மாரடைப்பும்.. ரத்த வகையும்!

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் நிகழும் இறப்பு களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இதய நோய் அமைந்திருக்கிறது. மாரடைப்பும், பக்கவாதமும்தான் இதய நோய் சார்ந்த பாதிப்புகளில் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
மாரடைப்பும்.. ரத்த வகையும்!
Published on

மாரடைப்புக்கும், ரத்த வகைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது ஆய்வுகளின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதிலும் ஓ ரத்த வகை அல்லாதவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கிறது. இது தொடர்பான ஆய்வுக்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உட்படுத்தப்பட்டனர். ஆய்வின் முடிவில் ஏ அல்லது பி ரத்த வகை உடையவர்களுக்கு ஓ ரத்த வகையை கொண்டவர்களை விட மாரடைப்பு ஏற்படும் அபாயம் 8 சதவீதம் அதிகமாக இருக்கும் என்பது கண்டறியப்பட்டது.

2017-ம் ஆண்டிலும் 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இதேபோன்ற ஆய்வை ஐரோப்பிய இருதயவியல் சங்கம் மேற்கொண்டது. அந்த ஆய்வில் ஓ ரத்த வகை அல்லாமல் பிற ரத்த வகை (ஏ, பி, ஏ.பி) கொண்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் 9 சதவீதம் அதிகமாக இருக்கும் என்பது தெரியவந்தது. அப்போது ஆராய்ச்சியாளர்கள் ஏ மற்றும் பி ரத்த வகையை ஓ ரத்த வகையுடன் ஒப்பிட்டனர். அதில் பி ரத்த வகை உள்ளவர்களுக்கு மற்ற ரத்த வகையை கொண்டவர்களை விட மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. அதிலும், ஓ ரத்த வகை கொண்ட நபர்களுடன் ஒப்பிடும்போது பி ரத்த வகை கொண்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் 15 சதவீதம் அதிகம். ஓ ரத்த வகையுடன் ஒப்பிடும்போது ஏ ரத்த வகை உள்ளவர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் 11 சதவீதம் அதிகம். இதய செயலிழப்பு, மாரடைப்பு இரண்டும் இதய நோயின் வடிவங்களாகும். ஆனால் மாரடைப்பு திடீரென்று ஏற்படக்கூடியது. இதய செயலிழப்பு நோய் பாதிப்பு அதிகரிக்கும்போது நிகழும். மாரடைப்பு காரணமாக காலப்போக்கில் இதய செயலிழப்பு நேரிடலாம்.

ஐரோப்பிய கார்டியாலஜி சொசைட்டியின் கருத்துப்படி, ஓ-வகை ரத்தக் குழுக்கள் இல்லாதவர்களுக்கு மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு ஏற்படு வதற்கு அவை ரத்தக் கட்டிகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் காரணமாக இருக்கலாம். மாரடைப்புக்கு ரத்தக் கட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை தமனிகளின் செயல்பாட்டை தடுக்கின்றன. இதய தசைகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. இதன் விளைவாக மாரடைப்பு ஏற்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com