

முதலாவதாக பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளின் படிப்பிலும் சற்று கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக பொதுத்தேர்வு நடைபெறும் காலங்களில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிகாலையில், பிள்ளைகளை தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டு, பாடங்களை படிக்க சொல்ல வேண்டும். காலையில் காபி, டீ தயார் செய்து குடிக்க செய்ய வேண்டும் பிள்ளைகள் காலையில் படிப்பதற்கு அமைதியான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்க வேண்டும். வானொலி, தொலைக்காட்சி பெட்டிகளை படிக்கும் நேரத்தில் பயன்படுத்தக்கூடாது. தாய், தந்தையர் பிள்ளைகளை பாடங்களை சற்று உரக்கப் படிக்கச் சொல்லி கூர்ந்து கவனிக்க வேண்டும். இரவில் அதிக நேரம் கண்விழித்து படிப்பதை தவிர்க்கவேண்டும். மனதில் பதியுமாறு படிக்க உரிய நேரம் அதிகாலை நேரம் தான். தேர்வு காலம் முடியும் வரை விருந்தினர் வந்து செல்வதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் தேர்வுகால அட்டவணையின்படி அந்தந்த பாடங்களை பிள்ளைகள் படிக்கும்படி கூறவேண்டும். தேர்வு காலங்களில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். தரமான பேனா, பென்சில், ஸ்கேல், அழிப்பான் போன்ற பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
தாய், பெண் பிள்ளைகளுக்கு தலைவாரி ஜடைபின்னி போட்டு, காலை உணவு, மதிய உணவு தயார் செய்து உரிய நேரத்தில் பிள்ளைகளை அனுப்பி வைக்க வேண்டும். நீண்ட தூரம் செல்வதாக இருந்தால், பஸ்வசதி இல்லாமல் இருந்தால் பெற்றோர்கள் பிள்ளைகளை தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்று வர வேண்டும். பிள்ளைகளுக்கு ஒவ்வாத உணவு பதார்த்தங்களை கொடுக்கக் கூடாது. கிராமப்புற, நகர்புற மாணவ, மாணவிகள் தேர்வு மையத்திற்கு சற்று முன்கூட்டியே சென்றுவிட வேண்டும். சில சமயங்களில் வாகனங்கள் பழுதடையலாம், போக்குவரத்து நெரிசல், சிக்னல் போன்ற பல்வேறு காரணங்களினால் தாமதம் அடையலாம். தாய், தந்தை இருவரும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக தாய் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு உரியநேரத்தில் தேர்வு மையத்திற்கு பிள்ளைகளை அனுப்பிவைக்க வேண்டும். அமைதியான சூழலில் பிள்ளைகள் வீட்டிலிருந்து தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும். தாய் தந்தையின் அரவணைப்பு மிக, மிக அவசியம்.
இரண்டாவதாக ஆசிரியர்கள் பத்து மாதங்களாக தங்களிடம் படித்த மாணவ, மாணவிகளுக்கு தேர்வு சம்பந்தமான அறிவுரைகளை தெளிவாக கூற வேண்டும். தேர்வு பதிவெண், தேர்வுகால அட்டவணை, தேர்வு கூடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட அரசு கூறியுள்ள விதிமுறைகளை தெளிவாக எடுத்து கூறவேண்டும். சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள், தங்களது பாடப் பகுதிகளில் கேட்கப்படும் வினாக்களுக்கு எப்படி விடை எழுத வேண்டும், சிறுவினா, குறுவினா, விரிவான வினாவிற்கு எந்த அளவில் விடை எழுத வேண்டும், தேவையான இடங்களில், படம் வரைதல், குறிப்பு எழுதுதல், குறிப்பிட்ட கால அளவிற்குள் தேர்வினை எழுதிமுடித்து விட வேண்டும் என கூறவேண்டும். விடைத்தாளில் முகப்பில் எழுத வேண்டியவற்றை தெளிவாக கூறவேண்டும். தேர்வு கூடத்தில் ஒழுங்கினச் செயல்களில் ஈடுபடக்கூடாது, அப்படி ஈடுபட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளை கூறவேண்டும். தேர்வுகால அளவிற்கு முன்பே, தேர்வறையை விட்டு வெளியே வரக்கூடாது. நன்கு சிந்தித்து, சரியான விடையை நன்கு யோசித்து எழுதச் சொல்ல வேண்டும். தேர்வு நேரம் முடிந்தே வெளியே வரவேண்டும். தேர்வு நாட்களில் இடைவெளி இருந்தால் அந்தந்த பாட ஆசிரியர்கள் அடுத்த நாள் தேர்வுக்குரிய பாடத்தினை திருப்புதல் செய்யலாம். இதில் மாணவ, மாணவிகள் கட்டாயம் வந்து பாடம் சம்பந்தமான சந்தேகங்களை கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். வீட்டில் படிக்க முடியாத மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து தனியாகவோ, குழுவாகவோ சேர்ந்து கலந்து உரையாடல் செய்யலாம்.
