எந்த நேரம், எவ்வளவு சாப்பிடவேண்டும் தெரியுமா?

நாம் பிறந்ததில் இருந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.
எந்த நேரம், எவ்வளவு சாப்பிடவேண்டும் தெரியுமா?
Published on

ஆனால் நமது முறையான உணவுப்பழக்கம் என்ன தெரியுமா?

- உங்கள் வயது.

- உங்கள் உடல் உழைப்பு.

- நீங்கள் செய்யும் வேலை.

- நீங்கள் வசிக்கும் சூழல்.

- அந்த பருவகாலம்.

- எந்த நேரத்துக்கான உணவு.

.. போன்றவைகளை எல்லாம் கருத்தில்கொண்டு நீங்கள் சாப்பிடும் உணவு எது என்பதையும், எவ்வளவு சாப்பிடவேண்டும் என்பதையும் நிர்ணயிக்கவேண்டும் என்று சித்தமருத்துவம் குறிப்பிடுகிறது. உணவுக்கு இடையே எவ்வளவு இடைவெளி வேண்டும் என்றும் சித்தமருத்துவம் சொல்கிறது.

நாம் வசிக்கும் இடத்திற்கு ஏற்பவும், தட்பவெப்ப நிலைக்கு ஏற்பவும் நம் உணவு இருக்க வேண்டும். குளிர் பிரதேசங்களில் வசிப்பவர்கள் குளிரைத் தாங்கும்விதத்தில் வெப்ப வீரியமும் கொழுப்பும் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. அதே உணவை வெப்பமண்டல நாடுகளில் வசிப்பவர்கள் சாப்பிட்டால், அவர்களுக்கு வயிற்றுப் புண், வயிற்று எரிச்சல் மற்றும் பெருங்குடல் அழற்சி போன்ற பாதிப்புகள் ஏற்பட கூடும். அதனால்தான் நம் முன்னோர்கள் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம் ,நெய்தல் என ஐந்து நிலங் களுக்கு ஏற்ப உணவு வகைகளை வகுத்துள்ளனர்.

ஒவ்வொரு நாளையும் நாம் புத்துணர்ச்சியாக தொடங்குவதற்கு காலை உணவு மிகவும் அவசியம். பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் செல்பவர்கள் அவசரம் கருதி காலை உணவை தவிர்த்து விடுகிறார்கள். முக்கியமாக குழந்தைகள் சீக்கிரமாகவே பள்ளிக்கு கிளம்புவதால் அவர்களுக்கு காலை நேரத்தில் பெரும்பாலும் பசி தோன்றுவதில்லை. அதனால் பல குழந்தைகள் வெறும் பால் மட்டுமே அருந்திவிட்டு பள்ளிக்கு செல்கிறார்கள்.

காலை நேரத்தில் அவர்கள் பிஸ்கெட், கேக் போன்றவற்றை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை. அதனால் சக்தி குறைவதோடு வளர்ச்சிதை மாற்றத்திலும் சீரற்றநிலை தோன்றும். அப்போது குழந்தைகளுக்கு படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மூளைச்சோர்வு உண்டாகும்.

காலை உணவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பசி எடுக்கும்போது காபி, டீ மற்றும் ஏதாவது துரித உணவு சாப்பிடும் வழக்கம் பலருக்கு உள்ளது. அது உடலுக்கு எந்த விதத்திலும் நன்மை அளிக்காது. காலையில் உணவு சாப்பிடவில்லை என்றால் இரைப்பை காலியாக இருக்கும். அப்போது, இரவில் சுரக்கும் ஜீரண நீர்கள் வயிற்றில் புண்ணை உண்டாகும். உப்புசம், வாந்தி, மயக்கம், ரத்தசோகை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பல பாதிப்புகள் பிற்காலத்தில் ஏற்படக்கூடும்.

கடலை, துவரை, உளுந்து, காராமணி, மொச்சை, பச்சைபயறு ஆகியவற்றை கடுகு, மிளகு, சுக்கு, பெருங்காயம் சேர்ந்து பக்குவம்செய்து, காலை உணவாக சாப்பிட வேண்டும் என்று பதார்த்த குண சிந்தாமணி பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயறு வகைகள் மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து நிறைந்தது. அவை உடலுக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கும். சர்க்கரையை மிக மெதுவாக கடத்தும்தன்மை உள்ளதால் உடல் சோர்வு ஏற் படாது. காலையில் எளிதில் செரிக்கக்கூடிய கஞ்சி வகைகளை சாப்பிடலாம். அத்துடன் சிறிது சுண்டல் வகைகளை சாப்பிடுவதும் சிறந்தது.

மதிய உணவில் கிழங்குகள், பழ வகைகள், காய்கறிகள், கீரைகள், தயிர், மோர் மற்றும் வறுத்த பொரித்த உணவு களை உடல் உழைப்புக்கு ஏற்றவிதத்தில் சாப்பிடலாம். மதிய நேரத்தில் உடலில் உள்ள ஜீரண நீர்கள் உணவை நன்றாக ஜீரணிக்கும். அதனால் மந்த உணர்வு ஏற்படாது. மனதெளிவு உண்டாகும். அதனால் விருந்துகளை எப்போதும் மதியம் திட்டமிடுவது சிறந்தது.

