

கடந்த இரண்டு ஆண்டுகளில் (2017, 2018) ரியல் எஸ்டேட் துறையில் தனியார் பங்கு முதலீடு 2 மடங்கு அதிகரித்து இருக்கிறது.
நீண்டகால முதலீடு
தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்கின்றன. அத்துடன் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஆலோசனையும் வழங்குகின்றன. இவ்வகை முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் ஒரு நிறுவனம் அல்லது துறை எதிர்காலத்தில் அமோக வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது.
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் அதிக அளவு தனியார் பங்கு முதலீடு ஈர்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மால்கள் எனப்படும் வணிக வளாகங்களில் இவ்வகை முதலீடு அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளது. இதனால், 2026-ஆம் ஆண்டுக்குள் ரியல் எஸ்டேட் துறையில் தனியார் பங்கு முதலீடு 10,000 கோடி டாலரை எட்டும் என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
நம் நாட்டில், 2017 மற்றும் 2018 காலண்டர் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையில் 124 கோடி டாலர் தனியார் பங்கு முதலீடு ஈர்க்கப்பட்டு இருக்கிறது. முந்தைய இரண்டு ஆண்டுகளுடன் (2015, 2016) ஒப்பிடும்போது இது இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அது 60 கோடி டாலர் அளவிற்கே இருந்தது.
அன்னிய முதலீட்டு விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியதே இதற்கு காரணம் என ரியல் எஸ்டேட் ஆலோசனை சேவை நிறுவனமான அனராக் தெரிவித்துள்ளது. நம் நாட்டில், பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதமும், ஒற்றை பிராண்டு சில்லரை வணிகத்தில் 100 சதவீதமும் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
4 ஆண்டுகளில்...
2015 முதல் 2018 வரையிலான 4 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையில் தனியார் பங்கு முதலீடாக மொத்தம் 184 கோடி டாலர் பெறப்பட்டு இருக்கிறது. இதில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் 48 சதவீத பங்கினைப் பெற்றுள்ளன (88 கோடி டாலர்). முதல் நிலை நகரங்கள் 96 கோடி டாலரை ஈர்த்துள்ளன.