

இந்தியாவில் மொபைல் பிரபலமான போதும் சரி, அதற்கு பிறகும் சரி, பல வருடங்களுக்கு இந்த வகை சிம் கார்டுகளே புழக்கத்தில் இருந்தன. அதன் பிறகு அதன் அளவை மீண்டும் குறைத்தார்கள். மைக்ரோசிம் என்று பெயரிடப்பட்ட இந்த வகை சிம் கார்டுகள் 2003-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் பிரபலமாக வில்லை.
அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்து தான் இந்தியாவில் இவற்றை பயன்படுத்தும் மொபைல்கள் வரத் தொடங்கின. அதன் பின்னர் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்டது நானோ சிம். சிம் கார்டில் இருக்கும் பிளாஸ்டிக்கை தவிர்த்து சிப்பை மட்டும் வெட்டி எடுத்தால் என்ன கிடைக்குமோ அதுதான் நானோ சிம்.
பெரும்பாலும் அனைத்து ஸ்மார்ட் போன்களுமே இந்த நானோ சிம் கார்டை தான் பயன்படுத்துகின்றன. சொல்லப்போனால் நமது ஊர் மக்களுக்கு மினி சிம்களின் அளவை குறைப்பதில் விருப்பம் இல்லையென்றுதான் கூற வேண்டும். ஆனால், சிம்களின் அளவைக் குறைக்கும் போது மொபைல்களின் அந்த இடத்தை மிச்சமாக்கலாம் என்பதால் இந்த மாற்றம் மொபைல் நிறுவனங்களுக்கு அவசியமாக இருந்தது.
நீண்ட காலமாக வெவ்வேறு வடிவங்களில் பயன்பாட்டில் இருந்த சிம்கள் இனிமேல் காணாமல் போகப்போகின்றன. மொபைலில் தொடு திரை, கேமரா என பல்வேறு வசதிகள் படிப்படியாக கொண்டு வரப்பட்டாலும் அது முதலில் ஒரு தொடர்புக்கான சாதனம் என்பதால் சிம் கார்டுகளின் தேவை தவிர்க்க முடியாமல் இருந்து வந்தது.
ஆனால், தற்போது அந்த இடத்தைப் பிடிப்பதற்காக கிளம்பியிருக்கிறது இ-சிம் தொழில்நுட்பம். எம்பெட்டேட் சிம் சுருக்கமாக இ-சிம் எனப்படும். இவையும் கிட்டத்தட்ட நாம் இப்போது பயன்படுத்தும் சிம் கார்டின் வேலையை தான் பார்க்கிறது. ஆனால், இந்த தொழில்நுட்பம் முற்றிலும் வேறுபட்டது. இவை சர்க்யூட் போர்டுகளில் நிரந்தரமாக இணைக்கப்பட்டே பயன்பாட்டுக்கு வரும். வழக்கமான சிம் கார்டுகள் போல இல்லாமல் இந்த இ-சிம்களை தனியாக எடுத்து பயன்படுத்த முடியாது.
நெட்வொர்க் மற்றும் சிம் உரிமையாளரின் தகவல்களை செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் இதில் பதிவு செய்துகொள்ள முடியும். இதற்காக மெஷின் டூ மெஷின் தொழில்நுட்பம் பயன்படும். தற்போது பயன்பாட்டில் இருக்கும் சிம்களில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் ஒரு முறை தகவல்கள் பதியப்பட்டு விட்டால் அதனை அழித்துவிட்டு மற்றொரு முறை பயன்படுத்த முடியாது.
எடுத்துக்காட்டாக மொபைல் நம்பர் போர்டபிலிட்டியை எடுத்துக்கொண்டால், அதே நம்பரை வேறொரு நெட்டுக்குக்கு மாற்ற வேண்டும் என்றால் சிம் கார்டை தான் மாற்ற வேண்டியிருக்கும். ஆனால், இ-சிம்களில் அந்த சிக்கல் இருக்காது. பழைய தகவல்களை அழித்துவிட்டு புதிய தகவல்களைப் பதிந்து கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பம் பரவலாக பயன்பாட்டிற்கு வந்துவிடும். அதன் பிறகு மொபைல்களில் தற்போது நாம் பயன்படுத்தும் சிம் கார்டுகள் காணாமல் போகும்.