

கடந்த சில ஆண்டுகளாக மென்மையான, மெல்லிய, அதிக அலங்காரமில்லாத நகைகள் ஆதிக்கம் செலுத்தின. மினிமலிசம் (Minimalism) என்றழைக்கப்படும் இந்த எளிமையான பாணியில், சிறிய சங்கிலி, மெல்லிய வளையல், குட்டிக் காதணி போன்றவற்றுக்கு அதிக வரவேற்பு இருந்தது.
ஆனால் 2026-ம் ஆண்டில் நகைகளின் வடிவமைப்பானது பாரம்பரிய கலைநயமும், நவீன நாகரிகமும் கலந்த மாறுபட்ட பாணிகளுடன் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நகை அலங்காரத்தில் கம்பீரம், கலைநயம், வண்ணம், தனித்துவம் ஆகியவை முன்னிலை பெறுகின்றன. மேக்ஸிமலிசம் (Maximalism) என்று அழைக்கப்படும் பிரமாண்டப் பாணியும், அணிபவரின் தனிப்பட்ட அடையாளத்தை வெளிப்படுத்தும் வடிவமைப்புகளும் கவனம் பெறுகின்றன.
2026-ன் முக்கியமான நகை டிசைன்களில் ஒன்று பிரமாண்ட வடிவமைப்புகள். இனி நகை என்பது ஆடையுடன் அமைதியாகக் கலந்து போக வேண்டிய அவசியமில்லை. அணிந்திருக்கும் நகையே பார்வையை ஈர்க்க வேண்டும் என்பதுதான் இந்தப் புதிய பாணியின் சிறப்பு.
பெரிய அளவிலான டாலர்கள் (Oversized Pendants) குறிப்பாக எளிமையான ஆடைகளுடன் அணியும்போது மிகவும் கம்பீரமான தோற்றத்தை உருவாக்குகின்றன. கழுத்தைச் சுற்றி பல நகைகளை அணிவதற்குப் பதிலாக, ஒரே ஒரு பெரிய டாலர் கொண்ட நகையை அணிந்து அதையே முக்கிய அலங்காரமாக மாற்றலாம்.
அதேபோல், சங்கி பேங்கிள்ஸ் (Chunky Bangles) எனப்படும் தடிமனான வளையல்களும் கைகளுக்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கின்றன. மெல்லிய வளையல்களை அடுக்கடுக்காக அணியும் பாணிக்கு இணையாக, ஒரே ஒரு தடிமனான வளையலையும் அணிந்து தனித்துவமான தோற்றத்தைப் பெறலாம்.
காதணிகளிலும் இந்த ஆண்டு 'சிறியதுதான் அழகு' என்ற விதி சற்று மாறுகிறது. காதுகளில் இருந்து தோள் வரை தொங்கும் நீண்ட காதணிகள் (Shoulder-Grazing Earrings) கவனத்தை ஈர்க்கும் முக்கிய அணிகலன்களாக மாறுகின்றன.
நீளமான செயின் வடிவங்கள், தொங்கும் உலோக வடிவங்கள், கற்கள் பதிக்கப்பட்ட பெரிய காதணிகள் போன்றவை முகத்தின் தோற்றத்தையே மாற்றக்கூடியவை. இத்தகைய காதணிகளை அணியும்போது கழுத்தில் அதிகமான நகைகளைத் தவிர்த்து, காதணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அழகான சமநிலையை உருவாக்கும்.
ஸ்கல்ப்ச்சுரல் கோல்டு (Sculptural Gold) எனப்படும் இந்தப் பாணியில், தங்கம் சிற்பம் போல வடிவமைக்கப்படுகிறது. உருகிய உலோகம் உறைந்தது போன்ற இயற்கையான வளைவுகள், சீரற்ற மேடு பள்ளங்கள், மென்மையான வளைந்த கோடுகள் போன்றவை நகைகளில் இடம்பெறுகின்றன.
இதனால் ஒரு காதணி அல்லது மோதிரம் வெறும் அணிகலனாக இல்லாமல், உடலில் அணியும் சிறிய கலைப்படைப்பைப் போலத் தோற்றமளிக்கிறது. கலைநயத்தை விரும்புபவர்களுக்கு இந்தப் பாணி தனித்துவமான தேர்வாக இருக்கும்.
2026-ல் வண்ணமயமான ரத்தினக் கற்கள் (Vibrant Gemstones) நகை வடிவமைப்பில் அதிக கவனம் பெறுகின்றன. குறிப்பாக சஃபையர் (Sapphire) எனப்படும் நீலக்கற்கள் பல்வேறு நகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நீல நிற கற்களிலும் பல்வேறு நிற கற்கள் உள்ளன. அடர் நீலம் முதல் மென்மையான நீலம் வரை பல்வேறு வண்ணத் தோற்றங்கள் நகைகளுக்கு புதிய அழகை வழங்குகின்றன.