படிப்பில் பின் தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கு பாட ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தி குறைந்தது தேர்ச்சியடைவதற்குரிய வழிமுறைகளை கையாளலாம். தேர்வறைகள் கண்காணிப்பாளராக செல்லும் ஆசிரியர்கள், தேர்வறையில், தேர்வர்களுக்கு தேர்வு தொடர்புடைய அனைத்து விதிமுறைகளையும் தெளிவாக எடுத்துக் கூறவேண்டும். தேர்வர்களை அமைதியான சூழ்நிலையில் எழுத செய்ய வேண்டும். பறக்கும்படை மற்றும் பிற கல்வி அதிகாரிகள் தேர்வறைக்குள் வந்து, அமைதியான முறையில் கண்காணிக்க வேண்டும். சந்தேகப்படும் மாணவ, மாணவிகளை தனியே அழைத்து விசாரிக்க வேண்டும். மற்ற மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேர்வறையில் முழு அமைதி நிலவிட வேண்டும். மாணவ, மாணவிகள் படித்த பாடங்களில்; எந்தந்த பாடத்தில், எந்த முறையில் வினாக்கள் கேட்கப்படும், அதற்குரிய மதிப்பெண் எவ்வளவு என்பதை அறிந்திருக்க வேண்டும். கேள்விகளுக்கு ஏற்றாற்போல், பதில் சுருக்கமாகவோ, விரிவாகவோ இருக்க வேண்டும். ஒரு கேள்விக்கு பதில் எழுத அதிக நேரம் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒதுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் தேர்வினை எழுதி முடித்துவிட வேண்டும். எழுதப்பட வேண்டிய அனைத்து வினாக்களுக்கும் விடையை நன்கு யோசித்து எழுதிட வேண்டும். எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதிய பின்னர், விடைத் தாள்களை வரிசையாக அடுக்கி, கட்டி முடித்து முதலிலிருந்து கடைசிவரை, எழுதிய விடைகளை மீண்டும் ஒருமுறை சரிபார்க்க வேண்டும். விடைகள் ஏதேனும் விடுபட்டிருந்தால் அதையும் எழுதிட வேண்டும். அடித்தல், திருத்தல் இல்லாமல் சிறிது இடைவெளியிட்டு எழுதவேண்டும். திருத்துபவர் படித்துப்பார்த்து, மதிப்பெண் வழங்கும் வகையில் எழுத்து அமைய வேண்டும்.
அவசியப்படும் இடங்களில் வரைபடங்கள், அறிவியல் படங்கள், குறிப்பு எழுதுதல் உரிய இடங்களில் செய்யவேண்டும். திருத்துபவர்களுக்கு குழப்பம் இல்லாமல் படித்து பார்த்து மதிப்பெண் வழங்கும் முறையில் பதில் எழுதப்பட வேண்டும். தேர்வுத்துறை அறிவித்துள்ள விதி முறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை தேர்வறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டு அமைதியாக வெளியே வரவேண்டும். வெளியே வந்து விடை சரியா, தவறா என பேசுவதோ, விவாதிப்பதோ வேண்டாம். நேராக வீட்டிற்கு சென்று மதிய உணவு சாப்பிட்டு ஓய்வு எடுத்தப் பின்னர் அடுத்த நாள் தேர்வுக்குரிய பாடங்களைப் படிப்பது, திருப்புதல் செய்வது, எழுதி பார்ப்பது, குழுவிவாதம் செய்வது போன்றவைகளில் ஈடுபடலாம்.
தேர்வுகால அட்டவணையை வீட்டில் அனைவரும் பார்க்கும்படி ஒரு பகுதியில் ஒட்டி அடிக்கடி பார்த்து வரவேண்டும். எந்தந்த நாட்களில் என்னென்ன தேர்வு என்பதை அறிந்து அந்த பாடங்களை படிக்க வேண்டும். தேர்வு நாட்களில் மறந்து வீட்டில் இருந்துவிடக்கூடாது. தேர்வுகால அட்டவணை மிகமுக்கியமானது அதை பார்த்து படித்து தேர்வுக்கு செல்ல வேண்டும். கடைசி நேரத்தில் வியர்த்து விறுவிறுக்க சென்று மன உளைச்சலுடன் தேர்வு எழுதினால் அவ்வளவு சிறப்பாக அமையாது. அரைமணி நேரம் முன்னதாக தேர்வு மையத்திற்கு சென்றுவிட வேண்டும். தேர்வுபயம் மனகுழப்பம் உளைச்சல் வேண்டாம் படித்தவற்றை நினைவுபடுத்தி, சரியான பதிலை எழுதினால் போதும். வெப்பம் அதிகம் இருப்பதால் வெம்மை நோய்கள் தாக்கக்கூடும். இதனால் தேர்வு எழுதாமல் போய்விடும்.
வீட்டில் இருந்து அமைதியான முறையில் அடுத்த தேர்வுக்குரிய பாடங்களை படிக்கலாம் ஓய்வு எடுக்கலாம். உணவு முறையில் கட்டுப்பாடு அவசியம். பாட ஆசிரியர்கள் நடத்தும் சிறப்பு வகுப்புகளுக்கு அவசியம் செல்லுங்கள், சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இதை மூவரும் நன்கு உணர்ந்து பாடுபட வேண்டும். அப்போதுதான் முழுவெற்றி கிடைக்கும். இன்று தலைகுனிந்து படித்தால் நாளை தலைநிமிர்ந்து வாழலாம். நாளை நமதே வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு, தேர்வு அறைக்கு செல்லுங்கள். நல்ல பதில் எழுதுங்கள் அதிக மதிப்பெண் பெறுங்கள் வெற்றி அடையுங்கள்.
லட்சுமி நாராயணன், பட்டதாரி ஆசிரியர் (ஓய்வு), புதுக்கோட்டை