இன்று மனித உரிமைகள் தினம்... ஏன் கொண்டாடப்படுகிறது? முக்கியத்துவம் என்ன...?

மனித உரிமை மீறல்கள் நடைபெறாமல் தடுக்க ஒவ்வொருவரும் இந்நாளில் உறுதிமொழி எடுத்து கொள்வோம்.
Photo Credit: PTI
Photo Credit: PTI
Published on

வ்வொரு மனிதனுக்கும், தான் வாழ்வதற்கான உரிமை மனித சமூகத்தில் இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. இன்னலுக்கு ஆள்படுத்துவது, மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவது அடிப்படை உரிமைகளை மறுப்பது என இன்றளவும் வறியவர்கள் துன்பங்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கருத்துச் சுதந்திரம், எழுத்துரிமை, கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் பேன்ற அடிப்படை தேவைகளைப் பெற்று சுதந்திரமாக உயிர் வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இனம், நிறம், மொழி, பாலினம், அரசியல், ஜாதி, மதம், பிறப்பு, சொத்து, பிற அந்தஸ்து, தேசிய அல்லது சமூக தோற்றம் என எதிலும் பாகுபாடு பார்க்கக்கூடாது என்பதை உணர்த்துவதே இந்த தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கமாகும். ஒவ்வொரு தனி மனிதனும், தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும், மற்ற மனிதரையும் வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதற்காகவும் மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்ட பின்னர் மனித உரிமை பிரகடனத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்தக் குழு 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகளை அடையாளம் கண்டு சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை ஐநா சபையில் சமர்ப்பித்தது. இந்தப் பிரகடனத்துக்கு 1948-ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி ஐநா சபையில் 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கின. இந்த நாள்தான் 1950-ம் ஆண்டு முதல் சர்வதேச மனித உரிமைகள் தினமாக அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த பிரகடனத்தை ஏற்றுக்கொள்வதில் முக்கியப் பங்காற்றிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதன்படி, இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 28.9.1993 அன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆண்டு உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 75-ஆவது ஆண்டு ஆகும். அவ்வகையில் "அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி"என்பதை இந்த ஆண்டிற்கான மனித உரிமைகள் நாள் கருப்பொருளாக (Theme) ஐக்கியநாடுகள் சபை அறிவித்துள்ளது.

எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவும், உரிமையிலும், கண்ணியத்திலும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்பதை இப்பிரகடனம் வலியுறுத்துகிறது. உலகளவில் பாதுகாக்கப்பட வேண்டிய அனைவரின் அடிப்படை உரிமைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

மனித உரிமை மீறல் குறித்த புகார்களை அளிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 3 லட்சம் பொதுச்சேவை மையங்களுடன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இணைய வழி புகார் தெரிவிக்கும் முறை இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணையத்தின் உடனடி சேவையைப் பெறுவதற்கு 14433 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் நடைபெறாமல் தடுக்க ஒவ்வொருவரும் இந்நாளில் உறுதிமொழி எடுத்து கொள்வோம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com