பெருகும் மக்கள் தொகை, நெருக்கும் சவால்கள்

உலகின் மக்கள் தொகை 700 கோடியை தாண்டிய நிலையில், வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதால், இது படிப்படியாக குறையும் என்று நம்ப இடமுள்ளது
பெருகும் மக்கள் தொகை, நெருக்கும் சவால்கள்
Published on

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உலக மக்கள் தொகை 776 கோடியை எட்டியுள்ளது. சராசரியாக ஆண்டுக்கு 8.1 கோடி அளவுக்கு மக்கள் தொகை அதிகரித்து வருவதாக வோர்ல்டோமீட்டர் என்ற தகவல் கண்காணிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது.

மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவது ஒரு நல்ல செய்தி. தற்சமயம் இந்த வளர்ச்சி விகிதம் 1.05 சதவீதமாக குறைந்துள்ளது. 2019-ல் 1.08 சதவீதமாகவும், 2018-ல் 1.10 சதவீதமாகவும், 2017-ல் 1.12 சதவீதமாகவும் இருந்தது.

1960-களின் பிற்பகுதியில் உலக மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் உச்சமடைந்து 2 சதவீதத்தை எட்டியது. இன்று இந்த அதிகரிப்பு விகிதம் ஏறக்குறைய சரி பாதியாக குறைந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இது தொடர்ந்து குறையும் என்று ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை பிரிவு, உலக நகரமயமாக்கல் கணிப்புகள், ஜியோனேம்ஸ், ஐக்கிய நாடுகள் புள்ளியியல் பிரிவு, உலக வங்கி மற்றும் பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான நிறுவனம் ஆகியவற்றில் இருந்து தரவுகளை சேகரித்து, கணிக்கும் பணிகளை செய்யும் வோர்ல்டோமீட்டர் நிறுவனம் கூறுகிறது.

ஆப்பிரிக்க நாடான நைஜர் 3.84 வளர்ச்சி விகிதத்தை கொண்டு முதலிடத்திலும், அதற்கு அடுத்து 3.68 சதவீதத்தை கொண்டு பக்ரைன், 3.47 சதவீதத்தை கொண்டு ஈக்கிடோரியல் கினியா ஆகிய நாடுகள் உள்ளன. -2.47 சதவீதத்தை கொண்ட பியூர்டோ ரிகோ, -1.36 சதவீதத்தை கொண்ட லித்துவேனியா மற்றும் -1.08 சதவீதத்தை கொண்ட லாட்வியா ஆகியவை எதிர்மறை வளர்ச்சியை (மக்கள் தொகை குறைதல்) சந்தித்த நாடுகள் ஆகும்.

மக்கள் தொகையின் சராசரி வயது அதிகரிப்பு, குறைவான பிறப்பு விகிதம் மற்றும் இதர மக்கள்தொகை அம்சங்களினால், சில நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருகிறது.

உதாரணமாக, 11-ம் இடத்தில் உள்ள ஜப்பானில், வளர்ச்சி விகிதம் -0.30 சதவீதமாகவும், 23-ம் இடத்தில் உள்ள இத்தாலியில் -0.15 சதவீதமாகவும், 35-வது இடத்தில் உள்ள உக்ரைனில் -0.56 சதவீதமாகவும் உள்ளது.

137.4 கோடி மக்களை கொண்டுள்ள இந்தியா, உலக மக்கள் தொகையில் 17.7 சதவீதத்தை (2020 ஜனவரி 26-ந் தேதி அளவில்) கொண்டுள்ளது. இந்த ஆண்டு மத்தியில் இது 138 கோடியை தாண்டும் என்று கணிக்கப்படுகிறது. உலக மக்கள் தொகையில் 18.47 சதவீதத்தை கொண்டுள்ள, 143.6 கோடி மக்களை கொண்டுள்ள சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

1959-ல் 300 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை, 1999-ல் இருமடங்காக, 600 கோடியாக உயர்ந்தது. இத்துடன் மேலும் ஒரு 50 சதவீதத்தை சேர்க்க, 40 வருடங்கள் தேவைப்படும் என்று கணிக்கப்படுகிறது. 2023-ல் 800 கோடியை எட்டிப்பிடித்து, 2037-ல் 900 கோடியாகவும், 2057-ல் 1,000 கோடியாகவும் அதிகரிக்கும்.

