கச்சா பாமாயில் இறக்குமதி வரி 44 சதவீதமாக உயர்த்தப்பட்டது

கச்சா பாமாயில் மீதான இறக்குமதி வரி 44 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
கச்சா பாமாயில் இறக்குமதி வரி 44 சதவீதமாக உயர்த்தப்பட்டது
Published on

உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறைவாக இருப்பதால் சமையல் எண்ணெய் உற்பத்தியும் குறைவாக உள்ளது. எனவே தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதியை அதிகம் சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் சமையல் எண்ணெய் இறக்குமதியில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. நாட்டின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் பாமாயிலின் பங்கு ஏறக்குறைய 70 சதவீதமாக இருக்கிறது. பாமாயில் பெரும்பாலும் இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

உள்நாட்டில் தற்போது பாமாயில் உற்பத்தி 3 லட்சம் டன்னாக இருக்கிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் இது 6 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எண்ணெய்ப்பனை சாகுபடியில் பல விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதே இதற்குக் காரணமாகும்.

மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி இறக்குமதியாகும் சுத்திகரித்த பாமாயில் மீதான வரியை 50 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக குறைத்தது. அப்போது கச்சா பாமாயில் இறக்குமதி வரி 45 சதவீதத்தில் இருந்து 37.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் வித்து விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.

இறக்குமதி குறையும்

இந்நிலையில், இறக்குமதியாகும் கச்சா பாமாயில் மீதான வரியை மத்திய அரசு (37.5 சதவீதத்தில் இருந்து) 44 சதவீதமாக உயர்த்தி உள்ளது. எனவே கச்சா பாமாயில் இறக்குமதி குறையும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அதே சமயம் சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com