நீலத்தைத் தாண்டி பச்சை, சிவப்பு, மஞ்சள் போன்ற வண்ண ரத்தினங்களும் தங்கம் மற்றும் பிற உலோகங்களுடன் இணைக்கப்படுகின்றன. இதனால் ஒரே நகையில் பல வண்ணங்கள் இடம்பெறும் காட்சியமைப்பு உருவாகிறது.
முத்து என்றாலே அழகாக உருண்டையான, ஒரே மாதிரியான வடிவம் தான் நினைவுக்கு வரும். ஆனால், 2026-ல் இயற்கையான சீரற்ற வடிவத்திற்கும் தனி மதிப்பு கிடைக்கிறது.
பாரோக் முத்துக்கள் (Baroque Pearls) எனப்படும் ஒழுங்கற்ற வடிவம் கொண்ட முத்துக்கள் தற்போது நவீன நகை வடிவமைப்பில் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு முத்தும் தனித்துவமான வடிவத்தைக் கொண்டிருப்பதே இவற்றின் சிறப்பு. இந்த முத்துக்களை தங்கம் அல்லது நவீன உலோகங்களுடன் இணைக்கும்போது, பாரம்பரியமும் நவீனத்துவமும் கலந்த அழகான தோற்றம் கிடைக்கிறது.
பாரோக் முத்துக்களின் சுவாரஸ்யம் அவற்றின் சீரற்ற வடிவத்தில்தான் இருக்கிறது. ஒரு முத்து மற்றொரு முத்தைப் போல இல்லாமல் இருப்பதால், அவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் ஒவ்வொரு நகையும் தனித்துவமானதாக அமைகிறது.
நட்சத்திரங்கள், சந்திரன், சூரியன், ராசிச் சின்னங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட வடிவமைப்புகளுக்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. செலஸ்டியல் மோட்டிஃப்ஸ் (Celestial Motifs) எனப்படும் இந்த வடிவங்களில் அந்த தோற்றம் நகைகளில் பிரதிபலிக்கிறது.
ராசிச் சின்னம் கொண்ட டாலர், நட்சத்திர வடிவ காதணி, சந்திர வடிவ மோதிரம் போன்றவை தனிப்பட்ட அடையாளத்தை வெளிப்படுத்தும் நகைகளாக அமைகின்றன. ஒருவருடைய நம்பிக்கையுடன் தொடர்புடைய சின்னத்தை அணிவது அவருக்கு அந்த நகையுடன் ஒரு உணர்வுபூர்வமான தொடர்பையும் ஏற்படுத்தலாம்.
நகைகளில் வெளிப்படையாகத் தெரியாத ஒரு தனிப்பட்ட அர்த்தத்தைப் பதிப்பதும் புதிய சுவாரஸ்யமான போக்காக உள்ளது. சீக்ரெட் சிம்பல்ஸ் (Secret Symbols) எனப்படும் இந்தக் கருத்தில், நகையை அணிபவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு நினைவு அல்லது அர்த்தம் அதில் மறைந்திருக்கலாம்.
உதாரணமாக, ஒரு முக்கியமான தேதியைக் குறிக்கும் எண், குடும்ப உறுப்பினரின் முதலெழுத்து அல்லது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வை நினைவுபடுத்தும் சிறிய சின்னம் போன்றவை நகையில் இடம்பெறலாம்.
பிரமாண்ட நகைகளுடன், லேயரிங் (Layering) எனப்படும் அடுக்கடுக்காக நகைகளை அணியும் பாணியும் தொடர்ந்து கவனம் பெறுகிறது. வெவ்வேறு நீளங்களில் உள்ள சங்கிலிகளை ஒன்றாக அணிவது, பல மோதிரங்களை வெவ்வேறு விரல்களில் அணிவது, பல வளையல்களை இணைத்து அணிவது போன்றவை தனித்துவமான தோற்றத்தை உருவாக்குகின்றன.
ஆனால், பெரிய நகைகளை அடுக்கடுக்காக அணியும்போது ஆடை மற்றும் நகைகளுக்கு இடையே சமநிலை இருக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பிரமாண்டமாக்குவதைவிட, ஒரு குறிப்பிட்ட நகையை மையமாக வைத்து மற்ற நகைகளை அதற்கு ஏற்றவாறு தேர்வு செய்வது தோற்றத்தை அழகாக வைத்திருக்கும்.