இரவில் எளிதில் செரிக்கும் உணவுகளையே சாப்பிட வேண்டும். இளம் பிஞ்சு காய்கறிகள் நல்லது. சுண்டைக்காய், துமட்டிக்காய், தூதுவளை போன்றவற்றில் தயார் செய்த வற்றல்களை இரவு உணவுடன் சாப்பிடுவது சிறந்தது.

காலை, மதியம், இரவு என மூன்று நேரமும் நமது உணவை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்று சித்த மருத்துவ நூல்களில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

சாப்பிட்டு முடித்தவுடன் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு குளிப்பது, விளையாடுவது, நீச்சலடிப்பது, அதிக தூரம் வண்டி ஓட்டிச்செல்வது, வெயிலில் அலைவது, அதிகமாக பேசுவது, விவாதிப்பது போன்றவற்றை தவிர்க்கவேண்டும். உணவு உண்ணும் அளவும், நேரமும் மிகவும் முக்கியம். ஒரு இடத்தில் உட்கார்ந்து, உண்ணும் உணவில் முழு கவனத்தையும் செலுத்தி நன்கு மென்று சாப்பிட வேண்டும். உணவு உமிழ்நீருடன் நன்கு கலக்க வேண்டும்.

ஜீரணம் நம் வாய் பகுதியிலேயே ஆரம்பித்து விடுகிறது. படுக்கையில் உட்கார்ந்து சாப்பிடுவது, கைபேசி, தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது, அதிகமாக விவாதித்துக்கொண்டே சாப்பிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கோபம், மனத்துயர், மன அழுத்தம் போன்றவை செரிமானத்தை பாதிக்கும். முதலில் சாப்பிட்ட உணவு நன்கு ஜீரணம் ஆன பிறகுதான் அடுத்த உணவை சாப்பிட வேண்டும்.

ஒவ்வொரு நேர உணவிற்கும் குறைந்தபட்சம் 4 மணி நேர இடைவெளி தேவை. பசிக்கு ஏற்ப சாப்பிடுவது சிறந்தது. மூன்று திட உணவு, மூன்று திரவ உணவுகளை சாப்பிடுவது சிறந்தது. அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது நோயை உண்டாக்கும்.

இரைப்பையில் பாதி அளவுக்கு திட உணவான தானிய வகைகள், காய்கறி, கீரை வகைகளை சாப்பிடவேண்டும். கால் பகுதிக்கு திரவ உணவுகளும் உட்கொள்ளவேண்டும். மீதமுள்ள கால் பகுதியை இரைப்பையில் உள்ள காற்று மற்றும் ஜீரண நீர்கள் உணவை ஜீரணிக்க உதவும் வகையில் காலியாக விட வேண்டும். சாப்பிட்ட பிறகுதான் நீர் அருந்த வேண்டும்.

உடல் நிலை அறிந்து உணவருந்தவேண்டும். மலச்சிக்கல் உள்ளவர்கள் தவிடு நீக்கப்பட்ட மாவு உணவுகள், பேக்கரி உணவுகள், வறுத்து பொரித்த கார உணவுகளை தவிர்க்க வேண்டும். கீரைகள், காய்கறிகள், பழங்கள், பட்டை தீட்டாத தானிய உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து சாப்பிட வேண்டும். உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும் கூட ஜீரண சக்தி குறைந்தவர்கள் சிறு தானிய உணவை கவனமாக தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவில் சிறப்பு கவனம் அளிக்கவேண்டும். பசியை முற்றவிட்டு தாமதமாக சாப்பிடுவது தவறு. அதிக பசி ஏற்படும் முன்பு சாப்பிட்டு விட வேண்டும். பசியை அதிகரிக்கவிட்டால், உடலில் சர்க்கரையின் ௮ளவு குறையும். அதனால் படபடப்பு, சோர்வு, நரம்பு தளர்ச்சி ஏற்படும்.

சாப்பிட்டு முடித்த பின்பு உடல் எப்படி இருக்கவேண்டும்?

வயிற்றின் மேல் அழுத்தம், நெஞ்செரிச்சல், விலாபக்கங்களில் புடைப்பு, சாப்பிட்ட பெருமூச்சு, களைப்பு, சோர்வு, தூக்கம் போன்றவை ஏற்படக்கூடாது. நல்ல மனநிறைவும், தெளிவும் ஏற்பட வேண்டும். காலை உண்ட உணவு மாலைக்குள்ளும், மாலை உண்ட உணவு மறுநாள் காலைக்குள்ளும் ஜீரணமாக வேண்டும். ஏப்பம், வாயு, மலம், சிறுநீர் இவை எந்த தடையும் இல்லாமல் வெளியேற வேண்டும். பசியும், தாகமும் ஏற்படுவது நன்றாக ஜீரணமாவதற்கான அறிகுறி. உணவின் சுவை, குணம் அறிந்து சாப்பிட வேண்டும். நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் உடலுக்கு நன்மை அளிக்குமா என சிந்தித்து ஊட்டம் நிறைந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து சாப்பிடப் பழக வேண்டும். உண்ணும் உணவிற்கும்- மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால் நல்ல மனநிலையோடு, மனதுக்கும் இதமளிக்கும் விதத்திலான உணவுகளை உண்ணுங்கள்.

கட்டுரை: டாக்டர் இரா.பத்மபிரியா,சித்த மருத்துவர், சென்னை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com