ஏப்ரல் மாதத்தில் மேலும் முன்னேற்றம் : பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான அன்னிய முதலீடு ரூ.81,220 கோடி

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
ஏப்ரல் மாதத்தில் மேலும் முன்னேற்றம் : பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான அன்னிய முதலீடு ரூ.81,220 கோடி
Published on

புதுடெல்லி

பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் எனும் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான அன்னிய முதலீடு, ஏப்ரல் மாதத்தில் ரூ.81,220 கோடியாக அதிகரித்து இருக்கிறது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது இது 3.98 சதவீத உயர்வாகும்.

அன்னிய நிதி நிறுவனங்கள்

பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் பதிவு பெற்ற அன்னிய நிதி நிறுவனங்கள் வழங்கும் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக உலக பெரும் பணக்காரர்கள், பாதுகாப்பு நிதியங்கள், இந்திய பங்குகள், கடன்பத்திரங்கள் மற்றும் முன்பேர வர்த்தக சந்தைகளில் முதலீடு செய்கின்றனர்.

பங்கேற்பு ஆவணங்கள் என்பது இந்திய பங்குகளை தம் வசம் வைத்திருக்கும் வெளிநாட்டு முதலீட்டு உபகரணங்கள் ஆகும். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, செபி அமைப்பில் பதிவு செய்து கொள்ளாமலேயே இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பங்குகளை வாங்க இவை அனுமதி அளிக்கின்றன.

பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான அன்னிய முதலீடு, நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூ.1.19 லட்சம் கோடியாக இருந்தது. பிப்ரவரியில் அது ரூ.73,428 கோடியாக சரிந்தது. மார்ச் மாதத்தில் ரூ.78,110 கோடியாக உயர்ந்தது. ஏப்ரல் மாதத்தில் ரூ.81,220 கோடியாக மேலும் அதிகரித்து இருக்கிறது.

ஏப்ரல் மாதத்தில் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான மொத்த அன்னிய முதலீட்டில் பங்குகளின் பங்கு மட்டும் ரூ.58,820 கோடியாகும். கடன் சந்தையில் ரூ.21,542 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மீத முதலீடு முன்பேர வணிக சந்தையில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

பங்கு வர்த்தகத்தின் பொற்காலம் என்று கருதப்படும் 2007-ஆம் ஆண்டின் சில மாதங்களில், அன்னிய முதலீட்டாளர்களின் மொத்த முதலீட்டில் பங்கேற்பு ஆவணங்களின் பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. 2008-ஆம் ஆண்டில் 25-40 சதவீதமாகவும், 2009-ஆண்டில் 15-20 சதவீதமாகவும் அது குறைந்தது. அதன் பிறகு தொடர்ந்து இந்த முதலீடு சரிந்து வருகிறது.

எப்.பி.ஐ.

அன்னிய நிதி நிறுவனங்கள், துணை கணக்குகள் மற்றும் தகுதி வாய்ந்த அன்னிய முதலீட்டாளர்களை ஒன்றாக இணைத்து வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் (எப்.பி.ஐ) என்னும் புதிய பிரிவை பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அமைப்பு உருவாக்கி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com