வாழ்வியல் செழிக்க வழிகாட்டுதல் அவசியம்

ஒரு சமூகத்தின் பின்புலம், அதன் கட்டமைப்பு, பழக்க வழக்கங்கள், பண்பாடு ஆகியவை தனி மனித வாழ்வியலை மையப்படுத்தும்.
வாழ்வியல் செழிக்க வழிகாட்டுதல் அவசியம்
Published on

ஒரு சமூகத்தின் பின்புலம், அதன் கட்டமைப்பு, பழக்க வழக்கங்கள், பண்பாடு ஆகியவை தனி மனித வாழ்வியலை மையப்படுத்தும். முன்னிறுத்தியும் சுற்றி சுழல்கின்றன. அதே சமயத்தில் தனி மனிதனின் ஒழுக்கம் தடம் மாறும் போது ஓட்டு மொத்த சமூகத்தின் வாழ்வியல் கேள்விக்குறியாகிறது. இன்றைக்கு சமுதாயத்தில் கொலை, கொள்ளை, போதைக்கு அடிமை ஏமாற்றுதல் போன்றவை அதிகமாக நடக்கிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள், மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர். நம் பாரம்பரியத்தில் மட்டுமே உறவுகளுக்கு மாமன், மைத்துனர் என்பது போன்ற தனித்தனி பெயருண்டு. தற்போதைய காலக்கட்டத்தில் உறவுகள் மதிக்கப்படுவதில்லை. பண்பாடு, கலாசாரம் மிக்க வாழ்வியலை மையமாக கொண்டது தமிழினம். பல்வேறு கலைகளை உலகிற்கு அடையாளம் காண்பித்ததும், உடலுக்கு உரமூட்டிய விளையாட்டுக்களை தத்து எடுத்ததும் தமிழ் பரம்பரை என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் செய்தி. பண்டைக்காலம் தொட்டு இன்று வரை வாழ்வியலின் ஒவ்வொரு நகர்விலும் பலவிதமான மாற்றங்கள். ஏற்றங்களை இதை தொடர்ந்து தான் நாம் பயணித்து வருகிறோம். மின்சாரம், தொலைபேசி, இணையம், அலைபேசி இல்லாத காலத்தில் ஒரு விதமான மன அமைதியுடனும், நல்லாழுக்கத்துடன் நம் சந்ததியினர் வாழ்ந்து மறைந்தனர். இது தமிழரின் அடிச்சுவடு என்றால் மிகை ஆகாது. இன்று சகல வசதிகளும் இருக்கிறது. ஆனால் சந்தோஷங்கள் இருக்கிறதா என்றால் கேள்விக்குறியே.

இணையமும், அலைபேசியும் இணைந்து இன்றைய இளைய தலைமுறையினரை தம் ஆளுமையால் அடிமைப்படுத்தி வைத்து இருக்கிறது என்பது வருத்தம் கொள்ள வேண்டிய செய்தியே. தாயம், பல்லாங்குழி, பாண்டி ஆட்டம், சடுகுடு, ஆடுபுலி, கில்லி அடித்தல் போன்ற நம் தமிழரின் பாரம்பரிய விளையாட்டில் இருந்த மன நிம்மியும் சந்தோஷமும் இன்று காற்றில் பறந்துவிட்டது. இந்த விளையாட்டுக்களை நாம் மறந்தது குற்றமா, இல்லை நம் சந்ததியினருக்கு சொல்லி கொடுக்காமல் ஒதுங்கி கொண்டோமா என்ற கேள்வியும் எழத்தான் செய்திகறது. பாரம்பரிய பண்பாடு சார்ந்த நமது விளையாட்டுகள் நம்மை பாதுகாத்தன. இந்த விளையாட்டுகளின் பெயர்களை கூட அறியாத இளம் தலைமுறையினர் இணையத்தின் விளையாட் டால் ஈர்க்கப்பட்டு தவறான பாதையில் விழுந்து விடுகின்றனர். நமக்கு பின்னால் நம் குடும்பம், இந்த சமுதாயம், இந்த நாடு, நம்மை தூக்கிபிடிக்க காத்திருக்கிறது என்பதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும்.இணையதளத்தில் நல்ல செய்திகள் பல இருப்பினும், கெட்டுப்போகக் கூடிய வழிகள் கொட்டிக்கிடக்கிறது. அதனால் பாதை மாறாத பயணத்திற்கு வழி அமைத்து கொடுப்பது நமது கடமை, கடந்த தலைமுறையினருக்கு மன அழுத்தம் என்றால் என்னவென்று தெரியாது. ஆனால் தற்போதுள்ள தலைமுறையில் மன அழுத்தத்தினால் மாண்டுபோனவர்கள் பல பேர். இதிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது தான் நமது முக்கிய கடமையாகும். எனவே பெற்றோருக்கும், குழந்தைக்கும் உள்ள இடைவெளியை குறைத்து இணக்கமான வாழ்வியலை உருவாக்க வேண்டும்.

ஒரு இனத்தின் பண்பாடு நாகரிகம், மொழிப்பற்று, நாட்டுப்பற்று, மானுடநேயம் ஆகியவற்றை எதிர்கால குடிமக்களாகிய மாணவர்களிடம் எடுத்துரைப்பதும், ஏற்றம் பெற செய்வதும் ஆசிரியர்களே. இன்றைக்குப் பள்ளிகள் அனைத்தும் மதிப்பெண் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக மாறிவிட்டன. நமது மாணவர்களுக்கு அறிவுடையார் என்ற பெருமை மட்டும் போதாது. அவர்கள் பண்புடையாளர் என்ற புகழும் பெற வேண்டும். அதைப்போல இலக்கியம் பற்றிய ஒரு கருத்தாடலை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு பல்கலைக்கழங்களிலும், இலக்கிய இருக்கைகள், அறக்கட்டளைகள் ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். அந்தந்த அறக்கட்டளைகளின் வாயிலாக இலக்கிய சம்பந்தமான கருத்தரங்கங்கள் நடத்தி ஆய்வுக்கட்டுரைகள், வெளியிடப்பட வேண்டும். இலக்கியங்களில் உள்ள அறக்கோட்பாடுகள் அதன் வழி தமிழரின் கலாசார பண்பாடுகள் மற்றும் சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை உலக அளவில் நாளைய சமூகத்திற்கு படம் பிடித்துக்காட்ட தகவல் தொழில் நுட்ப கணினியின் இணையதளம், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள், இலக்கிய அமைப்புகள் என அனைத்துத் தரப்பு தளங்களும் ஒன்று சேர்ந்து முயன்றால் நம் வாழிவியல் வளம்பெறும். அதுவே நம் வாழிவியல் செழிக்க வழிகாட்டும் இலக்கியத்தின் பயன்களாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com