

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
டிசம்பர் மாதத்தில், டாலர் மதிப்பில் பருப்பு இறக்குமதி 35 சதவீதம் குறைந்து 14 கோடி டாலராக இருக்கிறது. பருப்பு உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்து வருவதால் விரைவில் ஏற்றுமதிக்கான வாய்ப்பு இருப்பதாக விவசாய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா முதலிடம்
பருப்பு உற்பத்தி, இறக்குமதி மற்றும் நுகர்வில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது. மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் பருப்பு உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்றன. மழையை நம்பி இருக்கும் பகுதிகளில்தான் பெரும்பாலும் பருப்பு அதிகம் பயிரிடப்படுகிறது.
உள்நாட்டில் பருப்பு நுகர்வு ஆண்டுக்கு சுமார் 2.50 கோடி டன் என்ற அளவில் இருக்கிறது. அண்மைக் காலம் வரை உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய அதிக அளவில் பருப்பு இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.
தற்போது போதுமான அளவிற்கு உற்பத்தி இருந்தும் குறைந்த அளவில் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை உள்ளது. எனினும், பருப்பு உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்து வருவதால் இனி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறப்படுகிறது.
56.50 லட்சம் டன்
சென்ற நிதி ஆண்டில் (2017-18) மொத்தம் 56.50 லட்சம் டன் பருப்பு இறக்குமதி ஆனது. முந்தைய நிதி ஆண்டில் அது 66.50 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, கடந்த நிதி ஆண்டில், அளவு அடிப்படையில் பருப்பு இறக்குமதி 15 சதவீதம் குறைந்தது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில், டாலர் மதிப்பில் பருப்பு வகைகள் இறக்குமதி 85 சதவீதம் குறைந்தது. மே மாதத்தில் இறக்குமதி 87 சதவீதம் குறைந்தது. ஜூன் மாதத்தில் 82 சதவீதமும், ஜூலை மாதத்தில் 80 சதவீதமும் குறைந்து இருந்தது. ஆகஸ்டு, செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் முறையே 62 சதவீதம், 56 சதவீதம் மற்றும் 53 சதவீதம் குறைந்தது. நவம்பர் மாதத்தில் 70 சதவீதம் குறைந்து இருந்தது.
டிசம்பர் மாதத்தில்...
இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில், ரூ.976 கோடிக்கு பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.1,257 கோடியாக இருந்தது. ஆக, ரூபாய் மதிப்பில் இறக்குமதி 28 சதவீதம் குறைந்து இருக்கிறது. இதே காலத்தில் டாலர் மதிப்பு அடிப்படையில் பருப்பு இறக்குமதி 35 சதவீதம் குறைந்து (21 கோடி டாலரில் இருந்து) 14 கோடி டாலராக குறைந்து இருக்கிறது.
தீவிர நடவடிக்கைகள்
பருப்பு மகசூலை அதிகரிக்கவும், புரதம் நிறைந்த பருப்பு வகைகளின் நுகர்வை அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2020-21- க்குள் பருப்பு உற்பத்தியை 2.40 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் முன்னதாகவே இந்த இலக்கு எட்டப்பட்டு விட்டது. சென்ற நிதி ஆண்டில் (2017-18) பருப்பு விளைச்சல் 2.52 கோடி டன்னை தாண்டி இருந்தது.
இந்த நிலையில், நடப்பு ரபி பருவத்தில் (2018 அக்டோபர்-2019 மார்ச்) கூடுதலாக 15 லட்சம் டன் பருப்பு உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மத்திய அரசின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக கடந்த நிதி ஆண்டில் பருப்பு விளைச்சல் 7.92 லட்சம் டன் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தேவை இருக்காது
கடந்த காலங்களில் அதிக உற்பத்தி இல்லாததால் நமது தேவையை நிறைவு செய்ய பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது. தற்போது உற்பத்தி அதிகரித்து வருவதால் இனி பருப்பு இறக்குமதிக்கான தேவை இருக்காது என நம்பப்படுகிறது.