

ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்புகளில் பேசன் புரோ மிகச் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் விற்பனை 10 கோடியை எட்டியுள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக இந்த மாடலில் ஸ்பெஷல் எடிஷன் (பேசன் புரோ 100 மில்லியன் ஸ்பெஷல் எடிஷன்) மோட்டார் சைக்கிளை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சிவப்பு-வெள்ளை கலந்த நிறத்தில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கருப்பு நிற அலாய் சக்கரம் இதன் தோற்றப் பொலிவை மேலும் மெருகூட்டுகிறது.
இது 113 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டுள்ளது. இது 9.15 பி.எஸ். திறனை 7,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 9.89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 5 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும்.
டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் வசதி கொண்டதாக வந்துள்ளது. செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், அழகிய பின்புற விளக்கு, உறுதியை பறைசாற்றும் பெட்ரோல் டேங்க் ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.67,400.