நடப்பு 2020-ஆம் ஆண்டில் புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக ரூ.50 ஆயிரம் கோடி வரை திரட்டப்படும்; பங்குச்சந்தை ஆய்வாளர்கள் கணிப்பு

நடப்பு 2020-ஆம் ஆண்டில் புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக ரூ.50 ஆயிரம் கோடி வரை திரட்டப்பட வாய்ப்பு உள்ளதாக பங்குச்சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
நடப்பு 2020-ஆம் ஆண்டில் புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக ரூ.50 ஆயிரம் கோடி வரை திரட்டப்படும்; பங்குச்சந்தை ஆய்வாளர்கள் கணிப்பு
Published on

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

வெளியீடுகள் மந்தம்

2019 காலண்டர் ஆண்டில் புதிய பங்கு வெளியீடுகள் மந்தமடைந்து இருந்தது. அந்த ஆண்டில் பங்குச்சந்தைகளின் பிரதான பிரிவில் மொத்தம் 16 நிறுவனங்கள் புதிய பங்குகளை வெளியிட்டன. இதன் மூலம் அந்த நிறுவனங்கள் திரட்டிய நிதி ரூ.12,362 கோடியாகும். 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது (ரூ.30,959 கோடி) இது 60 சதவீத சரிவாகும். 2017-ல் 36 நிறுவனங்கள் ரூ.68 ஆயிரம் கோடிக்கும் அதிக நிதி திரட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் முதல் முறையாக சிறிய, நடுத்தர நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. எனினும் சென்ற ஆண்டில் தனிப்பட்ட பங்கு ஒதுக்கீட்டு நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இருந்தது. அதே சமயம் ரூ.51 ஆயிரம் கோடி மதிப்பிற்கான 47 நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளுக்கு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி வழங்கிய அனுமதி காலாவதி ஆகி இருக்கிறது.

நிபுணர்கள் கணிப்பு

2020-ஆம் ஆண்டில் புதிய பங்கு வெளியீட்டு நடவடிக்கைகள் விறுவிறுப்பு அடையும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். பல நிறுவனங்கள் பங்கு வெளியிட அனுமதி கேட்டு செபிக்கு விண்ணப்பித்து வரும் நிலையில் பல நிறுவனங்கள் ஏற்கனவே அனுமதி பெற்று இருப்பதே இதற்கு காரணமாகும். இதனால் புதிய பங்கு வெளியீட்டுச் சந்தை (ஐ.பி.ஓ. மார்க்கெட்) சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ரூ.30 ஆயிரம் கோடி முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை திரட்டப்பட வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை ஆய்வாளர்களின் தற்போதைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

செபிக்கு விண்ணப்பம்

2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு வெளியிட அனுமதி கேட்டு செபிக்கு விண்ணப்பித்து இருக்கின்றன. இதில் 20 நிறுவனங்கள் 2019-ஆம் ஆண்டில் விண்ணப்பித்தன. இவற்றுள் மாசகான் டாக் ஷிப் பில்டர்ஸ், ரூட் மொபைல் ஆகிய நிறுவனங்கள் அண்மையில் அனுமதி பெற்றன. சாம்ஹி ஹோட்டல்ஸ், ஐ.ஆர்.இ. டீ.ஏ., ஷியாம் ஸ்டீல், பஜாஜ் எனர்ஜி, பவரிக்கா, சத்யசாய் பிரஷர், அன்னை இன்ப்ரா டெவலப்பர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அதற்கு முன்பே அனுமதி அளிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், நடப்பு 2020-ஆம் ஆண்டில் பங்கு வெளியிடும் நோக்கத்துடன் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் செபி அமைப்பிற்கு விண்ணப்பித்து வருகின்றன. இந்த வகையில் ஸ்ரீபஜ்ரங் பவர், கெம்கான் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ், மான்ட் கார்லோ, முகேஷ் டிரென்ட்ஸ், பர்கர் கிங், புரானிக் பில்டர்ஸ், எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ், ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ், ஈசி டிரிப் பிளானர்ஸ், ஈக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், யூ.டி.ஐ. ஏ.எம்.சி. உள்ளிட்ட பல நிறுவனங்கள் அனுமதிக்காக காத்திருக்கின்றன.

இந்நிலையில், எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ், யூ.டி.ஐ. ஏ.எம்.சி., ஈக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள் பெரும் எதிர்பார்ப்பை இருக்கின்றன. எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ் வெளியீட்டில் ரூ.500 கோடிக்கு புதிய பங்குகள் வெளியிடப்படுகின்றன. மேலும் பங்குதாரர்களின் 13 கோடி பழைய பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.9,600 கோடி வரை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

பங்கு முதலீட்டாளர்கள்

கடந்த 2019-ஆம் ஆண்டில் புதிய வெளியீடுகள் குறைந்து இருந்ததால் துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டாளர்கள் பலர் நிறுவனங்களில் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. பங்கு வெளியீடுகள் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த முதலீட்டாளர்கள் அதிக அளவில் தமது முதலீடுகளை திரும்பப் பெறுவார்கள் என்பதால் நடப்பு ஆண்டில் இப்பிரிவும் பரபரப்பாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com