செயற்கைக் காலுடன் 104 நாட்களில் 104 மாரத்தான் போட்டியில் ஓடி உலக சாதனை! வியப்பூட்டும் மாற்றுத்திறனாளி பெண்மணி

26 வயதில் அவருடைய இடது காலில் பாதி வரை அகற்றப்பட்டுவிட்டது.பின் உலோகத்திலான செயற்கை கால் பொருத்தப்பட்டது.
செயற்கைக் காலுடன் 104 நாட்களில் 104 மாரத்தான் போட்டியில் ஓடி உலக சாதனை! வியப்பூட்டும் மாற்றுத்திறனாளி பெண்மணி
Published on

வாஷிங்டன்,

ஜாக்கி ஹண்ட் ப்ரோர்ஸ்மா என்ற மாற்றுத்திறனாளி பெண்மணி, செயற்கைக் காலுடன் 104 நாட்களில் 104 மாரத்தான் ஓட்டப்போட்டிகளில் ஓடி சாதனை படைத்திருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவரான ஜாக்கி ஹண்ட், அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். 2002 ஆம் ஆண்டில், நெதர்லாந்தில் உள்ள மருத்துவர்கள் அவருக்கு எவிங்கின் சர்கோமா என்ற அரிய வகை எலும்பு புற்றுநோயைக் கண்டறிந்தனர். 26 வயதில் புற்றுநோய் காரணமாக அவருடைய இடது காலில் பாதி வரை அகற்றப்பட்டுவிட்டது. அதன்பின் உலோகத்திலான செயற்கை கால் பொருத்தப்பட்டது.

இந்த நிலையில், அவர் இந்த ஆண்டு ஜனவரியில் தினமும் ஒரு மாரத்தான் தொலைவை (42.2 கி.மீ) ஓட ஆரம்பித்தார். 100 நாட்களில் 100 மாரத்தான்களை ஓடுவதே ஜாக்கி ஹண்ட்டின் இலக்காக இருந்தது. 

2020ஆம் ஆண்டு அலிசா அமோஸ் கிளார்க் என்பவர் 95 மாரத்தான்களை ஓடி சாதனை படைத்திருந்தார். கடந்த மாதம் மாற்றுத்திறனாளியான கேட் ஜேடன், 101 நாட்களில் 101 மராத்தான்கள் ஓடி, அந்த சாதனையை முறியடித்தார். 

அதனால், ஜாக்கி ஹண்ட் 102 மாரத்தான்கள் ஓட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அரிசோனாவில் 104 நாட்களில் 104 மாரத்தான்களை ஓடி, சாதனை படைத்துவிட்டார். 

மேலும், அதிகாரப்பூர்வமற்ற வகையில் இது உலக சாதனையாகக் கருதப்படுகிறது. கின்னஸ் நிறுவனம் ஜாக்கி ஹண்ட்டின் சாதனையைச் சரிபார்ப்பதற்குச் சில வாரங்கள் தேவைப்படுவதால், அதற்குப் பிறகு கின்னஸில் அதிகாரப்பூர்வமாக இடம்பெறுவார் என்று அறிவித்துள்ளது.

2 குழந்தைகளுக்கு தாயான ஜாக்கி ஹண்ட் இதுகுறித்து கூறுகையில்:- 

என் வாழ்க்கை திடீரென ரோலர் கோஸ்டர் போல மாறிவிட்டது. புற்றுநோய் உறுதிசெய்யப்பட்ட இரண்டாவது வாரம் என் கால் அகற்றப்பட்டது. உயிரா, காலா என்றால் உயிர்தானே முக்கியம்! 

இடதுகாலை இழந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டாலும் என்னால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ரொம்பவும் கோபப்பட்டேன், கால்கள் வெளியே தெரியாமலிருக்க நீண்ட ட்ரவுசர்களை அணிந்து கொண்டேன். இரண்டு ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு என் மனம் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தது. செயற்கைக் கால் மூலம் வெளியே செல்லும்போது என்னை யாரும் உற்றுக் கவனிக்கவில்லை என்பது ஆறுதலைத் தந்தது. 

என் கணவர் நீண்ட தொலைவு ஓடக்கூடியவர் என்பதால், அவரை உற்சாகப்படுத்துவதில் என் கவனத்தைத் திருப்பினேன். ஒரு நாள் நானும் ஓடுவேன் என்று நினைக்கவே இல்லை. 2016ஆம் ஆண்டு நீண்ட தொலைவு ஓடக்கூடிய செயற்கைக்கால் பொருத்திக்கொண்டேன். எனக்கும் ஓடுவதற்கான ஆர்வம் வந்தது. 

10 கி.மீ. தொலைவு ஓடுவதற்காகப் பதிவு செய்தேன். அந்த ஓட்டம் கொடுத்த நம்பிக்கையால், அரை மரத்தானில் பங்கேற்றேன். அதற்குப் பிறகு என் கால் குறித்து நான் கவலைப்படவே இல்லை. 

நானும் மற்றவர்களைப் போலத்தான், எதையும் இழந்துவிடவில்லை என்கிற எண்ணம் வந்தபோது, என்னை நானே ஒவ்வொன்றையும் செய்யச் சொல்லி உற்சாகப்படுத்திக் கொண்டேன். அப்படித்தான் தினம் ஒரு மாரத்தான் ஓடும் நிலைக்கு வந்துசேர்ந்தேன் என்றார் ஜாக்கி ஹண்ட்.

சமூக ஊடகங்களில் அவர் ஓட்டப்பந்தய வீடியோக்களை ஆவணப்படுத்துவதன் மூலம், அவர் ஆம்பூட்டீ பிளேட் ரன்னர்ஸ்(செயற்கைக் கால் ஓட்டம்) போட்டியாளர்களுக்காக 88,000 டாலர் நிதி திரட்டியுள்ளார். மேலும், இது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.

அடுத்ததாக இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறும் மோவாப், உட்டாவில் 240 மைல் பந்தயம் அவருடைய இலக்காக உள்ளது. அவர் தொடர்ந்து செல்வதில் உறுதியாக இருக்கிறார்....! வாழ்க்கை என்பதே ஒரு தொடர்கதை தானே... 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com