ஆரோக்கியம் தரும் கிழங்குகள் ‘ஐந்து’

மரவள்ளிக் கிழங்கு மகத்துவம் நிறைந்தது. வேகவைத்து தனியாகவே சாப்பிட்டு பசியை போக்கலாம். கேரளாவில் கப்பைகிழங்கு என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள மக்கள் இந்த கிழங்கை வேகவைத்து மீன் குழம்பு கலந்து முழுநேர உணவாக சாப்பிடுவார்கள்.
ஆரோக்கியம் தரும் கிழங்குகள் ‘ஐந்து’
Published on

குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இது ஏற்றது. மெக்னீஷியம், பொட்டாசியம், கந்தகம், குளோரைடு போன்றவைகளோடு நார்ச்சத்தும் இதில் நிறைந்திருக்கிறது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்தும் இதில் இருக்கிறது. வளரிளம் பருவத்தினருக்கு இது மிகவும் ஏற்ற உணவு. ஜவ்வரிசி மரவள்ளிக்கிழங்கில் இருந்துதான் தயார்செய்யப்படுகிறது. சிறுநீரக நோயாளிகள் இதனை மிக குறைந்த அளவிலே சாப்பிடவேண்டும். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவேண்டும்.

கருணைக்கிழங்கு மருத்துவகுணம் நிறைந்தது. மூலநோய்க்கு மருந்தாக பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. இதை சாப்பிட்டால் உடலுக்கு அதிக சக்தி கிடைப்பதோடு, குளிர்ச்சியும் கிடைக்கும். ஜீரணசக்தியும் மேம்படும். இதில் மாவுச் சத்தும், பொட்டாசியமும் அதிகம் இருக்கிறது. போலிக் ஆசிட், மெக்னீஷியம், துத்தநாகம், நார்ச்சத்து போன்றவைகளும் ஓரளவு கருணைக்கிழங்கில் இருக்கிறது. உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களும், கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

சேனைக்கிழங்கை உடல்எடையை குறைக்க விரும்புகிறவர்கள் அதிகம் சாப்பிடலாம். மாவுச்சத்தும், பொட்டாசியமும் இதில் அதிகம் இருக்கிறது. தொடர்ந்து இதனை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும். புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பீட்டாகரோட்டின், நியாசின் போன்ற சத்துக்களும் இதில் இருக்கின்றன. வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இதனை போதுமான அளவு சாப்பிடலாம். சிறுநீரக நோயாளிகள் இதனை சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவில் உட்கொள்ளவேண்டும்.

இனிப்புச் சுவை நிறைந்தது, சர்க்கரை வள்ளிக்கிழங்கு. இது உடலுக்கு அதிக சக்தியை தரவல்லது. இதில் இருக்கும் மாவுச்சத்து உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது. பொட்டாசியம், வைட்டமின்-சி, மெக்னீஷியம்,

நார்ச்சத்து, புரதம், கால்சியம், பீட்டாகரோட்டின் போன்ற சத்துக்களும் இதில் காணப்படுகின்றன. உடல் எடை அதிகமாக இருப்பவர்களும், சர்க்கரை நோய் கொண்டவர்களும் இதனை சாப்பிடக்கூடாது. விளையாட்டு வீரர்கள் அதிகம்

சாப்பிடலாம். சிறுநீரக நோய் இருப்பவர்கள் குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.

கிழங்கு வகைகளில் முதன்மையானது, உருளைக்கிழங்கு. உலகம் முழுக்க உள்ள மக்கள் இதனை விரும்பி சுவைக்கிறார்கள். எண்ணற்ற உணவுவகைகளில் உருளைக்கிழங்கு சேர்க்கப்படுகிறது. மாவுச்சத்து, கோலின், பொட்டாசியம், புரதம், கால்சியம், நார்ச்சத்து போன்றவை இதில் இருக்கின்றன. சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் மிதமான அளவில் இதனை உட்கொள்ளலாம். குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளுக்கு இது ஏற்ற உணவு. அவைகளுக்கு எட்டாவது மாதத்திலே உருளைக்கிழங்கை மசித்து, வெண்ணெய் கலந்து கூழாக்கி தினமும் இரண்டு தேக்கரண்டி அளவுக்கு கொடுக்கலாம். கொடுத்தால் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்கும். அதிக சக்தியும் கிடைக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com