ஜான்வி கபூரை கைதூக்கி விடுமா தென்னிந்திய சினிமா

கொரட்டால சிவாவின் இயக்கத்தில் மீண்டும் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க இருப்பதால் அந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதோடு இந்தப் படத்தில் ஜான்வியும் இணைந்திருப்பது, தெலுங்கு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று கருதப்படுகிறது.
ஜான்வி கபூரை கைதூக்கி விடுமா தென்னிந்திய சினிமா
Published on

போனிகபூர்- ஸ்ரீதேவி தம்பதியரின் மூத்த மகள் ஜான்வி, சினிமாவுக்கு வருவரா? மாட்டாரா? என்று ஆரம்பத்தில் பலரும் தங்கள் யூகத்தின் அடிப்படையில் பல செய்திகளை வெளியிட்டு வந்தனர். ஜான்விக்கும் சினிமாவில் ஆர்வம் இருந்த காரணத்தால், நடிக்க வந்தார். ஆனால் அவரது முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே ஸ்ரீதேவி இறந்து விட்டார்.

ஜான்வியின் முதல் படமான 'தடக்' எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. சுமாரான படமாகவே அமைந்தது. இருந்தாலும் அவரை முதல் படம் வெளியானதில் இருந்தே அவரை தென்னிந்திய படங் களில் நடிக்க வைக்க பெரும் முயற்சி நடைபெற்று வந்தது. ஆனால் அதற்கு அவர் அசைந்து கொடுக்கவில்லை. பாலிவுட்டில் நிலையாக கால் ஊன்றி, ஒரு சில வெற்றிப்படங்களை கொடுத்த பிறகு, தென்னிந்திய சினிமா பற்றி யோசிக்கலாம் என்று ஜான்வி நினைத்திருக்கலாம்.

இருப்பினும் நாம் நினைத்தபடியே அனைத்தும் நடைபெற காலம் அவ்வளவு எளிதாக அனுமதிப்பதில்லை. 'குஞ்சன் சக்சேனா', 'ரூகி', 'குட்லக் ஜெர்ரி', 'மிலி' என்று வரிசையாக படங்கள் நடித்தும், அவருக்கு எந்த படமும் சுமாரான வெற்றி என்ற நிலையைக் கூட கொடுக்கவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். தற்போது பாலிவுட்டில் 'பவாய்', 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் மகி' ஆகிய இரண்டு படங்கள் கைவசம் இருந்தாலும், இன்னும் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுக்க முடியாததால், அவருக்கு வரும் படங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்த நிலையில் தன்னுடைய தாயைப் போல தென்னிந்திய சினிமாவில் நுழைந்து மிகப்பெரிய வெற்றியை பெறலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்த ஜான்விக்கு, 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் மூலமாக உலக அளவில் பிரபலம் அடைந்த ஜூனியர் என்.டி.ஆருடன் நடிக்க வாய்ப்பு வந்து கதவை தட்டியிருக்கிறது.

பல வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் ஜான்வியை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்றும் நடக்காத நிலையில், தெலுங்கு சினிமாவில் எடுக்கப்பட்ட முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது.

'ஆர்.ஆர்.ஆர்.' படம், ஜூனியர் என்.டி.ஆரின் 29-வது படமாகும். இதையடுத்து தனது 30-வது படத்தை இயக்கும் வாய்ப்பை அவர், தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான கொரட்டால சிவாவுக்கு கொடுத்திருக்கிறார். இந்த இயக்குனருடன் இணைந்து இதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் 'ஜனதா கேரேஜ்' என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை ஜூனியர் என்.டி.ஆர். கொடுத்திருந்தார். சுமார் ரூ.40 கோடியில் எடுக்கப்பட்ட அந்தப் படம் ரூ.140 கோடி வரை வசூலித்திருந்தது.

இதையடுத்து கொரட்டால சிவாவின் இயக்கத்தில் மீண்டும் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க இருப்பதால் அந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதோடு இந்தப் படத்தில் ஜான்வியும் இணைந்திருப்பது, தெலுங்கு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று கருதப்படுகிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக ஜான்விக்கு பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டிருக்கிறதாம்.

பொதுவாக தெலுங்கு சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகளுக்கு அதிகபட்சமாக ரூ.3 கோடி வரைதான் கொடுத்து வந்தார்கள். ஆனால் தற்போது 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் மற்றொரு நாயகனான ராம்சரண் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கும் 'ஆர்.சி 15' என்ற படத்தில் நாயகியாக நடிக்கும் கியாரா அத்வானிக்கு ரூ.4 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆனால் ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் நடிக்க இருக்கும் ஜான்விக்கு, ரூ.5 கோடியை சம்பளமாக கொடுக்க முடிவு செய்திருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் பரபரக்கின்றன.

எவ்வளவு தொகை கொடுத்து நடிக்க வைத்தால் என்ன? ஜான்வியை தென்னிந்திய சினிமா கைதூக்கி விடுமா? கைவிடுமா? என்பதை படம் வெளிவரும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com