

66 நாடுகள்
உலக உருக்கு சங்கத்தில் மொத்தம் 66 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. உலக உருக்கு உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கின்றன. சர்வதேச உருக்கு உற்பத்தியில் சீனாவின் பங்கு ஏறக்குறைய 50 சதவீதமாக இருக்கிறது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி) உருக்கு துறையின் பங்கு சுமார் 2 சதவீதமாக இருக்கிறது. மேலும் நாட்டின் 8 முக்கிய துறைகளில் ஒன்றாகவும் இது உள்ளது. உள்நாட்டில் செயில், ஆர்.ஐ.என்.எல்., டாட்டா ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், ஜிந்தால் ஸ்டீல் அண்டு பவர் (ஜே.எஸ்.பி.எல்) ஆகிய 6 நிறுவனங்கள் உருக்கு உற்பத்தியில் முன்னிலையில் இருந்து வருகின்றன.
2030-31-ஆம் நிதி ஆண்டுக்குள் கச்சா உருக்கு உற்பத்தி திறனை ஆண்டுக்கு 30 கோடி டன்னாகவும், உற்பத்தியை 25.50 கோடி டன்னாகவும் உயர்த்த நம் நாடு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது கச்சா உருக்கு உற்பத்தி திறன் 10 கோடி டன்னாக இருக்கிறது.
இந்நிலையில், 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில், நம் நாட்டில் உருக்கு பொருள்கள் தேவைப்பாடு 7 சதவீதம் அதிகரிக்கும் என உலக உருக்கு சங்கம் மதிப்பீடு செய்துள்ளது. உலக அளவில் நடப்பு ஆண்டில் தேவைப்பாடு 1.3 சதவீதம் உயர்ந்து 173.5 கோடி டன்னாக உயரும் என்றும், 2020-ல் அது 1 சதவீதம் அதிகரித்து 175.2 கோடி டன்னாக இருக்கும் என்றும் இச்சங்கம் தெரிவித்து இருக்கிறது.
சீனாவில் உருக்கு பொருள்களுக்கான தேவை நடப்பு ஆண்டில் 2.9 சதவீதமும், அடுத்த ஆண்டில் 4.6 சதவீதமும் உயரும் என உலக உருக்கு சங்கம் முன்னறிவிப்பு செய்துள்ளது.
10 கோடி டன்
நடப்பு 2019-ஆம் ஆண்டில், உள்நாட்டில் உருக்கு பொருள்கள் பயன்பாடு 10 கோடி டன்னாக உயரும் என இந்திய உருக்கு சங்கம் (ஐ.எஸ்.ஏ) மதிப்பீடு செய்துள்ளது. இதன்படி 7.1 சதவீத வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுவரை இல்லாத புதிய சாதனை அளவாக இது இருக்கும்.