

லாகூர்,
பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக இளம்பெண்களை கடத்தி சென்று, இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்து பின்னர் கட்டாய திருமணம் செய்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலம் ஆகவே கூறப்பட்டு வருகிறது.
அந்நாட்டில் சிறுபான்மையோராக இருக்கும் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் உள்ளிட்டோருக்கு எதிராக நடக்கும் அராஜகங்களை பற்றி மனித உரிமை அமைப்புகளோ அல்லது அரசியல்வாதிகளோ கூட பேச முன்வரவில்லை. பாதிக்கப்பட்டோருக்கு நீதிமன்றங்களில் கூட நீதி கிடைக்கவில்லை என லண்டனை அடிப்படையாக கொண்ட, பாகிஸ்தானின் சிறுபான்மையோருக்கான நீதி அமைப்புக்கான செய்தி தொடர்பு நிர்வாகி அனிலா குல்சார் வேதனையுடன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டில் பிரதமர் இம்ரான் கான், இந்து சிறுமிகளின் கட்டாய மதமாற்றங்கள் மற்றும் கட்டாய திருமணங்கள் ஆகியவை தடுக்கப்படும் என உறுதியளித்த நிலையில் இதுபோன்ற குற்றங்கள் நடந்து வருகின்றன.
கடந்த 2017ம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு ஜனவரி வரையில் அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் மட்டுமே 36 மாவட்டங்களில் 40 ஆயிரத்து 585 பெண்கள் கடத்தப்பட்டு உள்ளனர் என பஞ்சாப் மாகாண போலீசார் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கிறது.
இவர்களில் கடந்த 4 ஆண்டுகளில், 3,571 சிறுமிகள் மற்றும் பெண்கள் கடத்தப்பட்டு, அவர்களை இன்னும் கண்டறிய முடியவில்லை. அவர்களின் கதி என்னவாயிற்று என தெரியவில்லை. போலீசாரின் ஆவண பதிவில், இவர்கள் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போலீசார் மற்றும் கடத்தப்பட்டவர்களின் பெற்றோருக்கு, கடத்தப்பட்ட பெண்கள் 4 ஆண்டுகளாக எங்குள்ளனர் என்ற விவரம் கூட தெரிய வரவில்லை என்று டான் செய்தி நிறுவனம் அதிர்ச்சி தெரிவித்து உள்ளது.
இதுபோன்ற குற்றங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மற்றொரு அதிர்ச்சி தரும் சம்பவம் அந்நாட்டில் அரங்கேறியிருக்கிறது.
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் சுக்கூர் நகரில் ரோஹி பகுதியில் வசித்து வந்த பூஜா ஓட் என்ற 18 வயது இந்து சிறுமியை கடத்தல் கும்பல் ஒன்று கடத்தி செல்ல முயற்சித்து உள்ளது. இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடத்தல் முயற்சி தோல்வி அடைந்ததில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் நடுத்தெருவில் வைத்து சிறுமியை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தப்பியோடி விட்டது. பொதுமக்கள் பலர் முன்னிலையில் நடந்த இந்த காட்டுமிராண்டித்தன செயல் நடைபெறுவது இது முதன்முறையல்ல.
ஒவ்வோர் ஆண்டும், சிறுபான்மை சமூகத்தின் பல பெண்கள், குறிப்பிடும்படியாக சிந்த் பகுதியில் வசிக்கும் இந்து சிறுமிகள் கடத்தப்படுவதும், கட்டாய மதமாற்றத்திற்கு ஆளாக்கப்படுவதும் மெகா தொடராகி வருகிறது.
2013-2019 காலகட்டத்தில், 156 கட்டாய மதமாற்ற சம்பவங்கள் நடந்துள்ளன என சிறுபான்மையினர் உரிமைகளுக்கான மக்கள் ஆணையம் மற்றும் சமூக நீதி மையம் தெரிவித்து உள்ளது. இந்த கொடுமையை அந்நாட்டில் வசிக்கும் சிறுபான்மை சமூகம் நீண்ட காலம் ஆகவே எதிர்கொண்டு வருகிறது.
பாகிஸ்தானில் இந்து சமூகம் 1.60 சதவீதத்தினர் வசிக்கின்றனர் என்றும் அவர்களில் 6.51 சதவீதத்தினர் சிந்த் பகுதியில் மட்டுமே வசிக்கின்றனர் என்றும் அந்நாட்டின் புள்ளியியல் துறை தெரிவிக்கின்றது.
கடந்த 2019ம் ஆண்டு சிந்த் பகுதி அரசானது, கட்டாய மதமாற்றம் மற்றும் திருமண நடைமுறைகளை சட்டவிரோதம் என அறிவிக்க 2வது முறையாக முயற்சி மேற்கொண்டது.
ஆனால், மதம் சார்ந்த சில எதிர்ப்பாளர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பெண்களை யாரும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை. முஸ்லிம் ஆண்கள் மீது காதல் வயப்பட்டு அவர்களாகவே மதம் மாறுகின்றனர் என கூறினர்.
இதனையடுத்து எதிர்ப்பு குரல் வலுக்க, அந்த சட்டமசோதா நிராகரிக்கப்பட்டது.
பாகிஸ்தானில், இந்து சமூகம் மிக பெரிய சிறுபான்மை சமூக அந்தஸ்து பெற்றுள்ளது. அரசு மதிப்பீட்டின்படி, 75 லட்சம் இந்து மக்கள் பாகிஸ்தானில் வசிக்கின்றனர்.
ஆனால், 90 லட்சம் இந்துகள் வசித்து வருகின்றனர் என அச்சமூகம் தெரிவிக்கின்றது. அவர்களில் பெரும்பகுதியினர் சிந்த் மாகாணத்தில் வசிக்கின்றனர். அந்த பகுதியிலுள்ள முஸ்லிம்களுடன், கலாசாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை அவர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.
எனினும், தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் தீவிர துன்புறுத்தல் செயல்களுக்கு எதிராக இந்து சமூகத்தினர் அவ்வப்போது புகாரும் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு சில வழக்குகளே வெளிஉலகுக்கு தெரிய வருவது வருத்தம் அளிக்க கூடிய விசயம் ஆகும்.