ஜனவரி மாதத்தில் 21 சதவீதம் சரிவு 1.40 கோடி கிலோ தேயிலை உற்பத்தி

நம் நாட்டில், கடந்த ஜனவரி மாதத்தில் 1.40 கோடி கிலோ தேயிலை உற்பத்தி ஆகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 21 சதவீத சரிவாகும்.
ஜனவரி மாதத்தில் 21 சதவீதம் சரிவு 1.40 கோடி கிலோ தேயிலை உற்பத்தி
Published on

அசாம் மாநிலம்

உலக அளவில், தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. நம் நாட்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலண்டர் ஆண்டுதான் தேயிலை பருவமாக உள்ளது. தேயிலை உற்பத்தியில் அசாம் மாநிலம் 50 சதவீத பங்குடன் முதலிடத்தில் இருந்து வருகிறது.

உள்நாட்டில், கடந்த 2018-ஆம் ஆண்டில் தேயிலை உற்பத்தி 0.8 சதவீதம் குறைந்து 131 கோடி கிலோவாக இருந்தது. உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலங்களில் நிலவிய மோசமான பருவநிலையே இதற்குக் காரணம் என தேயிலை வாரியம் தெரிவித்தது. உற்பத்தி குறைவால் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜனவரி மாதத்தில் மொத்தம் 1.40 கோடி கிலோ தேயிலை உற்பத்தி ஆகி இருக்கிறது. சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் அது 1.77 கோடி கிலோவாக இருந்தது. ஆக, தேயிலை உற்பத்தி 21 சதவீதம் குறைந்து இருக்கிறது.

உலகில் ஆர்தோடக்ஸ், சி.டி.சி. ஆகிய இரண்டு தேயிலை ரகங்கள் பயிராகின்றன. ஆர்தோடக்ஸ் என்பது உயர்தர தேயிலை ஆகும். இத்தேயிலை ஈராக், ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. சி.டி.சி. தேயிலை பொதுவாக எகிப்து, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் நுகர்வு மிகவும் அதிகமாக உள்ளதால் அதிக அளவு தேயிலையை ஏற்றுமதி செய்ய முடிவதில்லை.

மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தற்காலிக புள்ளிவிவரம் ஒன்றின்படி, ஜனவரி மாதத்தில் ரூ.512 கோடிக்கு தேயிலை ஏற்றுமதி ஆகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.449 கோடியாக இருந்தது. ஆக, ஏற்றுமதி 14 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. இதே காலத்தில், டாலர் மதிப்பில் தேயிலை ஏற்றுமதி 3 சதவீதம் அதிகரித்து (7.05 கோடி டாலரில் இருந்து) 7.24 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

கர்நாடகா

நம் நாட்டில் காபி உற்பத்தியில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. உள்நாட்டில் காபி நுகர்வு குறைவாக உள்ளதால் உற்பத்தியாகும் காபியில் 80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com