

நானும் ஆஸ்திரேலிய வீராங்கனை நிக்கோலா ஜாக்சனும், 4 வருடங்களுக்கு முன்பாகவே ஒரே பாலின காதல் வலையில் சிக்கிவிட்டோம். அது காதலா..? இல்லை நட்பா..? என்பதை தெளிவுப்படுத்தவே, எங்களுக்கு சில மாதங்கள் தேவைப்பட்டது. சமூக பார்வை, உறவினர்களின் கண்ணோட்டம், தோழிகளின் கேலி பேச்சுக்கள் போன்ற நடைமுறை சிக்கல்கள், எங்களது காதலின் ஆழத்தை, வெகுகாலம் அளந்து பார்த்தன.
இருப்பினும் எங்களது காதல் குறையவே இல்லை. அதனால் சமூக பார்வையை பற்றி சிந்திப்பதை நிறுத்திவிட்டு, நாங்கள் எங்களுக்காக வாழ ஆரம்பித்திருக்கிறோம். இதற்கான ஆரம்பம்தான் எங்களுக்குள் நடந்த ஒரே பாலின திருமணம் என்று தன்னுடைய முதல் பந்திலேயே விக்கெட்டை சாய்க்கிறார், நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹெய்லி ஜென்சன்.
26 வயதாகும் இவர், 23 வயதாகும் ஆஸ்திரேலிய வீராங்கனை நிகோலா ஹேன்காக்வை சமீபத்தில் திருமணம் முடித்து கொண்டார். ஒரே பாலின திருமணத்தை பல உலக நாடுகள் சட்டப்பூர்வமாக ஏற்று கொண்டிருக்கும் நிலையில், இவர்களது திருமணம் ஆஸ்திரேலியாவின் மூலோலாபா கடற்கரையில், நண்பர்கள் சூழ நடந்திருக்கிறது.
நான் நியூசிலாந்தை சேர்ந்தவள். நிகோலா ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். இருவேறு நாடுகளில் பிரிந்திருந்த எங்களை கிரிக்கெட் போட்டிகள்தான் ஒன்றிணைத்தன. நாங்கள் இருவரும் மெல்போர்ன் அணிக்காக விளையாடினோம். அந்த காலகட்டத்தில்தான் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. நிகோலா பந்துவீச்சாளர், நான் ஆல்-ரவுண்டர். இதனால் நாங்கள் பந்துவீசும் நுணுக்கத்தை பற்றி நிறைய பேசி இருக்கிறோம். சில சமயங்களில் பயிற்சி முடிந்த பிறகும், நாங்கள் மைதானத்தில் அமர்ந்து, மனம் விட்டு பேசிய அனுபவங்கள் நிறைய இருக்கிறது.
நாங்கள் இருவருமே பெண்கள் என்பதால், எங்களது நடவடிக்கை மற்ற வீராங்கனைகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. அதேசமயம் நான் ஆணாகவும், நிகோலா பெண்ணாகவும் இருந்திருந்தால், எங்களது நெருக்கத்தை வைத்து, காதலர்கள் என்ற முத்திரையை குத்தியிருப்பார்கள் என்று சிரிக்கும் ஜென்சன், இருவரும் காதலை வெளிப்படுத்திய தருணத்தை பற்றி கூறுகிறார்.
இன்றைய சூழலில் ஐ லவ் யூ என்ற வார்த்தைக்கு, பெரிய அளவில் தாக்கம் இருப்பதில்லை. ஏனெனில் நெருக்கமான வட்டத்திற்குள் இருக்கும் ஆண்களும், பெண்களும் ஐ லவ் யூ என்ற வார்த்தையை சர்வ-சாதாரணமாக பரிமாறிக்கொள்கிறார்கள். அதேசமயம் தோழிகள் வட்டத்திலும் ஐ லவ் யூ என்ற வார்த்தை செல்லாக்காசாகி விட்டது. இதை உணராமல் நான் நிகோலாவிடம் நான்கு, ஐந்து முறை ஐ லவ் யூ என்று கூறி காதலை வெளிபடுத்த, அவர் எந்தவித சலனமுமின்றி, என்னுடைய காதல் வெளிப்பாட்டை உணர்ந்து கொள்ளாமலே சென்றுவிட்டார்.
என்னுடைய காதல் நிராகரிக்கப்பட்ட வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், ஒரே பாலின காதலை நிகோலா விரும்பவில்லையோ? என்ற கேள்வியும் என் மனதில் எழுந்தது. உடனே நிகோலாவை எனக்கு ஏன் பிடிக்கிறது? என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினேன். முதல் சந்திப்பு, முதல் காதல் உணர்வு, முதல் பரிசு, முதல் ஊடல்... என எங்களது வசந்த கால நினைவுகளை புரட்டி பார்த்து, அவரை ஈர்க்கும் நோக்கில் அந்த புத்தகத்தை எழுதினேன்.
அதை ஒரு மாலை பொழுதில், கடற்கரை மணலில் அமர்ந்திருந்த நிகோலாவிடம் பரிசளித்தேன். அவர் புத்தகத்தை புரட்டி கூட பார்க்கவில்லை, உடனே ஒரு பசுல் (சிறு சிறு துண்டுகளை ஒன்றாக இணைக்கும் விளையாட்டு) அட்டையை என் கையில் கொடுத்தார். அதில் ஏதோ எழுதியிருந்ததை உணர்ந்ததால், அவசர அவசரமாக அந்த துண்டு அட்டைகளை ஒன்றாக இணைத்தேன். அது இதய வடிவில் முழுமைபெற்று, என்னை திருமணம் செய்து கொள்வாயா..? என்ற கேள்வியை என்னிடம் கேட்டது. காதல் வழியும் கண்களோடு நிகோலாவை பார்க்க அவர் காதல் மலர்ச்சியோடு என்னை கட்டியணைத்தார் என்று பரவசப்படும் ஜென்சன், ஒரே பாலின திருமணத்திலும் ஒழுக்க முறை இருக்கிறது என்கிறார்.
எங்களை போன்ற தம்பதிகளை, உலகம் தவறான பார்வையோடுதான் பார்க்கிறது. நாங்கள் ஒருபால் ஈர்ப்பாளர்கள் என்றாலும் எங்களுக்கும் கற்பு, ஒழுக்கம், குடும்பம்... போன்றவை இருக்கின்றன. நான் நிகோலாவிற்கு சொந்தமானவள். அவள் எனக்கு சொந்தமானவள். இதோடு எங்களது காதல் வட்டம் முற்று பெற்றுவிடும். நாங்கள் அதே பாலின ஈர்ப்பாளர்கள் என்பதற்காக, நிகோலாவை தாண்டி எனக்கும், என்னை தாண்டி நிகோலாவிற்கும் மற்ற பெண்களோடு காதல் ஏற்பட வாய்ப்பில்லை. அப்படி காதல் மலர்ந்தால், அது காதலும் இல்லை என்று தடாலடியாக முடிக்கிறார், ஜென்சன்.
காதல், குடும்பம், ஓரின ஈர்ப்பாளர்களை பற்றி பல விஷயங்களை பகிர்ந்துள்ள ஜென்சனுக்கு, கிரிக்கெட் உலக பிரபலங்கள் பலரும் திருமண வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.