1804-ம் ஆண்டு வாக்கில் உலக மக்கள் தொகை 100 கோடியை எட்டியது. ஆனால் இது இருமடங்காக, 200 கோடியை 1930-களில் எட்ட, அடுத்த 125-130 வருடங்களை எடுத்துக் கொண்டது. 1974-ல் இது மீண்டும் இரட்டிப்பாகி, 400 கோடியை எட்டியது. 15 வருடங்கள் கழித்து, 1987-ல் 500 கோடியை எட்டியது.

மக்கள் தொகை அதிகரிக்கும் விகிதம் குறைந்து வருவதால், இப்போது உள்ள அளவைப் போல் இரு மடங்காக இன்னும் 200 ஆண்டுகள் பிடிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

1999 அக்டோபர் 12-ந் தேதி (600 கோடி தினம் என்று கொண்டாடப்படுகிறது) உலக மக்கள் தொகை 600 கோடியை எட்டியதாக ஐ.நா. கூறுகிறது. ஆனால் உலகம், 600 கோடி மைல் கல்லை, 1999 ஜூலை 22-ந் தேதி, அதிகாலை 3.49 மணிக்கு எட்டியதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுவனம் கூறுகிறது.

முக்கிய மதங்கள்

உலக மக்கள் தொகையில் சுமார் 31 சதவீதத்தை (217 கோடி) கொண்டுள்ள கிறிஸ்தவர்கள் தான் மொத்த மக்கள் தொகையில் மிகப் பெரும் பங்கை வகிக்கின்றனர்.

இவர்களில் சுமார் 50 சதவீதத்தினர் கத்தோலிக்கர்கள், 37 சதவீதத்தினர் புரொடெஸ்டன்ட் பிரிவை சேர்ந்தவர்கள், 13 சதவீதத்தினர் வைதீக பிரிவினர் மற்றும் ஒரு சதவீதத்தினர் இதர உட் பிரிவினர் என்று, 2010-ன் மக்கள் தொகையான 690 கோடியை அடிப்படையாக கொண்டு பியு போரம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வை எடுத்துக் காட்டி, வோர்ல்டோமீட்டர் அமைப்பு கூறுகிறது. உலக மக்கள் தொகையில் 23 சதவீதத்தை (159 கோடி) கொண்டுள்ள முஸ்லிம்கள் அடுத்த இடத்தில் உள்ளனர். இவர்களில் 87 - 90 சதவீதத்தினர் சன்னி பிரிவை சேர்ந்தவர்கள், 10 - 13 சதவீதத்தினர் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள்.

112 கோடி மக்களை கொண்ட, மொத்த உலக மக்கள் தொகையில் 16 சதவீதமாக உள்ள மூன்றாவது பிரிவினரில் ஆத்திகர்கள், எந்த மதத்தையும் சாராதவர்கள், இறை நம்பிக்கையில் நடுவுநிலமை வகிப்பவர்கள் ஆகியோர் வருகின்றனர். அமெரிக்காவில் ஐந்தில் ஒருவர் எந்த மதத்தையும் சாராதவர் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

உலகெங்கும் உள்ள இந்துக்களின் மக்கள் தொகை 100 கோடிக்கும் சற்று அதிகமாக, உலக மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதமாக, நான்காவது இடத்தில் உள்ளது. இவர்களின் 94 சதவீதத்தினர் இந்தியாவில் வாழ்கின்றனர்.

சீனாவின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கினை மட்டுமே இந்தியா கொண்டுள்ளதால் இந்தியாவில் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு 464 நபர்களும், சீனாவில் 153 நபர்களும் உள்ளனர். இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 35 சதவீதத்தினர் நகரங்களில் வசிக்கின்றனர். ஒப்பீட்டளவில், சீனாவில் இது 60.9 சதவீதமாக உள்ளது.

இந்திய மக்களின் சராசரி வயதான 28.4 வருடங்களை ஒப்பிடுகையில், 38.8 வருடங்களை சராசரி வயதாக கொண்டுள்ள சீனாவின் மக்கள் தொகை வேகமாக வயது முதிர்ந்து வருகிறது.

22 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ள, உலக மக்கள் தொகையில் 2.83 சதவீதத்தை கொண்ட பாகிஸ்தான் நான்காவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் மக்கள் தொகை அடர்த்தி, சதுர கிலோமீட்டருக்கு 287-ஆக உள்ளது. அங்கு 35.1 சதவீதத்தினர் நகரங்களில் வசிக்கின்றனர். பாகிஸ்தான் மக்களின் சராசரி வயது 22.8 வருடங்களாக உள்ளது.

