 லட்சம் கோடி : மதிப்பு அடிப்படையில் 6.35 சதவீதம் சரிவு

நடப்பு நிதி ஆண்டில் (2018-19), ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் 1,955 கடன்பத்திர ஒதுக்கீடுகள் மூலம் நிறுவனங்கள் ரூ.4.57 லட்சம் கோடி திரட்டி உள்ளன. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் 2,200 ஒதுக்கீடுகள் வாயிலாக திரட்டப்பட்ட நிதி ரூ.4.88 லட்சம் கோடியாக இருந்தது...
நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் கடன் பத்திரங்கள் ஒதுக்கீடு மூலம் திரட்டப்பட்ட நிதி ரூ.4.57 லட்சம் கோடி : மதிப்பு அடிப்படையில் 6.35 சதவீதம் சரிவு
Published on

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் (2018 ஏப்ரல்-2019 ஜனவரி) கடன்பத்திரங்கள் ஒதுக்கீடு மூலம் ரூ.4.57 லட்சம் கோடி நிதி திரட்டப்பட்டு இருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது மதிப்பின் அடிப்படையில் திரட்டிய நிதி 6.35 சதவீதம் சரிவடைந்துள்ளது.

விரிவாக்க திட்டம்

நிறுவனங்கள் தமது விரிவாக்க திட்டத்திற்கு தேவையான நிதியை பல்வேறு வழிமுறைகளில் திரட்டுகின்றன. இந்த வகையில், நிதி நிறுவனங்களுக்கு பங்குகள் ஒதுக்குவது போல், கடன்பத்திரங்கள் ஒதுக்கி நிதி திரட்டுவதும் இதில் முக்கிய வழிமுறையாக உள்ளது. இவ்வாறு திரட்டும் தொகையை நிறுவனங்கள் தமது நடைமுறை மூலதன தேவைகளுக்காகவும், பழைய கடன்களை அடைப்பதற்காகவும் கூட பயன்படுத்திக் கொள்கின்றன.

பங்குகளைப் போல் இடர்பாடுகள் இல்லை என்பதால் கடன்பத்திர வெளியீடுகளில் அதிக முதலீட்டாளர்களை ஈர்க்க முடிகிறது. முதலீட்டிற்கு உத்தரவாதமான ஆதாயம் கிடைப்பதால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கடன்பத்திரங்களுக்கு பொதுவாக நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பங்குச்சந்தையில் களம் இறங்க தயக்கம் ஏற்படும்போது நிறுவனங்கள் கடன்பத்திர வெளியீடு மற்றும் ஒதுக்கீடு வாயிலாக நிதி திரட்டுகின்றன.

கடந்த நிதி ஆண்டுகளில்...

கடந்த நிதி ஆண்டில் கடன்பத்திர ஒதுக்கீடு வாயிலாக திரட்டப்பட்டுள்ள நிதி ரூ.6 லட்சம் கோடியாகும். முந்தைய 2016-17-ஆம் நிதி ஆண்டில் இந்த வழிமுறையில் ரூ.6.41 லட்சம் கோடி திரட்டப்பட்டது. 2015-16-ஆம் நிதி ஆண்டில் அது ரூ.2.76 லட்சம் கோடியாக இருந்தது. 2014-15-ஆம் நிதி ஆண்டில் ரூ.4.04 லட்சம் கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டில் (2013-14) ரூ.2.76 லட்சம் கோடி திரட்டப்பட்டது.

நடப்பு நிதி ஆண்டில் (2018-19), ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் 1,955 கடன்பத்திர ஒதுக்கீடுகள் மூலம் நிறுவனங்கள் ரூ.4.57 லட்சம் கோடி திரட்டி உள்ளன. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் 2,200 ஒதுக்கீடுகள் வாயிலாக திரட்டப்பட்ட நிதி ரூ.4.88 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, நிறுவனங்கள் திரட்டிய நிதி 6.35 சதவீதம் குறைந்துள்ளது.

பங்கு ஒதுக்கீடு

பங்குச்சந்தையில் ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள ஒரு நிறுவனம் இரண்டாவது பொது பங்கு வெளியீட்டில் களம் இறங்க விரும்பாதபோது வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு பங்குகள் ஒதுக்கி நிதி திரட்டுகிறது. மூலதன சந்தையில் இது ஒரு முக்கிய வழிமுறையாக உள்ளது.

பொதுப்பங்கு வெளியீடுகளுடன் ஒப்பிடும்போது இவ்வகை ஒதுக்கீடுகளுக்கான விதிமுறைகள் எளிமையாக உள்ளன. எனவே எளிதாகவும், துரிதமாகவும் நிதி திரட்ட விரும்பும் நிறுவனங்கள் பெரும்பாலும் இந்த வழிமுறையை நாடுகின்றன.

நாடாளுமன்ற தேர்தல்

பங்குச்சந்தைகள் ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்து வருவதால் பங்கு வெளியீடு மற்றும் ஒதுக்கீட்டு நடவடிக்கைகள் மந்தமடைந்ததே இதற்கு காரணமாகும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் முடிவுகளுக்காக நிறுவனங்கள் காத்திருப்பதால் நடப்பு ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் (ஜூலை-டிசம்பர்) பங்கு ஒதுக்கீடுகள் மீண்டும் விறுவிறுப்பு அடையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com