அம்மாவின் ஆசையை நிறைவேற்ற நினைக்கும் 'ஜான்வி'

‘நீ கவுரி ஷிண்டேவின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை’ என்று அம்மா ஸ்ரீதேவி என்னிடம் தெரிவித்திருந்தார் என ‘ஜான்வி’ கூறினார்.
அம்மாவின் ஆசையை நிறைவேற்ற நினைக்கும் 'ஜான்வி'
Published on

1960-களில் குழந்தை நட்சத்திரமாகவும், 1970 முதல் 1990-களின் காலகட்டத்தில் கதாநாயகியாகவும், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் கொடிகட்டிப் பறந்தவர், ஸ்ரீதேவி. 1997 வரை கதாநாயகியாக நடித்த அவர், 2012-ம் ஆண்டு மீண்டும், கதையின் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். 2012-ம் ஆண்டு வெளியான 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரைப்படம், அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு, வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் ஒரு பெண், ஒரு கட்டத்தில் தன்னுடைய தனித்தன்மையை மீட்டெடுக்கும் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். பல இல்லத்தரசிகளுக்கு, உத்வேகம் அளிக்கும் கதாபாத்திரமாக இது அமைந்திருந்தது. இந்தப் படத்தில் அஜித்குமார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை இயக்கியவர் கவுரி ஷிண்டே.

படம் வெளியாகி 10 ஆண்டுகளைக் கடந்த நிலையில், அந்தப் படம் பற்றி ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் "இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தை என்னால் மறக்க முடியாது. அந்தப் படம் நடிக்கும் போது, அம்மா எவ்வளவு மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருந்தார் என்பதை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். பின்னாளில் ஒரு முறை 'நீ கவுரி ஷிண்டேவின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை' என்று அம்மா என்னிடம் தெரிவித்திருந்தார். கவுரி ஷிண்டேவும் 'நாம் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவோம்' என்று உறுதியளித்துள்ளார். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com