இந்திய கலாசாரம்

மலைகள், பீடபூமிகள் மற்றும் ஆறுகள் என்று பசுமை மாறாமல் இயற்கை அன்னை தவழ்ந்து விளையாடும் செழிப்பு மிக்க நாடு இந்தியா. இந்திய மக்களின் கலாசாரம் பாரம்பரியம் மிக்கது. அதைப்பற்றி சுருக்கமாக காண்போம்.
இந்திய கலாசாரம்
Published on

வேற்றுமையில் ஒற்றுமை

இந்திய மக்கள் பல்வேறு மொழிகள் பேசுகின்றனர். தமிழ்நாட்டில் தமிழ், ஆந்திராவில் தெலுங்கு, கேரளாவில் மலையாளம், கர்நாடகாவில் கன்னடம், வட இந்தியாவில் இந்தி என இந்தியா முழுவதும் ஏராளமான மொழிகள் பேசுகின்றனர்.

இந்தியாவில் இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம், பவுத்தம், சீக்கியம், பார்ஸி, சமணம் போன்ற பல சமயங்கள் உள்ளன. கோவில்கள், மசூதிகள், மடாலயங்களும் இருக்கின்றன.

இப்படி இந்தியாவில் உள்ள மக்களிடையே மதம், மொழி, இன அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் இருந்தாலும் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் உள்ளனர். இதுதான் இந்தியாவிற்கே உரிய தனிச்சிறப்பான வேற்றுமையில் ஒற்றுமை என்று அழைக்கப்படுகிறது.

ஆடை- உணவுப் பழக்கம்

இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் மக்கள் வெவ்வேறு விதமாக ஆடை அணிகின்றனர். பெண்கள், புடவை, சுடிதார், மிடி, சல்வார் கமீஸ் போன்றவற்றை அணிகின்றனர். ஆண்கள் வேட்டி, சட்டை, பேண்ட், குர்தா என்று அணிகின்றனர்.

அரிசியும், கோதுமையும் இந்தியர்களின் உணவு வகைகளில் முக்கிய இடம் பிடிக்கிறது. வட இந்திய மக்கள் கோதுமையையும், தென் இந்திய மக்கள் அரிசியையும் உணவாக உட்கொள்கின்றனர். கேழ்வரகு, சாமை, சோளம், பார்லி, கம்பு போன்ற பிற தானிய வகைகளும் பரவலாக விவசாயம் செய்யப்பட்டு உண்ணப்படுகிறது.

இசை

அனைவரும் கேட்டு மகிழக்கூடியதுதான் இசை. வட இந்தியாவில் இந்துஸ்தானி இசையும், தென்னிந்தியாவில் கர்நாடக இசையும் புகழ் பெற்றவை. மத்தளம், நாதஸ்வரம், வீணை போன்றவை புகழ்பெற்ற இசைக்கருவிகளாகும். கர்நாடக சங்கீதமும், பரத நாட்டியமும் தமிழ் மண்ணிற்கே உரியன.

நடனங்கள்

இந்தியாவில் பலவிதமான நடனங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பரத நாட்டியம், ஆந்திராவில் குச்சுப்புடி, கேரளாவில் கதகளி, குஜராத்தில் கோலாட்டம், ஒடிசாவில் ஒடிசி போன்ற நடனங்கள் புகழ் பெற்றவை.

கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகளுடன், டிஸ்கோ, வெஸ்டர்ன், கிளாசிக்கல் போன்ற மேற்கத்திய நடனங்களும் கலந்துவிட்டன.

கோவில்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள்

இந்தியாவில் முற்காலத்தில் மன்னர்கள் கோவில்கள், மடாலயங்களை கட்டியுள்ளனர். அவற்றில் கற்சிற்பங்களை வடித்துள்ளனர். தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், மாமல்லபுரம் போன்றவை சிறந்த கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

காசி, ராமேசுவரம், மதுரா, பிருந்தாவனம், அமிர்தசரஸ், பொற்கோயில், மதுரை, கன்னியாகுமரி, சமணக் கோவில்கள் முதலியன முக்கியமான கோவில் நகரங்களாகும், செங்கோட்டை, பத்தேபூர் சிக்ரி, விக்டோரியா மியூசியம், மகாபலிபுரம், செஞ்சிக்கோட்டை ஆகியவை முக்கியமான வரலாற்றுச் சின்னங்கள் உள்ள இடமாகும்.

தாஜ்மகால், புகழ்பெற்ற சமாதிகள், இந்தியா கேட், ஜாலியன் வாலாபாக் முதலியன குறிப்பிடத்தக்க நினைவுச் சின்னங்களாகும்.

இவை மட்டுமல்ல கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, நாடகக் கலை யாவும் தமிழர் வளர்த்த அழகுக் கலைகளே.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com