4 மாதங்களாக ஹேக் செய்யப்பட்ட போன்! எத்தனை முறை போனை மாற்றினாலும் மீண்டும் தொடரும் ஹேக்கரின் அட்டூழியம்!!

அவரது சமூக ஊடக கணக்குகள், தொலைபேசி எண்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு எண்கள், ஆதார் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை அக்டோபர் 2021 முதல் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
4 மாதங்களாக ஹேக் செய்யப்பட்ட போன்! எத்தனை முறை போனை மாற்றினாலும் மீண்டும் தொடரும் ஹேக்கரின் அட்டூழியம்!!
Published on

மும்பை,

கம்ப்யூட்டர், மொபைல் போன்கள், இணையதளத்தில் சட்ட விரோதமாக புகுந்து தகவல்களை திருடுபவர்கள், அழிப்பவர்கள் ஹேக்கர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் மும்பையை சேர்ந்த, பன்னாட்டு நிறுவனத்தில் பெரும் பொறுப்பில் இருக்கும் சந்தன் குமார் என்பவருடைய மொபைல் போனை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர். அவரது சமூக ஊடக கணக்குகள், தொலைபேசி எண்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு எண்கள், ஆதார் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை அக்டோபர் 2021 முதல் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

இவர் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் போன் மற்றும் சாதனங்களை பயன்படுத்தி வருகிறார். குமார் ஒரு வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் முன்னணி சர்வதேச வங்கிகளில் பணிபுரிந்தவர், மேலும் இந்தியா திரும்புவதற்கு முன் எட்டு ஆண்டுகள் லண்டன் மற்றும் சிங்கப்பூரில் வாழ்ந்து வந்தார்.

இது எப்படி நடந்தது என்பதை சைபர் கிரைம் போலீசாராலும், பிரத்யேகமாக ஒரு ஹேக்கரை நியமித்து முயற்சி செய்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த ஹேக்கரை கண்டுபிடிப்பதற்காக பிரத்யேகமாக கணிணி மென்பொருள் பொறியாளர் ஒருவரை நியமித்தும் பலனில்லை.

ஹேக்கர் படுத்தும்பாடு

அவருடைய மொபைல் போன் மற்றும் அவரது மனைவியின் போன்களிலிருந்து தானாகவே அழைப்புகள் செல்கின்றன. இணையத்தில் இருந்து ஆஃப்கள் தானாகவே அவருடைய போனில் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன.

வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் அவரது மனைவியின் எண்ணிலிருந்து அவருக்கு போன் அழைப்பு வரும். ஆனால் அந்த அழைப்பை அவரது மனைவி செய்யவில்லை. தானாகவே இவருடைய எண்ணுக்கு போன் அழைப்பு வரும். இதைபார்த்து இருவரும் குழப்பமடைவர்.

அவருடைய உறவினர்களின் மொபைல் எண்ணுக்கு குமார் எண்ணிலிருந்தும் அவருடைய மனைவியின் எண்ணிலிருந்தும் போன் அழைப்புகள் செல்லும். அவர்கள் நிஜமாகவே குமார் தான் அழைக்கிறார் என்று எண்ணி அந்த அழைப்புகளை ஏற்று பேசினால், மறுபுறம் அமைதி மட்டுமே நிலவும். அந்த பக்கம் இருக்கும் ஹேக்கர் எதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்துவிடுவான். இப்படி ஒருநாளைக்கு பல முறை உறவினர்களுக்கு அழைப்புகள் செல்வது வாடிக்கையாகிவிட்டது.

இதனால் நிஜமாகவே, குமார் போனில் அழைத்தாலும் அவரது உறவினர்கள் போனை எடுப்பதில்லை என்று குமார் வருத்தப்பட்டார்.

பணம் பறிப்பு

குமாருடைய மனைவியின் தோழிகளுக்கு எஸ் எம் எஸ் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளான் அந்த ஹேக்கர். எனக்கு கால் செய்ய வேண்டாம். பணத்தை மட்டும் அனுப்பி வைக்கவும் என்று எஸ் எம் எஸ் சென்றுள்ளது. அதன்பின் அவர்கள் குமாருக்கு அழைத்து விசாரித்த போது தான் அவரது மனைவியின் போனும் ஹேக் செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தெரியாமல் சிலர் பணத்தையும் அனுப்பி ஏமாந்துள்ளனர்.

போனை மாற்றியும் பலனில்லை

குமார் தனது ஐபோன் மற்றும் சிம் கார்டுகளை இரண்டு முறை மாற்றினார். ஐபோனில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் இருக்கலாம் என்று சந்தேகித்து ஆண்ட்ராய்டு போனை வாங்கினார். தனது அடையாளம் தெரியாமல் இருக்க நண்பர்களின் ஆவணங்களை சமர்ப்பித்து புதிய சிம்கார்டுகளை வாங்கியுள்ளார்.

ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக, புதிதாக அவர் வாங்கி பயன்படுத்தும் மொபைல் கைபேசிகள் மற்றும் சிம் கார்டுகள் ஒவ்வொன்றையும் ஹேக்கர் கைப்பற்றியதால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.

அந்த ஜெகஜால கில்லாடி ஹேக்கரை கண்டுபிடிப்பதற்காக போலீஸ் உதவியுடன் ஒரு திறமையான ஹேக்கரை நியமித்தனர். ஆனால் அந்த ஹேக்கர் இந்த புது ஹேக்கருக்கும் போன் செய்து தொல்லை கொடுத்துள்ளான். அவரால் அந்த ஹேக்கரை கண்டுபிடிக்க இயலவில்லை.

வாட்ஸ்அப் ஹேக்

2021 அக்டோபரில் ஒரு பயண இணையதளத்தில் டிக்கெட்டை முன்பதிவு செய்த பிறகு இந்த பிரச்சினை தொடங்கியது. எனது கேஜெட்களை ஹேக்கர் எப்படி கைப்பற்றினார் என்பது மர்மமாக உள்ளது. எனது வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எஸ் எம் எஸ் மற்றும் தொலைபேசி அழைப்புகள் என்னுடைய தொலைபேசியிலிருந்து தானாகவே செய்யப்படுகின்றன என்று சந்தன் குமார் கூறினார்.

அவர் தனது தொலைபேசியிலோ மின்னஞ்சலிலோ சந்தேகத்திற்கிடமான எந்த இணைப்பையும் க்ளிக் செய்யவில்லை(திறக்கவில்லை) அல்லது யாருக்கும் தனது கைபேசியை கொடுக்கவில்லை. அப்படியிருந்தும் போன் மற்றும் சாதனங்கள் ஹேக் செய்யப்பட்டது.

ஹேக்கர் ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி, லண்டன் மற்றும் சிங்கப்பூரில் குமாருக்கு தெரிந்தவர்களை சேர்த்துள்ளான். வங்கிகளில் குமாரின் பேரில் கடன் வாங்க விண்ணப்பைத்துள்ளான் அந்த ஹேக்கர்.

சைபர் கிரைம் போலீசார்

குமார் நவம்பர் 3, 2021 அன்று நவி மும்பை போலீசில் புகார் செய்தார். அதன்பின், அந்த ஹேக்கர் குமாருடைய குடும்பத்தை விரைவில் கொன்றுவிடுவதாக மிரட்டத் தொடங்கியுள்ளான். இதையும் அவர் போலீசில் தெரிவித்துள்ளார்.

குமாரின் தூக்கம் பறிபோனது

ஹேக்கரை இதுவரை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனது வழக்கு சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினருக்கும் பெரும் சவாலாக உள்ளது. என்னை துன்புறுத்துவதே ஹேக்கரின் நோக்கம்.

அந்த ஹேக்கர் இதுவரை எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அவர் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. அவர் செய்தால், அவர் என்ன விரும்புகிறார் என்பதை நான் அறிந்து கொள்வேன்.

எங்கள் மொபைல் போன், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகள் மீது ஹேக்கருக்கு முழு கட்டுப்பாடு உள்ளது. நாங்கள் அவருடைய கைப்பாவையாகி விட்டோம்; நாங்கள் ஆதரவற்றவர்களாக நிற்கிறோம்.

மொபைல் அடித்தால் நாங்கள் அனைவரும் பயப்படுகிறோம். எங்களால் சரியாக தூங்க முடிவதில்லை.

மராட்டிய காவல்துறையின் சைபர் செக்யூரிட்டி பிரிவைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், குமாரின் வழக்கு தனித்துவமானது. அவருடைய போன் எங்கிருந்து ஹேக் செய்யப்பட்டது எப்போது நடந்தது என்பது போன்ற விவரங்கள் குறித்து இதுவரையில் துப்பு கிடைக்கவில்லை என்றார்.

சினிமா பட பாணியில் செயல்படும் ஹேக்கர்

2013ம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான மலையாள திரைப்படமான சைலன்ஸ் படத்தில் ஒரு மர்ம நபர், திரை மறைவிலிருந்து கதாநாயகனை மிரட்டி சில காரியங்களை செய்வான். அவன் எதற்காக அப்படி செய்கிறான் என்பது கதாநாயகனுக்கு தெரியாது. அந்த படத்தின் திரைக்கதை அப்படி அமைக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட அதே பாணியில் தன் குமாருடைய பிரச்சினையும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com