

ஒரு கவரை வாங்கி அதில் பணத்தைவைத்து கொடுத்துவிடலாம். அந்த வேலை மிக எளிதானது என்பார்கள். ஆனால் பரிசுப் பொருளை வாங்குவது என்று தீர்மா னித்துவிட்டால் அதற்காக ரொம்ப மெனக்கெடவேண்டும். எந்த பொருளை வாங்குவது? எங்கே வாங்குவது? என்பதில் ஆரம்பித்து, அந்த பொருளை வாங்கி, பேக் செய்து, அதை கொண்டுபோய் கொடுப்பதுவரை பல்வேறு சிரமங்கள் இருப்பதாக சொல்வார்கள்.
அப்படி எல்லாம் இருந்தாலும் பரிசுப் பொருட்கள் எனப்படுபவை மாண்புமிக்கவை. பரிசுப் பொருளை யாருக்கு கொடுக்கிறோமோ அவர் மீது நாம் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறோம் என்பதை அந்த பரிசுப் பொருள் உணர்த்திவிடும். நமக்கு பிடித்தமான ஒருவருக்காக, அவருக்கும்- நமக்கும் பிடித்தது போன்ற ஒரு பொருளை தேர்ந் தெடுக்க நாம் எவ்வளவு அலைந்தாலும் தகும். பரிசளிப்பது, மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி. அது பெறுபவர்களை மகிழ்வித்து, தருபவர்களை கவுரவப்படுத்துகிறது.
காதல் பொக்கிஷம்
காதலில் பரிசுப் பொருட்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அவை காதலை வெளிப் படுத்தவும், வளர்க்கவும் உதவுகின்றன. அதனால் காதல் ஜோடிகள் தங்களுக்குள் வழங்கிக்கொள்ளும் பரிசுகள் மிகுந்த உணர்ச்சிமயமானதாகவும், போற்றிப் பாதுகாக்கப்படும் பொக்கிஷமாகவும் இருக்கிறது. அது விலைமதிப்பை பொருத்ததல்ல. அன்பை பொறுத்தது. ஒருவர் காதல் பரிசை கொடுத்து அதை ஏற்றுக்கொள்ளச் செய்வது என்பது, பொதுத்தேர்வு பரீட்சை ரிசல்ட்டை போன்று அமைந்துவிடுகிறது. முடிவு எப்படியும் இருக்கலாம். ஆனாலும் காதல் பரிசு ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாததாகத்தான் இருக்கிறது.
கல்யாண மகிழ்ச்சி
மணவிழாவில் முக்கிய இடத்தினைப் பெறுவது, பரிசு வழங்கும் நிகழ்ச்சிதான். வாழ்த்த வரும் விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று மணமக்கள் பரிசுகளை பெற்றுக்கொள்வது மறக்க முடியாத நிகழ்ச்சி யாகும். இது அணைபோட முடியாத ஒரு அன்பு பரிமாற்றம். திருமண பரிசு பெரும்பாலும் வீட்டு உபயோகப் பொருட்களாகவோ, பணமாகவோ இருக்கலாம். அதுவே மணமக்களுக்கு வாழ்த்தாகவும் அமைந்து விடுகிறது.
புகுந்த வீட்டில் இருந்து கணவரோடு வாழப்போகும் பெண்களுக்கு பெற்றோரும் உறவினர்களும் பரிசுப் பொருட்களை கொடுத்து வழியனுப்பி வைப்பார்கள். அது பிறந்த வீட்டினரின் அன்பை எடுத்துக் கூறும் விதமாக அமையும். நீ இன்னொரு வீட்டுக்குப் போனாலும் நாங்கள் உன்னை மறக்கமாட்டோம் என்று கூறும் விதமாக பரிசளித்து மகிழ்விப்பார்கள். பரிசு என்பது மனப்பூர்வமாக விரும்பித் தருவது. அதில் எந்தவித கட்டாயமும் இருக்கக்கூடாது. உண்மையான கல்யாணப் பரிசு அன்பின் அதீத வெளிப்பாடு. கல்யாணப் பரிசுகள் பெரும்பாலான வீடுகளில் காலங்காலமாக இருந்து, அன்பை பல தலைமுறைகளாக அடையாளங்காட்டிக் கொண்டிருக்கின்றன.
