தலைவலி, முதுகுவலியை போக்கும் பொருட்கள்

தலைவலி, முதுகுவலி, மூட்டுவலி போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் பெரும்பாலும் வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்துவார்கள்
தலைவலி, முதுகுவலியை போக்கும் பொருட்கள்
Published on

நீண்ட காலமாக வலி நிவாரணிகளை பயன்படுத்தும்போது பல்வேறு வகையில் உடலுக்கு பாதிப்பு நேரக்கூடும். வலி ஏற்படும்போதெல்லாம் வலி நிவாணிகளை பயன்படுத்தும் நிர்பந்தமும் ஏற்பட்டுவிடும். சிலருக்கு வலி நிவாரணிகள் ஒத்துக்கொள்ளாமல் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களையே வலி நிவாரணிகளாக பயன்படுத்தினால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.

உணவுக்கு சுவையையும், நறுமணத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும் கிராம்பை வலி நிவாரணியாகவும் பயன்படுத்தலாம். பல்வலி, வீக்கம், தலைவலி, குமட்டல் போன்ற பாதிப்புக்குள்ளாகிறவர்கள் இரண்டு, மூன்று கிராம்புகளை மெல்லலாம். நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் பல்வேறு மருத்துவ குணம் கொண்டது. இதனை அனைத்து வயதினரும் உபயோகிக்கலாம். உடலில் வீக்கம் மற்றும் காயத்தால் அவதிப்படுபவர்களுக்கு மஞ்சள் அருமருந்து. மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற வேதிப்பொருள் உடல் ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும். உடல் வலி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் மஞ்சளை தூளாக்கி நீரிலோ, பாலிலோ கலந்து பருகலாம். டீயில் சேர்த்தும் பருகலாம்.

லாவண்டர் எண்ணெய்க்கும் உடல் வலியை போக்கும் ஆற்றல் இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் செய்யும். தலைவலியால் அவதிப்படுபவர்கள் லாவண்டர் எண்ணெய்யை பயன்படுத்தலாம். எனினும் வலி ஏற்படும் இடங்களில் லாவண்டர் எண்ணெய்யை நேரடியாக உபயோகிக்கக்கூடாது. தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற ஏதாவதொரு எண்ணெய்யுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

உடல் வலி, வீக்கத்தை போக்குவதற்கு சூடான மற்றும் குளிர்ச்சியான பொருட்களையும் பயன்படுத்தலாம். குறிப்பாக ஐஸ்கட்டிகளை டவலில் வைத்து வலி ஏற்படும் இடங்களில் அழுத்தி ஒத்தடம் கொடுக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com