உலக மக்கள் தொகையில் 59.76 சதவீதத்தை கொண்ட, 462 கோடி மக்கள் தொகையுடைய ஆசிய கண்டம் முதலிடத்தில் உள்ளது. 3,10,33,131 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ள ஆசியா, சதுர கிலோமீட்டருக்கு 150 நபர்கள் என்ற மக்கள் தொகை அடர்த்தியை கொண்டுள்ளது. இந்த பிராந்தியத்தின் மக்கள் தொகையில் பாதி பேர், நகரத்தில் வசிக்கின்றனர். சராசரி வயது 32 வருடங்களாக உள்ளது.

கடந்த வருடத்தில், இந்தியாவின் மக்கள் தொகையில் 1.3 கோடி பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். ஒப்பிடுகையில் இதே கால கட்டத்தில் சீனாவில் இது 55 லட்சமாக உள்ளது.

2050-ல் உலகில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும். சீனாவை விட இரண்டரை மடங்கு அதிக வேகத்தில் அதிகரித்து, சீனாவை விட 20 கோடி அதிக மக்கள் தொகை கொண்டிருக்கும்.

2050-ல் நைஜீரியாவின் மக்கள் தொகை 40 கோடியாகவும், அமெரிக்காவின் மக்கள் தொகை 40 கோடியாகவும், பாகிஸ்தானின் மக்கள் தொகை 33.8 கோடியாகவும் இருக்கும்.

பல்வேறு சவால்கள்

உலக மக்கள் தொகை பல்வேறு சவால்களை, முரண்பாடுகளை, வளங்களில் சமத்துவமின்மைகளை எதிர்கொண்டுள்ளது. 84 கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக இருக்கும் இவ்வுலகில், 168 கோடி பேர் அதிக எடை கொண்டவர்களாகவும், 75 கோடியினர் உடல் பருமன் கொண்டவர்களாகவும் உள்ளனர். ஜனவரி 2020-ல், ஒரே நாளில் 23,474 பேர் உலகெங்கும் பட்டினியால் மடிந்துள்ள நிலையில், அமெரிக்காவில் உடல் பருமன் சம்பந்தப்பட்ட நோய்களுக்காக 430 கோடி டாலர்கள், 2020 ஜனவரியில், ஒரு நாளில் செலவிடப்பட்டுள்ளது.

தோராயமாக 31.7 கோடி லிட்டர் தண்ணீரை சென்ற ஆண்டு மக்கள் பயன்படுத்தினர். அதே காலகட்டத்தில் தண்ணீர் சம்பந்தப்பட்ட நோய்களினால் 61,000 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 80.39 கோடி பேருக்கு பாதுகாப்பான குடிநீர் வசதிகள் கிடைக்கவில்லை.

உலக அளவில் சராசரி ஆயுள் காலத்தின் அளவு 73 வருடங்களாக (பெண்களுக்கு 75.6 வருடங்கள், ஆண்களுக்கு 70.8 வருடங்கள்) உள்ளது. இந்தியாவில் சராசரி ஆயுள் 70.42 வருடங்கள் (பெண்களுக்கு 71.8 வருடங்கள், ஆண்களுக்கு 69.16 வருடங்கள்) என்பதன் அடிப்படையில், 191 நாடுகளின் பட்டியலில் 135-வது இடத்தில் உள்ளது.

64-வது இடத்தில் இருக்கும் சீனாவில் சராசரி ஆயுளின் அளவு 77.47ஆக (பெண்களுக்கு 70.93 வருடங்கள், ஆண்களுக்கு 75.36 வருடங்கள்) உள்ளது.

85.29 வருடங்கள் சராசரி ஆயுள் அளவை கொண்டு ஹாங்காங் முதல் இடத்தில் உள்ளது. 85.03 வருடங்களை கொண்ட ஜப்பான் இரண்டாவது இடத்திலும், 84.68 வருடங்களை கொண்ட மேக்கூ மூன்றாவது இடத்திலும் உள்ளன. 54.36 வருடங்களை கொண்ட மத்திய ஆப்பிரிக்க குடியரசு கடைசி இடத்தில் உள்ளது. 148-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான், 67.61 வருடங்களை கொண்டுள்ளது.

விமர்சனங்களை மின்னஞ்சலில் அனுப்ப: NRD.thanthi@dt.co.in

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com