இரவு சாப்பிட்டவுடன் தூங்கும் பழக்கம் இருக்கிறதா? என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா?

சிறிய மாற்றங்கள் கூட இரவு தூக்கத்தையும், மறுநாள் உடல் சுறுசுறுப்பையும் மேம்படுத்தும்.
இரவு சாப்பிட்டவுடன் தூங்கும் பழக்கம் இருக்கிறதா? என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா?
Published on: 

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு உடனே படுக்கைக்குச் செல்வது பலருக்கும் வழக்கமாகிவிட்டது. ஆனால், உணவு சாப்பிட்ட உடனேயே தூங்குவது உடலுக்கு சில அசவுகரியங்களை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம், செரிமான அசவுகரியம் மற்றும் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இரவு உணவுக்கும் உறக்கத்துக்கும் இடையே போதிய இடைவெளி ஏன் அவசியம்? சாப்பிட்டவுடன் தூங்கினால் வேறு என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை பார்க்கலாம்.

செரிமானக் கோளாறு

சாப்பிட்டு முடித்ததும் உணவை ஜீரணமாக்கும் பணி நடைபெற தொடங்கிவிடும். அந்த நேரத்தில் தூங்க சென்றால் சிலருக்கு வயிறு உப்புசம், வயிற்று பாரம், வாயுத்தொல்லை. வயிற்று அசவுகரியம் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

நெஞ்செரிச்சல்

சாப்பிட்டதும் படுக்கும்போது வயிற்றில் உள்ள அமிலம் உணவுக்குழாயை நோக்கி மேலே வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்க செய்யும். அதன் காரணமாக நெஞ்செரிச்சல், புளிப்பு ஏப்பம், தொண்டையில் எரிச்சல் போன்ற பாதிப்புகள் உண்டாகலாம். அதிலும் காரமான உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை சாப்பிட்ட பிறகு இந்த பிரச்சினை அதிகரிக்கக்கூடும்.

உடல் எடை அதிகரிப்பு

சாப்பிட்டவுடன் உறங்குவதால் மட்டுமே உடல் எடை அதிகரிக்கும் என்று கூற முடியாது. அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடுவது, உடல் இயக்கம் குறைவாக இருப்பது, இரவு நேரத்தில் தொடர்ந்து அதிகமாக சாப்பிடுவது போன்ற பழக்கங்களும் தொடர்ந்தால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

ரத்த சர்க்கரை கட்டுப்பாடு

இரவு நேரத்தில் அதிகமாக உணவு உட்கொண்டு விட்டு எந்தவொரு உடல் செயல்பாட்டிலும் ஈடுபடாமல் இருப்பது ரத்த சர்க்கரை அளவை பாதிக்கக்கூடும். அதனை தவிர்க்க இரவு உணவை உட்கொண்ட பிறகு சிறிது நேரம் நடப்பது போன்ற மிதமான உடல் இயக்கம் கொண்ட செயல்பாடுகளில் ஈடுபடலாம். இது உணவுக்குப் பிந்தைய ரத்த சர்க்கரை உயர்வைக் கட்டுப்படுத்த உதவக்கூடும்.

தூக்கத்தின் தரம்

சாப்பிட்ட உடனேயே தூங்கினால் வயிறு நிறைந்த உணர்வு, நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம் ஏற்பட்டு தூக்கம் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக இரவில் அடிக்கடி விழிப்பது, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

எவ்வளவு இடைவெளி தேவை?

நெஞ்செரிச்சல், அசிடிட்டி பிரச்சினை கொண்டவர்களாக இருந்தால் இரவு உணவுக்கும், உறக்கத்துக்கும் இடையே 2 மணி முதல் 3 மணி நேரம் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடப்பதும் நன்றாக தூங்குவதற்கு உதவியாக இருக்கும். அடிக்கடி நெஞ்செரிச்சல், கடுமையான வயிற்றுவலி, தூக்கக் கோளாறு ஏற்பட்டால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமானது.

உணவின் அளவு முக்கியம்

சாப்பிட்டவுடன் தூங்குவதை மட்டும் தவிர்ப்பது போதாது. இரவில் அதிக அளவு உணவு சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது. சிறிய அளவில், சமச்சீரான இரவு உணவு எடுத்துக்கொள்வது உடலுக்கும், தூக்கத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.

கடுமையான உடற்பயிற்சி வேண்டாம்

இரவு உணவுக்குப் பிறகு சிறிது நேரம் மெதுவாக நடப்பது உதவியாக இருக்கலாம். ஆனால் சாப்பிட்ட உடனேயே கடுமையான உடற்பயிற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது.

தேநீர், காபி வேண்டாம்

இரவு உணவுடன் அல்லது அதற்குப் பிறகு அதிக அளவில் தேநீர், காபி அல்லது காஃபின் கொண்ட பானங்களை எடுத்துக்கொள்வது சிலரின் தூக்கத்தை பாதிக்கலாம். எனவே இரவு நேரத்தில் அவற்றை அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

இரவு உணவு சாப்பிடும் நேரமும், உறங்கும் நேரமும் உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவசரமாக சாப்பிட்டுவிட்டு உடனே படுக்கைக்குச் செல்வதை தவிர்த்து, உடலுக்கு உணவை செரிக்க சிறிது நேரம் கொடுப்பது நல்ல பழக்கமாகும். குறிப்பாக இரவில் அதிகமாக சாப்பிடுவது, கொழுப்பு மற்றும் காரமான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது போன்றவற்றை தவிர்ப்பது நெஞ்செரிச்சல் மற்றும் தூக்க அசவுகரியங்களை குறைக்க உதவும். சிறிய மாற்றங்கள் கூட இரவு தூக்கத்தையும், மறுநாள் உடல் சுறுசுறுப்பையும் மேம்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com