

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
இந்தியா, சீனா
சர்வதேச அளவில் தங்கம் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் 3,280 கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதி ஆகி இருந்தது. முந்தைய நிதி ஆண்டில் அது 3,370 கோடி டாலராக இருந்தது. ஆக, டாலர் மதிப்பு அடிப்படையில் தங்கம் இறக்குமதி 3 சதவீதம் குறைந்து இருந்தது.
நடப்பு நிதி ஆண்டில், நவம்பர் வரையிலான 8 மாதங்களில் 2,057 கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதி ஆகி உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 7 சதவீதம் குறைவாகும். அப்போது அது 2,216 கோடி டாலராக இருந்தது.
இதனால், முதல் 8 மாதங்களில் வர்த்தக பற்றாக்குறை (சரக்குகள் இறக்குமதி மதிப்பிற்கும், ஏற்றுமதிக்கும் இடையிலான வித்தியாசம்) 10,684 கோடி டாலராக குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது 13,374 கோடி டாலராக இருந்தது. வர்த்தக பற்றாக்குறை குறைந்துள்ளதால், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை 630 கோடி டாலராக குறைந்து இருக்கிறது. மொத்த உற்பத்தி மதிப்பில் இது 0.9 சதவீதமாகும். சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 1,900 கோடி டாலராக (2.9 சதவீதம்) இருந்தது.
நம் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சுத்த தங்கத்திற்கு முதலில் மொத்தம் 13 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது (10 சதவீத இறக்குமதி வரி+3 சதவீத ஜி.எஸ்.டி). கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தங்கம் இறக்குமதி வரியை (10 சதவீதத்தில் இருந்து) 12.5 சதவீதமாக உயர்த்தினார். எனவே 3 சதவீத ஜி.எஸ்.டி.யும் சேர்த்து ஒட்டுமொத்த இறக்குமதி வரி தற்போது 15.5 சதவீதமாக உள்ளது.
கச்சா வைரங்கள்
இறக்குமதி செய்யப்படும் தங்க கட்டிகள் மற்றும் கச்சா வைரங்கள் மதிப்புக் கூட்டப்பட்டு தங்க, வைர ஆபரணங்களாக மறுஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் பங்கு 14 சதவீதமாக உள்ளது.