சாப்பிட்ட உடனேயே தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்

சாப்பிட்ட பிறகு தண்ணீர் பருகுவது செரிமானத்தை மெதுவாக்கும்.
சாப்பிட்ட உடனேயே தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்
Published on

உணவு சாப்பிட்டு முடித்ததும் குட்டித்தூக்கம் போடும் வழக்கம் பலருக்கு இருக்கிறது. அதனை தொடர்ந்து பின்பற்றுவது நெஞ்செரிச்சல், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுதல் மற்றும் குறட்டை பிரச்சினைக்கு வழிவகுக்கும். சிலர் டீ, காபி பருகுவார்கள். அப்படி பருகினால் உடல், இரும்புச்சத்தை உறிஞ்சுவது கடினமாகிவிடும். செரிமானத்திற்கும் இடையூறு ஏற்பட்டுவிடும். சாப்பிட்டு முடித்ததும் ஒரு மணி நேரத்திற்கு பிறகு டீ, காபி பருகலாம். சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய மேலும் சில பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

தண்ணீர் பருகுதல்

சாப்பிடும்போதோ, சாப்பிட்டு முடித்த உடனேயோ தண்ணீர் பருகும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. அப்படி தண்ணீர் பருகுவது செரிமானத்தை மெதுவாக்கும், அசிடிட்டி, வீக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் அதனை தவிர்க்க வேண்டும். உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் பருகலாம். அல்லது சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து உட்கொள்ளலாம்.

உடற்பயிற்சி செய்தல்

சாப்பிட்ட உடனேயே உடற்பயிற்சி செய்வது சரியானது அல்ல. இதுவும் செரிமான செயல்முறைக்கு இடையூறு விளைவிக்கும். செரிமானம் நடைபெறுவதற்கு உடலுக்கு போதுமான ஆற்றல் தேவைப்படும். உடற்பயிற்சி செய்யும்போது அந்த ஆற்றல் செலவிடப்படுவதால் செரிமானம் தடைபடும். வயிற்று பிடிப்பு, வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

பெல்ட்டை தளர்த்துதல்

உணவு உட்கொண்ட பிறகு பெல்ட்டை தளர்த்தும் வழக்கம் பலருக்கு இருக்கிறது. அதனை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது இரைப்பையின் செயல்பாடுகளை தடுக்கும். பிற உடல்நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

குளித்தல்

சாப்பிட்ட பிறகு செரிமானத்திற்கு உதவுவதற்காக ரத்தம் வயிற்றை சூழ்ந்திருக்கும். அந்த சமயத்தில் குளிக்கும்போது உடலின் வெப்பநிலை மாறத் தொடங்கும். உடலை அதன் அசல் வெப்பநிலைக்கு திருப்புவதற்காக வயிற்றில் இருந்து ரத்தத்தை திசை திருப்பும். இதனால் ரத்தத்தின் பங்களிப்பு குறைந்து செரிமானம் பாதிப்புக்குள்ளாகும். வழக்கத்தை விட மெதுவாக செரிமானம் நடக்கும். அது தேவையற்ற அசவுகரியங்களை ஏற்படுத்தும்.

புகை, மது பழக்கம்

சாப்பிட்ட பிறகு புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் 10 மடங்கு கூடுதலாக தீங்கு விளைவிக்கும். சிகரெட்டில் உள்ள நிகோடின் ஆக்சிஜன் மற்றும் ஹீமோகுளோபினுடன் கலந்து உடலின் பிற பகுதிகளுக்கு செல்லும் ரத்த வினியோகத்தை தடுத்துவிடும். குடலில் எரிச்சலை உண்டாக்கும். புண்களையும் ஏற்படுத்தும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com