மகிழ்ச்சிப் பரிசு
பரிசு என்றாலே மகிழ்ச்சிதானே! அது என்ன மகிழ்ச்சிப் பரிசு என்று கேட்கத் தோன்றும். அன்பிற்காக ஏங்கும் உள்ளங் களுக்கு இன்னமும் நாங்கள் உங்களை நினைவில் வைத்திருக்கிறோம் என்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பரிசு வழங்குவது மகிழ்ச்சிப் பரிசாக இருக்கும். இது அன்பை அதிகரிக்கச் செய்து, ஆசீர்வாதங்களை தரவல்லது. வயதான உறவினர்களை பார்க்கப்போகும்போது அவர்களுக்கு பிரியமான ஒன்றை பரிசாக கொடுப்போமானால் அதைவிட சிறந்த மகிழ்ச்சி அவர்களுக்கு வேறு எதுவும் இருக்க முடியாது. இது நாம் அவர்களுக்குத் தரும் மரியாதையாகவும் இருக்கும்.
மனிதநேயப் பரிசு
பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. வாழ்க்கையின் வேகத்தில் சில தருணங் களில் நெருக்கமானவர்களிடம்கூட உரசிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது நமக்குள் எப்போதோ பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தாலும், இப்போதும் நான் உன்னை நேசிக்கிறேன் என்று நேசிக்கப் படுகிறவர்களை சமாதானப்படுத்தவும் பரிசுகள் வழங்கப்படுவதுண்டு. நம்முடைய சமாதான மொழிகளை நம் சார்பாக பரிசுகள் சொல்லும். சமாதானம் என்பது மனித நேயத்தின் அடிப்படைப் பண்பு. அதை அறிவிப்பது மனித நேயப் பரிசாகிவிடுகிறது.
மகத்துவப் பரிசு
எல்லா பரிசுகளும் மகத்துவமானவைதானே! ஆமாம். ஆனால் நாம் செய்யும் தவறு களுக்கு நம் சார்பில் மன்னிப்பு கோரும் பணியையும் சில நேரங்களில் பரிசுகள் செய்கின்றன. மன்னிப்பு மனிதர்களின் நற்பண்புகளில் ஒன்று. நம்முடைய செயல்களால் சிலர் நம்மீது வெறுப்பு கொள்ளலாம். எத்தனை வெறுப்பு நம்மீது மற்றவர்களுக்கு இருந்தாலும் ஒரே ஒரு பரிசு அவர்களுடைய மனோ நிலையை மாற்றி நம் பக்கம் திரும்பச் செய்யும். அதனால்தான் இந்த பரிசு மகத்துவப் பரிசாகிவிடுகிறது.
மறக்காத பரிசு
பல நல்ல நிகழ்வுகள் நம் வாழ்க்கையில் நடக்கும். அதை நமக்கு பிடித்தமானவர்கள் எல்லாம் நினைவில் கொள்ளவேண்டும் என்பதற்காக அந்த நிகழ்வுகளில் நாம் கொடுக்கும் பரிசு மறக்காதப் பரிசாகும். காலங்கள் கடந்த பிறகும் பரிசை பார்த்தவுடன் அந்த நிகழ்வை நினைவில் கொண்டு வந்து நிறுத்துவது இந்த பரிசுகளின் தனித்தன்மை. தருபவரும், பெறுபவரும் என்றும் ஒருவரை ஒருவர் மறந்து போகாமல் இருக்கச் செய்வது இந்த பரிசுகள். நாம் வயதில் முதிர்ந்து போனாலும் இந்த நினைவுப் பரிசுகள் என்றும் இளமையாக இருக்கும்.
பிரியாத பரிசு
நம்மை விட்டுப் பிரிந்து செல்பவர்களுக்கு நாம் தரும் பரிசு, எப்போதும் நாம் அவர்கள் அருகில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தும். அதனால் அது பிரியாதப் பரிசாகிவிடுகிறது. அந்தப் பரிசு, நம் சார்பாக அவர்களுடன் செல்லும். என்றென்றும் நம் நினைவுகளை அவர்களுக்கு எடுத்துச்சொல்லும். பிரிவு என்பது உடலுக்கு வரலாம். மனதுக்கு வரக்கூடாது. பிரிந்தவர்கள் எப்போதும் நம்மை நினைவில் வைத்துக்கொள்ள, நாம் தரும் இத்தகைய பரிசுகள் வழிவகுக்கும்.