டிசம்பர் மாதத்தில் புண்ணாக்கு ஏற்றுமதி 23% சரிந்தது

கடந்த டிசம்பர் மாதத்தில் புண்ணாக்கு ஏற்றுமதி 23 சதவீதம் சரிவடைந்து 3.03 லட்சம் டன்னாக உள்ளது.
டிசம்பர் மாதத்தில் புண்ணாக்கு ஏற்றுமதி 23% சரிந்தது
Published on: 

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

கொல்கத்தா

எண்ணெய் வித்துக்கள்

எள், கடுகு, பருத்தி விதை, சோயாபீன் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் புண்ணாக்கு கால்நடை தீவனமாகவும், விளைநிலங்களில் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வியட்நாம், தென் கொரியா, தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் இந்தியாவிடம் புண்ணாக்கை அதிகம் வாங்குகின்றன.

சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் 3.12 லட்சம் டன் புண்ணாக்கு ஏற்றுமதி ஆகி இருந்தது. 2017-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது அது 16 சதவீதம் குறைவாகும். இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் 3.03 லட்சம் டன் புண்ணாக்கு ஏற்றுமதி ஆகி உள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 23 சதவீதம் சரிவாகும். அப்போது ஏற்றுமதி 3.91 லட்சம் டன்னாக இருந்தது.

எனினும் டிசம்பர் வரையிலான முதல் 9 மாதங்களில் புண்ணாக்கு ஏற்றுமதி 6 சதவீதம் உயர்ந்து 23,87,028 டன்னாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் அது 22,36,989 டன்னாக இருந்தது.

முதல் 9 மாதங்களில் கடுகு புண்ணாக்கு ஏற்றுமதி அதிகபட்சமாக 8.22 லட்சம் டன்னாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இந்தப் புண்ணாக்கு ஏற்றுமதி 78 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலக அளவில், சோயாபீன் உற்பத்தியில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருந்து வருகிறது. ஆசியாவில் சோயா புண்ணாக்கு ஏற்றுமதியில் நம் நாடு முன்னிலையில் உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த புண்ணாக்கு ஏற்றுமதியில் சோயாவின் பங்கு அதிகமாக இருக்கிறது. சோயா புண்ணாக்கு ஏற்றுமதியில் மத்தியபிரதேசம் முன்னணியில் உள்ளது.

சோயாபீன் சாகுபடி

கரீப் பருவத்தில் (ஜூன்-அக்டோபர்) பொதுவாக நெல்லுக்கு அடுத்தபடியாக சோயாபீன்தான் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் ஜூன்-செப்டம்பர் மாத காலத்தில் சோயாபீன் சாகுபடி நடைபெறுகிறது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் (ஏப்ரல்-டிசம்பர்) சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 3 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 23 ஆயிரம் டன்னாக இருந்தது.

X