தீபாவளி பண்டிகை உருவானது எப்படி.? அதன் வரலாறு என்ன.? - முழு விபரம்

இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வருகிற 8-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகை உருவானது எப்படி.? அதன் வரலாறு என்ன.? - முழு விபரம்
Published on: 

ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகை

இந்தியா முழுவதுமுள்ள இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி ஆகும். தீபாவளி பண்டிகை உருவானதற்குக் காரணம் தீமை அழிந்து நன்மை வென்றதைக் கொண்டாடுவதே ஆகும். சமஸ்கிருதத்தில் 'தீபம்' என்றால் விளக்கு, 'ஆவளி' என்றால் வரிசை என்று பொருள். இதனால் இது 'தீபங்களின் வரிசை' அல்லது 'தீப ஒளித் திருநாள்' என்று அழைக்கப்படுகிறது.

ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை

இந்தப் பண்டிகை தமிழ் மாத கணக்கீட்டின்படி பெரும்பாலான வருடங்களில் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. சில வருடங்களில் மட்டும் அமாவாசைக்கு முந்தைய தினம் கொண்டாடப்படுகிறது. ஆங்கில நாட்காட்டியின்படி, அக்டோபர் 17 முதல் நவம்பர் 15க்குட்பட்ட நாட்களில் தீபாவளிப் பண்டிகை அமைகிறது.

இந்தப் பண்டிகை எப்படித் தோன்றியது என்பது குறித்து நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறது. பல சுவாரசியமான வரலாற்று மற்றும் புராணக் கதைகள் கூறப்படுகின்றன. அதனை பின்வருமாறு காண்போம்.

ராமரோடு தொடர்புடை கதை

வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. அதில் ஒன்று, ராமரோடு தொடர்புடையது. அதாவது ராமர், தனது 14 வருட வனவாசத்தை முடித்துக் கொண்டு, லட்சுமணன், சீதாவுடன் அயோத்திக்கு திரும்பிய தினத்தை அந்நாட்டு மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடினர். அதுவே தீபாவளி தினம் என்ற ஒரு கதை வழக்கில் இருக்கிறது.

நரகாசுரன் வதம்

மற்றொரு கதையில், பெரும் அட்டகாசம் செய்துவந்த நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்தபோது, தான் இறந்த தினத்தை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமென அந்த அசுரன் கேட்டுக்கொண்டதாகவும், அதன்படியே தீபாவளி கொண்டாடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கலாச்சார மாற்றங்கள்

தென்னிந்தியா

தென்னிந்தியாவில் 'கங்கா ஸ்நானம்': தெற்கே அதிகாலையிலேயே கொண்டாட்டம் தொடங்கிவிடும். நரகாசுரன் வதத்திற்குப் பின், அவனது ரத்தக் கறையை நீக்க அனைவரும் நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பதாக ஐதீகம். குளித்த பின் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, பலகாரங்கள் சாப்பிடுவார்கள்.

வடஇந்தியா

வடஇந்தியாவில் 'ரங்கோலி மற்றும் விளக்குகள்': வடக்கே மாலை நேர கொண்டாட்டங்கள் மிக விமரிசையாக இருக்கும். வீட்டின் வாசல்களில் பிரம்மாண்டமான ரங்கோலி (கோலம்) கோலமிட்டு, நூற்றுக்கணக்கான மண் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளைப் பகிர்ந்து கொள்வது அங்கு மிக முக்கியப் பழக்கமாகும்.

தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாட்டம்

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக மக்களின் தீபாவளி கொண்டாட்டம் பின்வருமாறு உள்ளது.

எண்ணெய் குளியல்:

தீபாவளி அன்று அதிகாலையிலேயே நல்லெண்ணெய் தேய்த்து நீராடுவது வழக்கம். இது 'கங்கா ஸ்நானம்' என்று அழைக்கப்படுகிறது.

புத்தாடைகள் மற்றும் சிறப்புப் பூஜை:

புத்தாடைகள் அணிந்து, இறைவனுக்குப் படையலிட்டு, குடும்பத்தினருடன் வழிபாடு நடத்துகின்றனர்.

பட்டாசு மற்றும் அகல் விளக்குகள்:

புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்தும், வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றியும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

உணவு முறை:

தமிழகத்தில் பெரும்பாலும் மக்கள் அசைவ உணவு சமைத்து சாப்பிடும் முறை பெரும்பாலான பகுதிகளில் காண முடிகிறது.

இனிப்புகள் மற்றும் காரங்கள்:

முறுக்கு, லட்டு, ஜாங்கிரி, பாயசம், அதிரசம், உக்காரை போன்ற பாரம்பரிய பலகாரங்கள் வீடுகளில் செய்யப்படுகின்றன.

தலை தீபாவளி:

புதிதாகத் திருமணம் ஆன தம்பதியினர், பெண்ணின் வீட்டில் முதல்முறையாகக் கொண்டாடும் தீபாவளி 'தலை தீபாவளி' என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி போனஸ்

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு பல நிறுவனங்கள், தங்களின் நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு போனஸ் கொடுக்கின்றனர். அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த போனஸ் மூலம் அவர்களால் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வருகிற 8-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. மக்கள் இப்போதே புத்தாடைகள் வாங்குவது, பட்டாசுகள் வாங்குவது, சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் மற்றும் பேருந்துகளில் டிக்கெட் புக்கிங் செய்வது என பண்டிகையை கொண்டாட தாயாராகி வருகின்றனர்.

மக்கள் வேலை, வாழ்க்கை முறை என பல பகுதிகளில் தனித்தனியே வாழ்ந்து வந்தாலும், தீபாவளி தினத்தன்று சொந்த ஊர்களில் உறவினர்களுடன் ஒன்றுகூடி, புத்தாடைகள் அணிந்து, உணவு, பலகாரங்கள் செய்து, பட்டாசு வெடித்து தங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பண்டிகையாக தீபாவளி அமைகிறது என்றால் அது மிகையாகாது.

X