துணிகர-தனியார் பங்கு முதலீடு 26 சதவீதம் அதிகரித்தது

நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் துணிகர-தனியார் பங்கு முதலீடு 26 சதவீதம் அதிகரித்தது
துணிகர-தனியார் பங்கு முதலீடு 26 சதவீதம் அதிகரித்தது
Published on

புதுடெல்லி

நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) துணிகர-தனியார் பங்கு முதலீடு 26 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

ஆலோசனை

தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்கின்றன. மேலும் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஆலோசனையும் வழங்குகின்றன. இந்த நிறுவனங்களின் முதலீட்டை அதிகம் ஈர்க்கும் ஒரு நிறுவனம் அல்லது துறை எதிர்காலத்தில் அமோக வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது. தனியார் பங்கு முதலீட்டின் ஒரு பிரிவாக துணிகர முதலீடு இருக்கிறது. இந்த முதலீட்டாளர்கள் புதிய மற்றும் வளர்ந்து வரும் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர்.

நம் நாட்டில், கடந்த 2018-ஆம் ஆண்டில் 2,050 கோடி டாலருக்கு துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இந்த முதலீடு 786 ஒப்பந்தங்கள் வாயிலாக பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடப்பு ஆண்டு ஜனவரி-மார்ச் மாத காலத்தில் 159 ஒப்பந்தங்கள் மூலம் 1,000 கோடி டாலர் முதலீடு ஈர்க்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது 800 கோடி டாலராக (208 ஒப்பந்தங்கள்) இருந்தது. ஆக, மதிப்பு அடிப்படையில் இவ் வகை முதலீடு 26 சதவீதம் உயர்ந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் ஆட்சி மாற்றம் குறித்த ஐயப்பாடுகள் உள்ளதால் துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டு நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக நிபுணர்கள் கூறி வந்த நிலையில் முதல் காலாண்டில் முதலீடு 26 சதவீதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தக துறையில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் துறையும் இந்த நிறுவனங்களின் முதலீட்டை அதிகம் ஈர்க்கிறது. 2026-ஆம் ஆண்டுக்குள் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தனியார் பங்கு முதலீடு 10,000 கோடி டாலரை எட்டும் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பங்கு வெளியீடு

ஓரளவு வளர்ச்சி கண்ட பின் பல நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகின்றன. அப்போது அந்த நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருக்கும் துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் தமது பங்குகளை விற்று விட்டு நல்ல லாபத்துடன் வெளியேறுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com