

ஹூண்டாய் நிறுவனம் கிரெடா மற்றும் டக்ஸன் ஆகிய மாடலுக்கு இடையில் மற்றொரு எஸ்.யு.வி. மாடலாக அல்கஸார் எனும் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது மூன்று வேரியன்ட்களில் (பிரஸ்டிஜ், பிளாட்டினம், சிக்னேச்சர்) கிடைக்கும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.16.30 லட்சம். பிரீமியம் மாடல் விலை சுமார் ரூ.19.99 லட்சம். பின்சக்கரங்களுக்கு டிஸ்க் பிரேக் வசதி மற்றும் ஏ.பி.எஸ்., இ.பி.ஓ., இ.எஸ்.சி., ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், தானியங்கி முகப்பு விளக்கு, டயர் பிரஷர் மானிட்டர் உள்ளிட்ட பல வசதிகள் கொண்டது.
மேலும் ரியர் வியூ மிரர், பின்புறம் கண்ணாடியில் ஏ.சி. குளிர் படிவதைத் தடுக்கும் டி-பாகர், வைபர் வசதி, ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா வசதி கொண்டது. குழந்தைகளுக்கான ஐ-சோபிக்ஸ் மற்றும் இரண்டு ஏர் பேக்குகளைக் கொண்டது. 6 பேர் பயணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் 7 பேர் பயணிக்கும் மாடலும் உள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டது. இதில் பெட்ரோல் மாடலில் 2 லிட்டர் என்ஜினும், டீசல் மாடலில் 1.5 லிட்டர் என்ஜினும் உள்ளது.
குரல் கட்டுப்பாடு மூலம் மேற்கூரையை திறந்து மூடும் வசதி அமையப் பெற்றது. சாவி தேவைப்படாத தொழில்நுட்பம், ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் ஆகியன இதில் உள்ளது. மேலும் குரூயிஸ் கண்ட்ரோல், தானாக மடங்கும் ரியர் வியூ மிரர், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், இரண்டாவது வரிசை இருக்கைகளை மடக்கும் வசதி கொண்டது. 10.25 அங்குல தொடு திரை, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ செயலி கொண்டது. ஸ்டீயரிங்கிலேயே வாகனத்தின் ஆடியோவை கட்டுப்படுத்தும் வசதி மற்றும் ஸ்மார்ட்போனுக்கு பதில் அளிக்கும் வசதி உள்ளது. அனைத்துக்கும் மேலாக ஹூண்டாய் நிறுவனத்தின் புளூ-லிங்க் இணைப்பு வசதி உள்ளது. ஹூண்டாய் அல்கஸார் 159 ஹெச்.பி. திறன் மற்றும் 191 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை கொண்டது.