

புதுடெல்லி
ஒரு நிறுவனம் குறுகிய காலத்தில் துரித வளர்ச்சி காண விரும்பும்போது இணைத்தல், கையகப்படுத்துதல் நடவடிக்கையில் இறங்குகிறது. கையகப்படுத்துதல் என்பது முற்றிலும் தொடர்பில்லாத இரண்டு நிறுவனங்களுக்கு இடையே நடைபெறுகிறது...
நம் நாட்டில், நிதி ஆண்டின் முதல் மாதத்தில் (ஏப்ரல்), தனியார் பங்கு முதலீடு மற்றும் நிறுவனங்கள் கைமாறிய மதிப்பு 79 சதவீதம் சரிவடைந்து 458 கோடி டாலராக குறைந்துள்ளது.
புதிய துறை
ஒரு குறிப்பிட்ட துறையைச் சேர்ந்த நிறுவனம், வேறு ஒரு புதிய துறையில் ஈடுபட விரும்பும்போது அத்துறையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றை கையகப்படுத்துவதன் மூலம் அத்துறையில் எளிதாக களம் இறங்க முடிகிறது. இதனால், தொழில்நுட்பங்கள் மற்றும் அனுபவ அறிவு போன்றவற்றை எளிதாகப் பெற்றுக் கொள்வதுடன், கால விரயத்தை தவிர்த்து விரைவாக ஆதாயம் ஈட்ட முடிகிறது.
தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்கின்றன. அத்துடன் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஆலோசனையும் வழங்குகின்றன. இவ்வகை முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் ஒரு நிறுவனம் அல்லது துறை எதிர்காலத்தில் அமோக வளர்ச்சி காண வாய்ப்புள்ளது.
கிராண்ட் தார்ன்ட்டன்
நம் நாட்டில், நிறுவனங்கள் மத்தியில் நடைபெற்ற இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் மற்றும் தனியார் பங்கு முதலீடு பற்றி கிராண்ட் தார்ன்ட்டன் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:-
இந்தியாவில், கடந்த ஏப்ரல் மாதத்தில், 458 கோடி டாலருக்கு (சுமார் ரூ.31,950 கோடி) இணைத்தல்-கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் மற்றும் தனியார் பங்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் நிறைவேறி உள்ளன. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 79 சதவீதம் குறைவாகும். அப்போது அது 2,177 கோடி டாலராக இருந்தது.
கணக்கீட்டுக் காலத்தில், நிறுவனங்கள் கைமாறிய மதிப்பு மட்டும் 96 சதவீதம் சரிந்து 73.5 கோடி டாலராக உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அது 1,914 கோடி டாலராக இருந்தது. இந்த ஒப்பந்தங்களின் எண்ணிக்கை (122-ல் இருந்து) 115-ஆக குறைந்து இருக்கிறது.
எனினும் தனியார் பங்கு முதலீடு (262 கோடி டாலரில் இருந்து) 384 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதில் 100 கோடி டாலருக்கு அதிகமாக ஒரு ஒப்பந்தமும், தலா 10 கோடி டாலருக்கு மேல் 9 ஒப்பந்தங்களும் நிறைவேறி இருக்கின்றன. எனினும் ஒப்பந்தங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இவ்வாறு கிராண்ட் தார்ன்ட்டன் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.
துணிகர முதலீடு
தனியார் பங்கு முதலீட்டின் ஒரு பிரிவாக துணிகர முதலீடு இருக்கிறது. இவ்வகை முதலீட்டாளர்கள் புதிய மற்றும் வளர்ந்து வரும் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர். வளர்ந்து வரும் நிறுவனம் ஒன்றின் பங்குகளை பொதுவாக ஒரு துணிகர முதலீட்டாளர் வாங்குகிறார். அல்லது அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுள் ஒருவராக அதிக பங்கு மூலதனம் பெற்றுக் கொள்கிறார்.
ஓரளவு வளர்ச்சி கண்ட பின் பல நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகின்றன. அப்போது அந்த நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருக்கும் துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் தமது பங்குகளை விற்று விட்டு நல்ல லாபத்துடன் வெளியேறுகின்றன.
துரித வளர்ச்சி
ஒரு நிறுவனம் குறுகிய காலத்தில் துரித வளர்ச்சி காண விரும்பும்போது இணைத்தல், கையகப்படுத்துதல் நடவடிக்கையில் இறங்குகிறது. கையகப்படுத்துதல் என்பது முற்றிலும் தொடர்பில்லாத இரண்டு நிறுவனங்களுக்கு இடையே நடைபெறுகிறது. ஏதோ ஒரு வகையில் ஏற்கனவே தொடர்புள்ள நிறுவனம் ஒன்றுடன் நடைபெறுவது இணைத்தல் ஆகும்.